சாவு மற்றவர்களுக்கே

in கவிதை

ஒரு விஷயத்தை கவனித்திருக்கிறீர்களா?
சாவு எப்போதுமே மற்றவர்களுக்குத்தான் வருகிறது
இவர் செத்தார், அவர் காலமானார், இன்னொருத்தர்
இனி இல்லை என்றெல்லாம் கேட்கிறோம்
சிலருடைய சாவை அருகிலிருந்தும் பார்க்கிறோம்
இக் கேள்வி ஞானங்களும் நேரடிக் காட்சிகளும்
ஒன்றைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன:
சாவு மற்றவர்களுக்கு மட்டுமே ஏற்படுவது
லூசு போல் பேசுகிறான் என்றுதானே நினைக்கிறீர்கள்?
என் மனசுக்குப் பட்டதைக் கேட்கிறேன் –
அடுத்தவன் சாகிறான், சரி,
நீங்களோ நானோ சாகிறோமா?
யதார்த்தமாகத் திரிந்துகொண்டுதானே இருக்கிறோம்?
“நமக்கும் ஒருநாள் சாவு வரும்” என்கிறீர்கள்
அதாவது இவர்கள் சாகிறார்களே, அதே மாதிரி
ரொம்பப் பெருந்தன்மை சார்,
உங்கள் ஆட்டத்தில் என்னையும் சேர்த்துக்கொண்டீர்கள்
ஆனால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்
நமக்கும் சாவு உண்டு என்றால்
இந்நேரம் நாம் செத்திருக்க வேண்டுமே!
எப்படி நாம் நேரடியாகச் சாகாமல்,
வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்?
நம்மை மாளாத் துயரிலிருந்து தடுப்பது எது?
நோய், விபத்து, வன்முறை எவையும்
தாக்க முடியாத மலைகளும் கடல்களுமா நாம்?
புரிகிறது, நீங்களும் நானும் ஒன்றல்ல
நீங்கள் வேறு ஆள். உங்களுக்கு உண்டு
நீங்கள் என்றைக்காவது சாவீர்கள், ரைட்டோ
நான் அடியேன். எனக்குச் சாவு இல்லை
நான் வேடிக்கை மட்டும்தான் பார்ப்பது
அதனால்தான் சொல்கிறேன்
சாவு மற்றவர்களுக்குத்தான் வருகிறது.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar