ஒரு தலையணை, சில போர்வைகள்

in சிறுகதை

(ஓர் இன்ஸ்பெக்டர் குமார் மர்மக் கதை)

வசதியானவர்கள் வாழும் பகுதியில் இருந்த வீடு அது. வாசலில் தடயவியல் நிபுணர் சேகரனும் போலீஸ் புகைப்படக்காரர் குலோத்துங்கனும் பேசிக்கொண்டு நின்றிருந்தார்கள்.

“எவ்ளோ நேரம் இன்ஸ்பெட்ரே! எங்களுக்குல்லாம் வேற கேஸ் இல்லையா?” என்றார் சேகரன்.

“சும்மா இருய்யா!”

கான்ஸ்டபிள் குணவதி வீட்டுக்குள்ளிருந்து வந்தாள். வழக்கை விளக்கினாள்:

“செத்தவங்க பேரு பாக்கியஸ்ரீ சார். முப்பத்தெட்டு வயசு. இதே தெருல இருக்குற ஒரு ப்ரைவேட் ஸ்கூல்ல டீச்சரா இருக்காங்க. ஹஸ்பண்ட் சேப்பாக்கத்துல ஹார்டுவேர் கடை வெச்சிருக்காரு. பொண்ணுதான் பாடியக் கண்டுபுடிச்சிருக்கு. அப்பா வெளிய தூங்கிட்ருந்திருக்காரு. வாசல் கதவு, பெட்ரூம் கதவு ரெண்டையும் நெம்பித் தெறந்திருக்காங்க. அதே மாதிரி பீரோ கதவு, லாக்கர். அக்கம்பக்கத்துல யாரும் எதுவும் பாக்கலன்றாங்க.”

“ஏதாவது திருடுபோச்சா?”

“பாடில இருந்த நகை எல்லாம் எடுத்திருக்காங்க. பீரோலேந்து ஒரு ஒட்டியாணம், ரெண்டு செட் தோடு, ஒரு வைர மூக்குத்தி, இதெல்லாம் காணலன்னு ஹஸ்பண்ட் சொல்றாரு.”

சேகரன் தொடர்ந்தார்: “கதவுகள்ல, படுக்கைல, பீரோல ஃபிங்கர் ப்ரின்ட் இல்ல. பாடில கண்ணு செவந்திருக்கு. மூச்சுத் திணறி செத்துப்போயிருக்காங்க. கொலைதான். போராடுன அடையாளங்கள், கட்டிப்போட்டதுக்கு அடையாளங்கள் இல்ல. எடுத்துட்டுப் போய் மெடிக்கல் எக்சாமினேஷன், போஸ்ட் மார்ட்டம் பண்ணா சில விஷயங்கள் க்ளியராகும்” என்றார் சேகரன்.

“ஃபோட்டோ எடுத்தாச்சுல்ல?”

“எடுத்தாச்சு சார்” என்றார் குலோத்துங்கன்.

“உள்ள போவோம்” என்றார் குமார்.

* * *

மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடு அது. பெரிய கூடத்தில் ஒரு சோபாவில் மணிகண்டனும் ஆண், பெண் என இரண்டு பதின்வயதுக் குழந்தைகளும் அப்பாவுடன் ஒட்டினாற்போல் அமர்ந்திருந்தார்கள். மணிகண்டன் குமாரைப் பார்த்து நிமிர்ந்து உட்கார்ந்தார். இரவை அழுதே கழித்ததைக் காட்டின அவர் கண்கள்.

குமார் காலியாக விடப்பட்டிருந்த சோபா நாற்காலியில் அமர்ந்து மணிகண்டனின் கைகளைப் பிடித்துக்கொண்டார்.

“உங்க வலியை நான் பகிர்ந்துக்குறேன்” என்றார் குமார்.

மணிகண்டன் வெடித்தார். குமாரின் கைகளை விடாமல் அடக்க முடியாமல் குலுங்கி அழுதார். “முடியாது சார்… முடியாது சார்…” என்றார். குழந்தைகள் முன்பே அழுது முடித்துவிட்டது போல் தரையை வெறித்தார்கள். மணிகண்டன் கைகளை விடுவித்துக்கொண்டார்.

“உங்க குழந்தைகளுக்காக நீங்க ரிக்கவர் ஆவீங்க சார்” என்றார் குமார்.

மணிகண்டன் கைகளை விரித்தார்.

“உங்க பசங்க என்ன படிக்கிறாங்க?”

மணிகண்டன் கண்களைத் துடைத்துக்கொண்டு, “இது லாவண்யா. ப்ளஸ் ஒன் படிக்கிறா, சிபிஎஸ்சி, எம்எஸ்சிஓ ஸ்கூல். இவன் குணா. எய்ட்த்து படிக்கிறான். அதே ஸ்கூல்.”

“ஓ.கே. உங்க வீட்டுல ரெண்டு கதவுகளை ஃபோர்ஸ் பண்ணித் தெறந்திருக்காங்க. உங்க யாருக்கும் சின்ன சத்தம்கூட கேக்கலையா?”

மூவரும் தலையசைத்து மறுத்தார்கள்.

“ரைட். உங்க மனைவிய யார் கொன்னுருப்பாங்க?”

“தெரிலியே சார்!”

“உங்களுக்குத் தெரிஞ்சு யாராவது எதிரிங்க? ஸ்டாக்கிங் பண்ற ஆளுங்க, ஃபோன் மிரட்டல்கள் ஏதாவது?”

“இல்லவேயில்ல.”

“உங்க குழந்தைங்க ரெண்டு பேருக்கும் தனித்தனி பெட்ரூம் குடுத்துருக்கீங்க.”

“ஆமா சார்.”

“நீங்களும் உங்க மனைவியும் தெனமும் ஒரே பெட்ரூம்ல படுப்பீங்க, இல்லையா?”

மணிகண்டன் முதலில் தயங்கி, “ஆமா, அது எங்க ரூம்” என்றார்.

“நேத்து ஏன் ஹால்ல படுத்தீங்க? மனைவியோட சண்டையா?”

மணிகண்டன் திகைத்தார். “சண்டைன்னு சொல்ல முடியாது. ஒரு சின்ன… கருத்து வேறுபாடு.”

“சொல்லுங்க.”

“அது அவ்ளோ முக்கியமில்ல சார்.”

“உங்க கேஸை நீங்களே ஹாண்டில் பண்ண முடியாது சார். அதுக்குத்தான் போலீஸ் இருக்கு. அதனால எது முக்கியம், எது முக்கியமில்லன்னு நாங்கதான் முடிவு பண்ணுவோம்.”

“தே ஆர் த மோஸ்ட் ஐடியல் கப்புள் எவர்” என்றாள் லாவண்யா. மணிகண்டன் ‘சும்மா இரு’ என்பது போல் அவளிடம் தலையாட்டினார்.

“உங்களுக்கு சொத்து ஏதாவது இருக்கா?”

“எதுவும் இல்ல சார்.”

“வீடு, நிலம், எதுவும் இல்லையா?”

மணிகண்டன் விரக்தியுடன் புன்னகைத்துத் தலையசைத்தார்.

“இன்ஷுரன்ஸ், முதலீடுகள்?”

“அவ பேர்ல, கொழந்தைங்க பேர்ல இன்ஷுரன்ஸ் இருக்கு. எனக்கு என் கடைதான் முதலீடு. ஹார்டுவேர் கடை.”

“பிசினஸ் நல்லாப் போகுதா?”

“சேவிங்சுக்கு ஆகாது, ஆனா ரெண்டு சம்பளம் இருக்குறதால அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியுது.”

“நகைகள் காணாம போயிருக்கு, இல்லையா?”

“ஆமா சார்.”

“வீட்ல சாதாரண பீரோல ஏன் இவ்ளோ நகைகள் வெச்சிருக்கீங்க? ஒட்டியாணம், வைர மூக்குத்தி-ன்னு…”

“எல்லாம் எங்கம்மாவோடது சார். அவங்களோட அம்மா – எங்க பாட்டி – குடுத்தது. பழைய நகை. இது சேஃப் ஏரியாதான் சார்.”

குமார் எழுந்தார். “வாங்க, பெட்ரூமை இன்னொரு முறை பாத்துருவோம்” என்றார் சகாக்களிடம். வாசலில் ஒரு கான்ஸ்டபிள் நின்றிருந்தார். குமார் அவரிடம் “நீங்க கொஞ்சம் உள்ள வந்து இருங்க” என்றார்.

* * *

படுக்கையறை, பெரிய கூடத்தில் முக்கால் அளவுக்கு இருந்தது.

படுக்கையில் பாக்கியஸ்ரீயின் உடல் கழுத்து வரை போர்த்தப்பட்டுக் கிடந்தது. கச்சிதமாக, ஆனால் இடது தோளுக்கு அருகே போர்வை விலகியிருந்தது.

குமார் தடயவியல் குச்சியால் போர்வையைக் கால் வரை இறக்கினார். பாக்கியஸ்ரீ சாதாரணப் புடவை அணிந்திருந்தார். கழுத்து, காதுகள், கைகள் ‘மூளியாக’ இருந்தன. கைகள் ஒன்றின் மேல் ஒன்று வைக்கப்பட்டிருந்தன. கூந்தல் கற்றைகள் காதுகளுக்குப் பின்னால் ஒதுக்கப்பட்டிருந்தன.

“போர்வைய எடுத்துக்க சேகரா” என்றார்.

சேகரன் கையுறைகள் அணிந்து போர்வையை ஒரு பாலித்தீன் உறையில் போட்டு மூடிச் சுவரோரம் சாய்த்துவைத்தார். “அப்புறம்?” என்றார்.

“பெட்ஷீட் புதுசா மாத்தியிருக்கு பாருங்க. மொடமொடப்புகூட அப்படியே இருக்கு” என்றார் குமார்.

“சில பேர் தெனமும் மாத்துவாங்க. இதெல்லாம் ஒரு மேட்டரா?” என்றார் சேகரன்.

“அப்புறம் கண்ணாடி, ஃபேன், ஃபோட்டோஸ் எல்லாம் ஏன் தூசி, ஒட்டடை படிஞ்சிருக்கு?” குமார் மடக்கினார். மற்ற மூவரும் சுற்றிமுற்றிப் பார்த்தார்கள்.

“சரி, நீயே சொல்லு. அதுக்குத்தான வர்றோம்!” என்றார் சேகரன்.

“அவங்க புரண்டு படுத்திருந்தா மொடமொடப்பு, விறைப்பு எல்லாம் கலைஞ்சிருக்கும். பக்கத்துல அவங்க கணவரோ இன்னொரு நபரோ படுத்திருந்தாலும் படுக்கை கலைஞ்சிருக்கும்.”

“ஹஸ்பண்ட் அவங்க பக்கத்துல படுக்கலன்னா அவங்களுக்குள்ள ஏதோ சண்டை நடந்திருக்கணும். ஹஸ்பண்ட் நேத்து நைட் ஹால்ல இருக்குற சோபால படுத்திருக்கணும்!” என்றாள் குணவதி

“ஷார்ப். ஆனா ஒரு பிரச்சனை. புருஷன்-பொஞ்சாதி செக்ஸ் வெச்சிக்கிட்டாங்க. அதுனாலதான் புதுசா தொவச்ச பெட்ஷீட்” என்றார் குமார்.

“செக்ஸ் வெச்சிக்கிட்டு என்ன சண்டை?” என்றார் சேகரன்.

“ஒருவேளை அந்த லேடிக்கு திருப்தி கெடைக்காம இருந்திருக்கலாம். இது திரும்பத் திரும்ப நடக்குறதால நேத்து சண்டை முத்தியிருக்கலாம்… அல்லது வேற ரீசன்கூட இருக்கலாம்” என்றாள் குணவதி.

“தபாரும்மா, உன் மேல இருக்குற நல்ல அபிப்பிராயம் கொறஞ்சிட்டே வருது” என்றார் சேகரன். குணவதி சிரித்தாள்.

“ஃபோக்கஸ்! செக்ஸுக்கு அப்புறம் அந்த பெட்ஷீட்ட எடுத்துட்டு புது பெட்ஷீட் போட்டிருக்காங்க” என்ற குமார், “நீ போய் வாஷிங் மெஷின்ல துவைக்காத பெட்ஷீட்ஸ் ஏதாவது இருந்தா கொண்டுவா” என்றார் குணவதியிடம்.

“கிளவுஸ் போட்டுக்க” என்றார் சேகரன்.

குணவதி ஒரு படுக்கைவிரிப்புடன் திரும்பிவந்தாள். குமார் அதைக் குச்சியால் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்து எல்லாப் பக்கமும் திருப்பித் தீவிரமாக ஆராய்ந்தார். “முடிகள்… சீமென்… கன்ஃபார்ம்டு” என்று சேகரனிடம் நீட்டினார். சேகரன் சற்றுப் பெரிய பாலித்தீன் பையைத் திறந்து “போடு!” என்று சொல்ல, குமார் படுக்கைவிரிப்பை அதில் போட்டார்.

அடுத்து குமார் சடலத்தின் முழங்கைகள் அருகே பிடித்து இரு கைகளின் மணிக்கட்டுகளையும் பூக்களைப் போல் முகர்ந்து பார்த்தார். “புதுத் துணி” என்றார்.

அறையின் ஒரு மூலையில் தலையணைகள், போர்வைகள், படுக்கைவிரிப்புகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய மர மேஜையிடம் சென்றார் குமார். மேலே இருந்த நான்கைந்து படுக்கைவிரிப்புகள் மற்றும் போர்வைகளை எடுத்துக் கீழே வைத்தார். வெவ்வேறு அலங்காரங்களைக் கொண்ட நான்கு போர்வைகளை எடுத்தார். முகர்ந்து பார்த்தார். புதியவை. மென்மையாவை. பிரித்துப் பார்த்தார். எல்லாவற்றிலும் கயிற்றால் கட்டப்பட்டது போல் நேர்க் கோடாகச் சுருக்கங்கள். புகைப்படக்காரர் அவ்வப்போது படமெடுத்துக்கொண்டிருந்தார்.

“இன்னொரு எவிடென்ஸ் பேக் எடு” என்றார் குமார் சேகரனிடம்.

“சரியாப் போச்சு” என்றார் சேகரன்.

“தலகாணி உறைய மாத்திருக்காங்க. தலகாணியால அமுக்கிக் கொன்னிருந்தா தலகாணில இம்ப்ரெஷன்ஸ், திரவக் கறைகள் இருக்கும். அதுனால கொன்னப்புறம் உறையத் திரும்ப மாட்டிருக்கலாம். தலகாணி உறைய எடுத்துக்குங்க.”

சேகரன் கீழ்ப்படிந்தார்.

“நீங்க ரெண்டு பேரும் போய் அவங்களோட பேசிட்டிருங்க. நானும் குலோத்துங்கனும் அடுத்த ரூமை செக் பண்ணிட்டு வரோம். அவங்களை நகர விடாதீங்க” என்றார் குமார். குணவதியும் சேகரனும் கூடத்திற்குத் திரும்பிச் செல்ல, குமாரும் புகைப்படக்காரரும் மற்ற அறைகளுக்குச் சென்றார்கள்.

ஓர் அறையை எட்டிப்பார்த்த குமார், “இது பையன் ரூமு” என்று இன்னொரு அறைக்குச் சென்றார். ஒரு பதினாறு வயதுச் சிறுமியின் அறைக்குரிய லட்சணங்கள் இருந்தன. உத்வேகமூட்டும் வாசகங்கள், விளையாட்டு வீராங்கனைகளின் சுவரொட்டிகள், பாரதியார், அஜித் குமார், நிவின் பாலி படங்கள், சுவருக்குக் கவித்துவம் சேர்க்க சூரியோதயத்தில் பூக்களை முகரும் வெள்ளைக்கார இளம்பெண், கணினி, பிரின்டர், துணிக் கொடி. குமார் பரண், சுவர் அலமாரிகள், படுக்கை, சுவர்மூலைத் துணிக்குவியல் என்று எல்லாவற்றையும் பார்த்தார்.

“சார் என்ன தேடுறீங்க சார்?” என்றான் குலோத்துங்கன்.

“ஒட்டாம எதுனா இருக்கா பாரு.”

கட்டிலின் மெத்தையை மெல்லத் தூக்கி மறுமுனை வரை பார்த்தார். அலமாரியின் கடைசித் தட்டில் கால்வைத்து ஏறி மேல் தட்டில் பார்த்தார். பிறகு திரும்பி மின்விசிறியைப் பார்த்தார். அதன் பிளேடு ஒன்றில் தூசு படியாத ஒரு 10×3 அங்குல குஷன் உறை டேப்பால் ஒட்டப்பட்டிருந்தது. குமார் இறங்கினார்.

“ஃபேன் பிளேடுல ஒரு கவர் இருக்கு. அத ஃபோட்டோ புடி.”

குமார் கணினிக்கான சுழல் நாற்காலியை மின்விசிறிக்கு நேர் கீழே இழுத்துப் போட்டுப் பிடித்துக்கொள்ள குலோத்துங்கன் நாற்காலியில் ஏறிப் புகைப்படம் எடுத்தான். அடுத்து அவன் நாற்காலியைப் பிடித்துக்கொள்ளக் குமார் ஏறினார். பேன்ட் பையிலிருந்து கையுறைகளை எடுத்து அணிந்தார். உறையைப் பிய்த்து எடுத்துக்கொண்டு இறங்கினார். உறையில் இருந்ததைக் கையில் சரித்தார். ஒரு ஜோடி தங்கத் தோடுகள், தாலி, ஒரு மெல்லிய புதிய தங்கச் சங்கிலி, மெல்லிய தங்க மோதிரம் ஆகியவை குமாரின் கையில் விழுந்தன. குலோத்துங்கன் அதைப் படமெடுத்தான்.

“பாடிலேந்து எடுத்ததா சார்? இங்க எப்பிடி சார்?” என்றான் குலோத்துங்கன்.

“மகளுக்கு சேர வேண்டிய நகைங்க மக கிட்டதானே இருக்கும்!”

* * *

குமாரும் குலோத்துங்கனும் கூடத்திற்கு வந்தார்கள்.

“எல்லாரும் சாப்ட்டீங்களா?”

மணிகண்டன் விழித்தார். “எப்படி சார்…”

“மணி ஒம்பதாகப் போவுதே!” என்ற குமார், குணவதியிடம் “நீ பசங்களைக் கூட்டிட்டுப் போய் அவங்களோட சாப்ட்ரு. சார், நீங்க என்னோட ஸ்டேஷனுக்கு வந்து ஒரு ஸ்டேட்மென்ட் குடுத்துருங்க” என்றார்.

“நீ வேற எவிடென்ஸ் இருந்தா பாரு” என்றார் சேகரனிடம்.

“ஏன், எதுனா மிச்சம் வெச்சிருக்கியா?”

* * *

மணிகண்டனை விசாரணை அறையில் அமரவைத்துவிட்டுத் தமது அலுவலகத்திற்குள் நுழைந்தார் குமார். இன்டர்காமில் “அர்ச்சனா” என்றார்.

கான்ஸ்டபிள் அர்ச்சனா வந்ததும் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினரின் விவரங்கள் அடங்கிய கோப்புகளைத் தந்தார்.

“முதல்ல மணிகண்டனோட ஃபினான்ஷியல்ஸ் வேணும். அடுத்தது பாக்கியஸ்ரீயோடது. இது ரெண்டையும் குடுத்துட்டு பசங்கள்து கன்டின்யூ பண்ணு,”

“யெஸ் சார்.”

சில நிமிடங்களில் அர்ச்சனா கதவைத் தட்டிவிட்டுச் சில அச்சிட்ட தாள்களுடன் குமாரின் அறைக்குள் நுழைந்தாள்.

“மணிகண்டனோட ஹார்டுவேர் கடைல பிசினஸ் அடிபட்டிருக்கு. ஷேர்ஸ்ல கிட்டத்தட்ட ஒண்ணே முக்கால் கோடி முதலீடு பண்ணிருக்காரு. அத்தனையும் லாஸ் ஆயிருக்கு. நிறைய ஆட்கள் கிட்ட, பேங்க்குகள்ல கடன் வாங்கிருக்காரு. மூணு மாசத்துக்கு முன்னாடி திருச்சி பக்கத்துல சொந்த நெலத்த பத்து லட்சத்துக்கு வித்திருக்காரு. இப்ப இருக்குற வீட்டை அடகு வெச்சிருக்காரு. அந்த லேடியோட ஸ்கூல் சம்பளத்துலதான் கொஞ்சம் சமாளிச்சிருக்காங்க. பதினஞ்சாயிரம் சம்பளம்.

“அவங்கப்பா பில்லியனேர். அவங்களுக்கு ஒரு பிரதர் இருக்காரு, ஆனா கான்டாக்ட் இல்ல. இப்ப யூஎஸ்ல இருக்காரு. அவங்கப்பா பொண்ணுக்குப் பதினெட்டு வயசு ஆனப்ப அவங்க பேர்ல லைஃப் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுத்திருக்காரு. இருவது வருஷ பாலிசி. அவங்களுக்கும் மணிகண்டனுக்கும் லவ் மேரேஜ் ஆனப்புறம் பொண்ணக் கழட்டி விட்டுட்டாரு. அப்பா அஞ்சு வருஷம் முன்னாடி எறந்துட்டாரு. ஆனா பொண்ணோட பாலிசில மட்டும் பணம் போக ஏற்பாடு பண்ணிருக்காரு. இப்ப இருவது வருஷம் கம்ப்ளீட் ஆகுது. ரெண்டு கோடிக்கு மேல கெடைக்கும். குழந்தைங்க பேர்ல பாலிசீஸ் இருக்கு சார். ஆனா ரெண்டு பேருக்கும் கடைசி ஏழெட்டு ப்ரீமியம் கட்டாம விட்டிருக்காங்க.”

“கஷ்டம்தான்.”

“புருஷன் கொன்னுருப்பாரா சார்?”

“அவரையே கேட்ருவோம். குட் வொர்க் அர்ச்சனா.”

“நன்றி சார்!” என்று வெளியேறினாள் அர்ச்சனா.

குமார் குணவதிக்கு ‘ஃபோன் போட்டார்’.

“ஹலோ சார். பாவம் சார் கொழந்தைங்க. நல்ல பசங்க.”

“என்ன செய்ய! அந்தாள் மூஞ்சியப் பாத்ததும் இதெல்லாம் நமக்கு ஏண்டா வருதுன்னு இருந்துச்சு. சரி, நான் கேட்டனே…”

“போன மாசம் புதுசா நாலு போர்வை வாங்கிருக்காங்க சார். அவங்க வழக்கமா எடுக்குற ஏடிஎம் இல்லாம தி.நகர்ல ஒரு ஏடிஎம்லருந்து பணம் எடுத்திருக்காங்க. அவங்க எடுத்த அமவுன்ட்ட வச்சு அக்கப்பக்கத்துலயே ஏழெட்டு ஜவுளிக் கடைல ஃபோட்டோ காட்டி விசாரிச்சேன். நீங்க சொன்ன மாதிரிதான் – ரெண்டு பேரும் சேந்துதான் வாங்கிருக்காங்க. கொழந்தைங்களோட போயிருக்காங்க. அப்புறம் அங்கேந்து சினிமாவுக்குப் போயிட்டு ஒரு கடைல ஐஸ்க்ரீம் சாப்ட்டுட்டு வீட்டுக்குத் திரும்பிப் போயிருக்காங்க.”

“குட் வொர்க் குணவதி!”

* * *

குமார் விசாரணை அறையில் நுழைந்தார். மணிகண்டன் தொய்ந்துபோய் அமர்ந்திருந்தார். குமார் அவர் எதிரில் அமர்ந்தார்.

“மிஸ்டர் மணிகண்டன், நீங்க உங்க மனைவியக் கொன்னீங்களா?”

மணிகண்டன் உடனே வாயைப் பிளந்தார். தலையசைத்தார். “அப்பிடியே வெச்சிக்குங்க சார்.”

“நீங்க ரொம்ப புத்திசாலித்தனமா ப்ளான் பண்ணதா நினைக்கிறீங்க. ஆனா கொஞ்ச நேரத்துலஒத்துக்குறீங்களான்னு பாப்போம்.

“உங்களுக்கு வீடு, நெலம் இருக்கான்னு கேட்டப்ப விரக்தியா ஸ்மைல் பண்ணி இல்லன்னு சொன்னீங்க. அந்த சிரிப்பே நீங்க ரெண்டையும் இழந்துட்டீங்கன்னு சொல்லிருச்சு. நெலத்த வித்தத எங்கிட்ட மறைச்சிட்டீங்க. வீட்டை அடமானம் வெச்சதையும் மறைச்சிட்டீங்க. நடுத்தெருவுக்கு வர்ற நிலைமைல இருக்கீங்க. குழந்தைங்க படிப்பு, தினசரிப் பொழப்பு எல்லாம் பாதிச்சிருக்கு. இப்படி இருக்குறப்ப உங்க பாட்டி குடுத்ததா சொல்ற பல லட்ச ரூபாய் நகைகள வீட்லயா வெச்சிருப்பீங்க?”

மணிகண்டன் மௌனமாக இருந்தார்.

“உங்க பாட்டி எந்த நகையும் குடுக்கல. உங்க சூழ்நிலைல உங்க மனைவியோட இன்ஷுரன்ஸ் பாலிசி மெச்சூர் ஆறது பத்தி லெட்டர் வருது. அந்த ரெண்டு கோடி இல்லன்னா உங்க குழந்தைகளோட வாழ்க்கை முடிஞ்சுதுன்னு முடிவு பண்ணீங்க. உங்க மச்சான் கிட்ட உதவி கேட்டீங்களா?”

“கேட்டோம் சார். போடான்னுட்டான். வெளிநாட்ல இருக்கான். அவன்தான் செத்திருக்கணும்.”

“ஓ.கே. நம்ம சாவுக்கு வருவோம். ரெண்டு மாசமா போட்டிருந்த திட்டத்த நேத்து ராத்திரி கேரி அவுட் பண்ணீங்க. நடுராத்திரி ரகசியமா நீங்களே வாசல் கதவையும் பெட்ரூம் கதவையும் உடைச்சீங்க. அப்புறம் உங்க மனைவியோட கை, காலுக்கு அதுக்காகவே வாங்குன புதுப் போர்வைய சுத்தினீங்க, கட்டுன அடையாளங்கள் உடம்புல விழக் கூடாதுன்றதுக்காக. நைலான் கயிறு மாதிரி ஏதோ ஒண்ண வெச்சிக் கட்டுனீங்க. அப்புறம் அவங்க திமிராம இருக்க கை காலக் கட்டிலோட சேத்துக் கட்டுனீங்க. அடுத்தது அவங்க தலைக்கு வெச்சிருந்த ஃபோம் தலகாணியால அவங்க முகத்தை அழுத்தி மூச்சுத் திணற சாகடிச்சீங்க. அவங்க செத்தப்புறம் தடயங்களை மறைக்க அதுக்குத் திரும்பவும் உறைய மாட்டுனீங்க. நகையெல்லாம் கழட்டி உங்க பொண்ணோட ரூம்ல ஒளிச்சு வெச்சீங்க.

“எல்லாத்தையும் முடிச்சிட்டு ஹால்ல வந்து படுத்துட்டீங்க. நீங்க பொண்டாட்டியோட சண்டைன்னு வெளிய வந்து படுத்தாத்தான் உங்கள யாரும் சந்தேகப்பட முடியாது, சாட்சிக்குக்கூட கூப்பிட முடியாது. அதனாலதான் உங்க மனைவியோட பொணத்தை உங்க பொண்ணு கண்டுபுடிச்சா.”

மணிகண்டன் மீண்டும் குலுங்கத் தொடங்கினார். கைகூப்பினார். “விட்ருங்க சார். நான்தான் பண்ணேன். என் குழந்தைகளுக்காகப் பண்ணேன். என்னோட தவறுகளால அவங்களோட வாழ்க்கை நாசமாக போகக் கூடாது. அதுக்காக அவங்க அம்மாவக் கொன்னேன்.”

“தெரியும். அந்த சண்டையப் பத்திப் பேசுவோம். விவரமா சொல்லுங்க.”

“நான் தப்பா நிறைய இன்வெஸ்ட் பண்ணிட்டதாலதான் எங்க வாழ்க்கை நாசமாப் போச்சுன்னு என் பொண்டாட்டி சொன்னா. உண்மைதானே. மறுக்க முடியுமா? அதுல அப்செட் ஆகி வெளிய படுத்துக்கிட்டேன்.”

“சண்டையே நடக்கலைன்னு நான் சொல்றேன். நீங்க செக்ஸ் வெச்சிக்கிட்டீங்க. கடைசியா ஒரு தடவை. அப்புறம் உங்க மனைவி ஒத்துழைப்போட அவங்களக் கட்டிப்போட்டுக் கொன்னீங்க. அக்கறையோட போத்தி விட்டீங்க, கைய எடுத்து வயித்து மேல வச்சீங்க. அவங்க உடம்பு திமிறி அலங்கோலமா ஆனத உங்களால பாக்க முடியல. சரிதானே?”

மணிகண்டன் குமாரை வெறுமனே வெறித்துப் பார்த்தார்.

“ஒரிஜினலா இது உங்க மனைவியோட ஐடியா. தியாகம் பண்ண முடிவு செஞ்சாங்க. வீட்டை அடகு வெச்சதும் உங்களுக்கு வேற வழி தோணல. இனிமே கடன் வாங்க ஆளில்ல. அப்ப பாலிசி லெட்டர் வருது. உங்க மனைவி ஐடியா குடுக்குறாங்க. நீங்க முதல்ல ஒத்துக்கிட்டிருக்க மாட்டீங்க. ஆனா பாலிசி அவங்க பேர்லதானே இருக்கு. அரைக் கோடி அடைச்சுட்டீங்க. மீதிய அடைச்சிட்டாலும் உங்க குழந்தைகளோட எதிர்காலத்துக்குப் பணம் மிஞ்சும். உங்க மனைவி கன்வின்ஸ் பண்ணாங்க. நீங்க அவங்கள டிஸ்கரேஜ் பண்ணாம, அதுக்கு பதிலா கொலைக்குத் திட்டம் போட்டீங்க. கரெக்ட்டா?”

மணிகண்டன் ஆமோதித்துத் தலையசைத்தார்.

“அவங்க ஐடியா குடுக்கலன்னாலும் ஒருகட்டத்துல நீங்களா அவங்களக் கொன்னுருப்பீங்கன்னுதான் தோணுது. உங்களுக்கு நம்பிக்கை இல்ல, கற்பனை இல்ல, பொறுமை இல்ல.”

குமார் எழுந்தார். “உங்களக் கைது பண்றேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

குணவதி உள்ளே நுழைந்து மணிகண்டனுக்கு விலங்கு மாட்டினாள். அவரை லாக்கப்புக்கு அழைத்துச் சென்று உள்ளே வைத்துப் பூட்டினாள்.

“உன் குழந்தைங்க உன்ன மன்னிக்கவே மாட்டாங்க” என்று சபித்தாள்.

மணிகண்டனின் முகத்தில் ரத்தம் வடிந்தது.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar