வெள்ளைக்காரன் அறிவு

in கவிதை

வெள்ளைக்காரன் அறிவு
சுட்டுப்போட்டாலும் நமக்கு வராது
அன்புக்குரியவர் செத்துப்போனால்
நெருப்பில் இட்டு உருத்தெரியாமல்
அழித்துவிடுகிறோம்
மிச்சத்தைக்கூட விட்டுவைக்காமல்
கடலில் காணடித்துவிடுகிறோம்
திரும்பி வந்தால் தொலைத்துவிடுவேன்
என்று மிரட்டாதது ஒன்றுதான் பாக்கி
வந்துவிட கிந்துவிடப் போகிறான் என்று
சரமாரியாகச் சடங்குகளும் செய்கிறோம்
ஆற்றில் குளிப்பவர்களைக்
கரையேறாமல் தடுக்க
ஆடைகளை ஒளித்துவைப்பது போல்
நெருப்பில் போடுவதற்கு முன்பு
நல்ல ஆடைகளைக் கழற்றிவிடுகிறோம்
எலும்புகளைக் குச்சியால் கிளறிப்
பொறுக்கியெடுத்துச் சட்டியில் போட்டு
சீல் வைத்துக் கடாசிய பிறகு
திரும்பி வருவார்களா யாராவது?

வெள்ளைக்காரனோ
அவன் நேசிப்பவர்களுக்கு
ஜனாதிபதி போல் ஆடை உடுத்தி
ஒரு பெட்டிக்குள் மூடிவைத்துப்
புதையல் ஆக்குகிறான்
பளிங்குக் கல்லில் பெயர் பொறித்து
நேர்த்தியாக அடையாளம் வைத்து
நினைக்கும்போது சென்று பார்க்கிறான்
அழகான பூச்செண்டுகள் வைக்கிறான்
ஆறுதல் தேவைப்பட்டால் வந்து
உட்கார்ந்துவிட்டுச் செல்கிறான்
அள்ளிப் போடும் மண்ணைக்கூட
அவர் முகத்தில் போடாமல்
பெட்டி மேல் போடும் நாகரிகம் உண்டு
வெள்ளைக்காரன் அன்புக்குரியவர்களின்
மிச்சமீதியைத் தன்னோடு வைத்துக்கொள்கிறான்
எஞ்சியதையும் ஒழித்துவிட்டுத்
தனியாகக் கிடப்பதில்லை
நேசிப்பவர்களை அவன்
முழுமையாக இழப்பதில்லை.

(‘வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை’ (2016) தொகுப்பிலிருந்து)

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar