பூ மழை

in கவிதை

கடற்காற்று அதகளம் பண்ணிய
மொட்டை மாடியில் நின்று ஜாலியாக
சிகரெட் ஊதிக்கொண்டிருந்தபோது
பூமழை பெய்யத் தொடங்கியது

ஐம்பது காசு நாணய அளவில்
வாசமிகு மஞ்சள் பூக்கள்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
தண்ணீர் மழை போல் பெய்து
பார்வையை நிரப்பின

ஓசையின்றிப் பெய்த மலர்கள்
சிகரெட்டை அணைத்தன
முழங்கால் வரை அவற்றில்
புதைந்திருந்தேன்

அடுத்து வந்தது மண் வாசனை
இது சரியாகப் படவில்லை
ஒரு பூகம்பம் ஏற்படும்போது
முதலில் உதிர்பவை பூக்கள்தானாம்
பிறகுதான் பறவைகள் பறக்குமாம்
கடைசி நிலநடுக்கம் நினைவில்லை
நடுங்கியதா என்று நிச்சயமில்லை
ஆனால் நாளேடுகளில் விரிவாகப்
புள்ளிவிவரம் கொடுத்திருப்பான்
நான் நம்புகிறேன்

நம் தலைக்கு மேல் உள்ள ஓர் ஊரில்
ஒரு நிலம் நடுங்கப்போகிறது
எந்த ஊர் என வரைபடத்தில் பார்க்கலாம்
அடுக்கு மாடிக் கட்டிடங்களிலிருந்து
மக்கள் வெளியே ஓடி வந்து
வேடிக்கை பார்ப்பார்கள்
உற்றார் உறவினரை செல்பேசியில்
அழைத்து அறிவிப்பார்கள் பெண்கள்
இளசுகள் கிடைத்த வாய்ப்பில்
பிடித்த இளசுகளிடம் சென்று பேசும்
நடுத்தரங்கள் பரபரப்பாகத் தம்மிடையே பேசி
திடீர் விஞ்ஞானத்தை வளர்க்கும்
ரிக்டர் அளவுகோலைப் பொறுத்து
அவர்களது வீடுகள்
அவர்கள் தலையிலேயே விழக்கூடும்
அவர்கள் தலையில் விழுந்தால்
அடுத்தது நம் தலைதான், கியாரண்டி
அவர்கள் மண்ணில் நாம் புதைவோம்
அவர்களின் இடிபாடு நம்முடையதாகும்

தலையைக் குனிந்து இன்னொரு
சிகரெட்டைப் பற்றவைக்கிறேன்
பீடி போல் ஃபில்டரைப் பிடித்துப்
பூக்களிடமிருந்து அதைப் பாதுகாக்கிறேன்
மூன்றாம் மாடிக்கு மேல் இருக்கும்
மொட்டை மாடியிலிருந்து பார்க்கிறேன்
பூக்களின் ஆற்றில் மிதக்கும் குடைகள்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar