முடிதிருத்தக் கிழமைகள்

in கவிதை

சலூனில் இன்று திங்கட்கிழமை
முடிதிருத்தலாம் எனில்
ஆபீஸ் போகும் கூட்டம் வந்து
அடைத்துக்கொள்ளும் முழுவதும்
நாளை பிரதி செவ்வாய்க்கிழமை
முடிதிருத்த வழியில்லை
புதன்கிழமை மங்கலம்
ஓரிருவர் குறையலாம்
ஆனால் செவ்வாயன்று
தவற விட்டோர்
புதனில் அலை மோதுவர்
வியாழன்தான் பொருத்த நாள்
என்று தோற்றம் கொடுத்தாலும்
சாமிக்கிழமை வெள்ளியன்று
முடியை வெட்டிக்கொள்வதா என
வியாழன் கூட்டம் சேரலாம்
வெள்ளிக்கிழமை ஆள் குறைவு
அன்று வெட்டப் போகலாம்
என்று மனப்பால் காய்ச்சினால்
எதிலும் சேராக் கூட்டமொன்று
கடையை வந்து நிரப்பிடும்
சனி-ஞாயிறு அசாத்தியம்
மணிக்கணக்குக் காத்திருப்பை
எல்லோரும் தவிர்ப்பார்கள்
என்று நம்பிப் போனாலோ
விடுமுறையின் அரிய வாய்ப்பில்
மொத்த ஊரும் அங்குதான்
சரி, திங்களன்று போகலாம்
என்று முடிவு செய்திடின்
கடைசி வரி சொல்லிற்று
இன்று திங்கட்கிழமையாம்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar