பேயோன்

படித்ததில் பிடித்தவன்

ரஜினி என்னும் சினிமா நடிகர்

April 4th, 2012

ரஜினிசார் (சுருக்கமாக ரஜினி) யார் என்று கேட்டால் சின்னக் குழந்தையும் சொல்லும் என்று ஒரு திரைப்பாடல் இருக்கிறது. குழந்தைகள் மட்டுமா, பெரியவர்கள்கூடச் சொல்வார்கள். ஏனென்றால் ரஜினி கவராத வயதே இல்லை. மனித வயதுகளில் எந்த வயதை எடுத்துப் பார்த்தாலும் அதைச் சேர்ந்தவர்கள் யாராவது ரஜினி ரசிகராக இருப்பார்கள். அவருக்கு 1,50,000 ரசிகர் மன்றங்கள் இருப்பதாக ஒரு இணையப் புள்ளிவிவரம் கூறுகிறது. சில நடிகர்களுக்கு ரசிகர்கள்கூட அந்த எண்ணிக்கையில் இருப்பார்களா என்பது சந்தேகமே. ஆனால் இந்தக் கட்டுரை எண்ணிக்கைகளைப் பற்றியதல்ல, எண்ணங்களைப் பற்றியது. அந்த எண்ணங்கள் ரஜினியைப் பற்றிய என்னுடையவை.

எட்டு வயதில் அபூர்வ ராகங்கள் பார்த்தபோது திரையில் சிறிது நேரமே தோன்றிய ரஜினிதான் என்னைக் கவர்ந்தார். பிறகுதான் ஸ்ரீவித்யா மேடம். கேபிசாரின் இயக்கம், கமல்சார், ஸ்ரீவித்யா ஆகியோர் நடிப்பு, இளையராஜா சாரின் தெய்வீக இசை ஆகிய பல விசயங்களால் எனக்கு அந்தப் படம் இன்றுவரை மறந்தபாடில்லை.

கேபிசார் படத்தில் ஒரு சிறிய கௌரவ வேடத்தில் நடிப்பது எவ்வளவு பெரிய கௌரவம்! அதற்குப் பின்னர் ரஜினிக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன. இன்றைய தேதி வரை நிறைய படங்களில் நடித்துவிட்டார். இது இவ்வாறிருக்க, மற்றவர்களைப் போல எனக்கும் பிடித்த ரஜினி படங்கள் என்று சில இருக்கின்றன. அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, அவர்கள், புவனா ஒரு கேள்விக்குறி, தில்லுமுல்லு, தளபதி, பாட்சா, இன்சாஃப் கௌன் கரேகா, பாபா, வள்ளி என்று பலவற்றைச் சொல்லலாம். எல்லாவற்றைக் காட்டிலும் மேலானதாக 1977ல் வெளிவந்த ஆறு புஷ்பங்கள் என்ற படத்தினைச் சொல்வேன். இந்தப் படத்தினை அந்தக் காலத்திய ரஜினி ரசிகர்களே மறந்திருக்கக்கூடும். ஆனால் இது முக்கியமான படம்.

இந்தப் படத்தை இயக்கிய கே.எம். பாலகிருஷ்ணன் வேறு படங்களை இயக்கியுள்ளாரா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு ரஜினி படம் எடுத்துவிட்டால் வேறு படமே எடுக்கத் தேவையில்லை என்பது தயாரிப்பாளர்களது நிலைபாடு. ஆறு புஷ்பங்கள் படத்தில் ஆறு மகள்களைப் பெற்ற வஞ்சனையில்லாத தந்தையாக எஸ்.வி. சகஸ்ரநாமம் நடித்திருக்கிறார் (1956இன் ஒன்றே குலம் படத்தில் நடித்தவர்). ரஜினியும் எஸ்.வி. சகஸ்ரநாமமும் இணைந்து நடித்த முதல் படம் இது என்பதை இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும் (இந்தத் தகவல் தவறாகவும் இருக்கலாம்). வறுமையில் திணறும் ஒரு மத்தியதரக் குடும்பம் உழைப்பால் பட முடிவில் உயர்வது கதை. அந்த ஆறு மகள்களில் இருவரான ஸ்ரீவித்யாவிற்கும் ஒய். விஜயா மேடத்திற்கும் ஜோடியாக ரஜினியும் விஜயகுமார் சாரும் நடித்துள்ளனர். யாருக்கு யார் ஜோடி என்பதை கவனித்ததாக நினைவில்லை. ரஜினிக்கு இந்தப் படம் ஒரு முக்கியமான பயிற்சிப் படமாக இருந்திருக்கும்.

ரஜினி ஒரு “மசாலா” நடிகர் என்பதாகவே பொதுப்புத்தியில் பதிந்திருக்கிறது. மசாலா என்பது தீமை என்கிற பார்வையிலிருந்து வருகிறது இந்தச் சிந்தனை. உண்மையில் ரஜினி நடிக்காத பாத்திரங்களே இல்லை. பற்ற வைக்கும் பரட்டையாக, ராணுவ வீரராக, கோவிலில் கடவுள் சிலையுடன் வாக்குவாதம் செய்யும் கடத்தல்காரராக, கன்னட சாமியாராக, யானை வளர்ப்பவராக, பணக்காரராக, டிரம்ஸ் கலைஞராக, தொழிலதிபராக, நேர்மையான போலீஸ் அதிகாரியாக, பெண் தொழிலதிபரின் கொட்டத்தை அடக்கும் தொழிலாளியாக, பால்காரராக, நியாயமான ஆட்டோ ஓட்டுநராக, பாடகராக, ஜமீன்தாராக, மனநல மருத்துவராக, ஏன், நடமாடும் இயந்திரமாகக்கூட நடித்திருக்கிறார். இதை விட்டால் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். வேறு எந்த நடிகர்களிடம் இத்தனை “வெரைட்டி” இருக்கிறது? அட ஒரு தகவலுக்காகக் கேட்பதாகவேகூட வைத்துக்கொள்வோமே!

தீவிர சினிமா ஆர்வலர்கள் ரஜினியின் நடிப்பிலுள்ள ‘ஸ்டைல்’ என்கிற விசயத்தை ஒரு குறையாகச் சொல்கிறார்கள். நான் அதை அப்படிப் பார்க்கவில்லை. நடிப்பில் அதுவொரு அணுகுமுறை என்பது என் துணிபு. வசனம் பேசி முகபாவத்தைக் காட்டி புனைவினுள் புகுந்தேறி நடிப்பது ஒரு உத்தி என்றால், நடிப்புடன் நடனத்தைக் கலந்து இன்னொரு கலை வடிவத்திற்குத் தாவுவது மறு உத்தி. ரஜினியின் பிரபல ‘ஸ்டைல்’களாகிய சிகரெட்டைத் தூக்கிப் போட்டு வாயிற்பிடித்தல், தலைமுடி கோதுதல், துண்டினை பலமுறை சுழற்றித் தோளில் போடுதல் ஆகியவை நடப்பது, உட்காருவது போன்ற அன்றாட உடலசைவுகள் அல்ல. ரஜினி ஸ்டைல்களை நிதர்சனத்தில் யாரும் செய்வதில்லை. அவை புனைவுத் தன்மை கொண்டவை. நடன அசைவுகளைப் போன்றவை. தலையைக் கோதுவது, சிகரெட்டை வாயால் பிடிப்பது எல்லாம் நடன முத்திரைகள்தாம். இது ரஜினி சிறுவயதில் யட்சகானம் நிறைய பார்த்திருக்கக்கூடியதன் விளைவாக இருக்கலாம்.

ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் மற்றும்/அல்லது ரஜினி ரசிகர்கள் உலகெங்கும் பரவியுள்ளார்கள். ரஜினி பற்றிய விக்கிபீடியா கட்டுரை ஜெர்மன், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜப்பானியம், சீனம், நார்வீஜியன் உட்பட பதினொரு மொழிகளில் கிடைக்கிறது. விக்கிபீடியா கட்டுரைகள் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா போலின்றி அன்பால் சேர்ந்த கூட்டத்தினரால் எழுதப்படுபவை என்பது தெரிந்ததே. என்னதான் அவர் பெயர் “ரசினிகாந்து” என எழுதப்பட்டாலும்.

ரஜினி ரசிகர்கள் உலக வியாபகம் பெற்றிருப்பினும் இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ள தேசம் ஜப்பான் ஆகும். இந்த ரசிகர்களை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். நான் அடிக்கடி வருகை புரியும் ஜப்பானிய நகரமான ஒசாகாவில் இவருக்குத் தெருவிற்குத் தெரு ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. கோபயாஷி நகரில் ரஜினி பெயரில் இருக்கும் தேனீர் விடுதியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். புகழ்பெற்ற ஜப்பானிய தேநீர்ச் சடங்குகள் இந்தக் கடையில் ரஜினி ஸ்டைலில் செய்யப்படுகின்றன. நாமிங்கே “ரஜினிசார்” என்று சொல்வது போல ஜப்பானில் அவரை “ரஜினிசான்” என்கிறார்கள். இது ஜாக்கி சானில் வரும் “chan” அல்ல. ஜப்பானில் வயதினால் தாழ்ந்த பெண்களைக் குறிக்கத்தான் “chan” என்பார்கள். ரஜினிசான்-ல் வருவது மரியாதையைக் குறிக்கும் san.

கேபிசார் தயாரித்து கே.எஸ். ரவிக்குமார் சார் இயக்கிய முத்து, ஜப்பானில் ‘முத்து மகாராஜா’வாக வசூல் சாதனை படைத்தது. கேபிசார் இயக்கியிருந்தால் இது நடந்திருக்காது. ரஜினிக்கும் ஜப்பானுக்கும் உள்ள தொடர்பானது முத்து படத்தில் தொடங்கியதோடு முடியவில்லை. மணிசாரின் தளபதியில் “சுந்தரி, கண்ணால் ஒரு சேதி” பாடலில் ரஜினி ‘ரோனின்’ வேடத்தில் கொண்டையும் அதனூடே ஒரு சுள்ளியுமாக வருவார். ‘ரோனின்’ என்பவர் வேலையில்லாத சமுராய். அத்தோடல்லாது, ஜப்பானின் தொழில்நுட்ப உயர்வும் மோகமும் உலகறிந்தவை. எந்திரன் படப் பாடல்களில் ஜப்பானிய பிரேஸ்புக்கைச் சேர்ந்த பல வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அறிபுனை ஆடிவெள்ளி போல் எடுக்கப்பட்டதால் ஜப்பானிய ரசிகர்களை “எந்திரன் கவர்ந்திருப்பான்” என்பதில் சந்தேகம் இல்லை.

எவ்வளவு பெரிய மலையானாலும் அடிவாரம் என ஒன்று இருக்கும். அது போல ரஜினியிடமும் சில குறைகள் உள்ளன. முதல் குறை அவரது தமிழ் உச்சரிப்பு. பல பத்தாண்டுகளாகத் தமிழ்நாட்டில் இருந்தபடி ஏராளமான படங்களில் தமிழ் வசனம் பேசி நடித்த ஒரு நடிப்பாளுமைக்குத் தமிழ் உச்சரிப்பு ஏனோ பயிற்சியாகவில்லை. இன்றைக்கும் கன்னட ஒலியுடனே பேசுகிறார். இதையும் மீறி “என் வழி தனி வழி”, “நான் ஒரு முறை சொன்னால் அது நூறு முறை சொன்னதற்கு நிகராகும்”, “கதம் கதம்” போன்ற வசனங்கள் மக்கள் பேச்சில் கலந்துவிட்டன என்பதையும் ஒப்புக்கொண்டாக வேண்டும். இன்னொரு குறையானது, அவருக்கு நடிகர் திலகம் சார் போலவோ கமல் போலவோ அழ வரவில்லை. இத்தனைக்கும் அவர் இருவரோடும் சில படங்களில் நடித்திருக்கிறார். ரஜினியின் அழுகையில் விரக்தி ததும்புகிறதே தவிர நாயகன், தேவர் மகன் பட அழுகைகள் போன்று வேதனையும் தத்துவமும் கலந்தாற்போல் வெளிப்படவில்லை. ஒருவருடைய அழுகையை வைத்து அவரது திறமையை எடைபோடக் கூடாதுதான். ஆனாலும் சற்றுக் கூடுதலாக அழுதிருக்கலாமே என்கிறேன், அவ்வளவுதான். வேறு குறைகள் இல்லை.

ரஜினி என்னும் உன்னதமான கலைஞரை அரசியலுக்கு இழுக்கும் முயற்சிகள் செவ்வனே நீண்டகாலமாக எடுக்கப்பட்டுவருகின்றன. இது அவர் கலைஞர் என்பதால் இருக்கலாம். ஆனால் அவரது கலை, திரைப்படக் கலை சார்ந்ததே தவிர அரசியல் சார்ந்ததல்ல. ரஜினியிடம் ஒரு கலைஞனுக்குரிய வெகுளித்தன்மை இருக்கிறது. அரசியலில் அழுக்காறு, அவா, இன்னாச்சொல் போன்றவைக்கு இடமிருக்கிறது. வெகுளிக்கு இல்லை. பிரியாணியால் சேரும் கூட்டம் அவருக்கு ஆகாது. ஆகவே தமிழ் மக்களுக்கு என்றென்றும் அவரது ஆதரவு வெளியிலிருந்தே கிடைக்கட்டும்.

கடைசியாக ஜப்பான் தொடர்புகளில் விடுபட்டுப்போன ஒன்றை முத்தாய்ப்பாக வழங்கிட விரும்புகிறேன். இந்த ஆண்டு (2011) ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமிப் பேரழிவுகளில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவ ரஜினி நிறைய நிதி அளித்ததோடு சக நடிகர்களையும் உதவச் செய்தார். குசேலன் படத்தில் தேர்ந்த நடிகரான பசுபதியைப் போட்டியாக நினைக்காமல் பணம் கொடுத்து உதவுகிறார் ரஜினி என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் பாட்சா படத்தில் வருவது போல ரஜினிக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அது மாணிக்கம். நடிகருள் மாணிக்கம்.


‘இந்தியா டுடே’ வார இதழின் ரஜினிசார் சிறப்பிதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை

மேலும் ஜென் கதைகள்

March 30th, 2012

துறவைத் துறத்தல்

ஞானி ஷிமிஸு அவரது அறிவிற்காக ஜப்பான் முழுவதும் மதிக்கப்பட்டார். ஒரு நாள் அவர் தமது சீடர்கள் அனைவரையும் அழைத்தார். “நான் துறவை அறிந்துவிட்டேன். இனி இந்த வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. இல்லற வாழ்க்கையில் ஜென்னைத் தேடப்போகிறேன்” என்று ஷிமிஸு அறிவித்தார். பின்னர் மடாலயத்தை நடத்தும் பொறுப்பைத் தமது தலைமை சீடரிடம் அளித்துவிட்டு வெளியேறினார். கானகத்தை விட்டு நகரத்திற்குச் சென்ற ஷிமிஸு, திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தை பெற்றுக்கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு நாள் அவர் மடாலயத்திற்கு ஒரு சிறு பையுடன் திரும்பி வந்தார். அவரை யாரும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

உண்மைக்காகக் காத்திருத்தல்

ஹச்சிபெய் என்ற ஞானிக்கு ஒரு இளம் சீடன் இருந்தான். “குருவே, உண்மை என்றால் என்ன?” என்று ஒரு நாள் சீடன் கேட்டான். “அடுத்த மாதம் சொல்கிறேன்” என்றார் ஹச்சிபெய். அதன் பின் அந்தச் சீடன் அதே கேள்வியை விடாமல் கேட்டுக்கொண்டிருந்தான். ஞானியும் அவன் கேட்கும்போதெல்லாம் “அடுத்த மாதம் சொல்கிறேன்” என்று பதிலளித்தார். சீடன் நம்பிக்கையுடன் முப்பதாண்டுகள் பொறுமையாகக் காத்திருந்தான். பிறகு ஹச்சிபெய் மரணப் படுக்கைக்குப் போனார். அப்போதும் சீடன் அந்தக் கேள்வியைக் கேட்டான். ஹச்சிபெய் புன்னகையை பதிலாக அளித்துவிட்டு இறந்தார். சீடனுக்கு அந்தக் கணமே ஞானம் வந்தது. இருந்தாலும் “இந்தப் புன்னகையை முப்பதாண்டுகளுக்கு முன் பூத்திருக்க வேண்டியதுதானே” என்று அவன் கேட்கத் தவறவில்லை.

வணக்கம் புத்தரே

ஒரு மூத்த துறவியும் அவரது இளம் சீடரும் காட்டில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது எதிரில் இன்னொரு மூத்த துறவியும் அவரது இளம் சீடரும் வந்தார்கள். ஒரு மூத்த துறவி இன்னொரு மூத்த துறவியைப் பார்த்து “வணக்கம் புத்தரே” என்றார். அவரும் “வணக்கம் புத்தரே” என்றார். பிறகு இருவரும் வெவ்வேறு திசைகளில் செல்ல, ஒரு சீடர் “உங்களுக்கு அவரை முன்பே தெரியுமா?” என்று தனது குருவிடம் சந்தேகம் கேட்டார். “தெரியாது. ஆனால் எங்கள் இருவருக்குமே எதிரொலி விளையாட்டு தெரியும்” என்றார் துறவி.

புத்தரைக் கைவிடுதல்

பிரசித்தி பெற்ற காமாகுரா மடாலயத்திற்கு சீனத் துறவி ஹான் ஜிங் வந்திருந்தார். அவர் மிகவும் வயதான துறவி. பறவைகளின் கீச்சொலி, இலைகளின் சரசரப்பு, நீரோடையின் மெல்லிய ஓசை தவிர அமைதியாக இருந்த அந்த இடத்தைப் பார்த்ததும் ஹான் ஜிங்கிற்குப் பிடித்துவிட்டது. தியானம் செய்ய ஏற்ற இடம் என்று அந்தத் துறவி நினைத்தார். ஆனால் அந்த மடாலயத்தில் ஒரு ஈ இருந்தது. அவர் தியானம் செய்தபோது அந்த ஈ ரீங்கரித்துக்கொண்டே இருந்தது. அவரால் மனதை புத்தரிடம் செலுத்த முடியவில்லை. தினமும் தியானிக்க முயன்று முயற்சியைக் கைவிட்டார் ஹான் ஜிங். பிறகு ஒரு நாள் துறவிக்கு ஒரு யோசனை தோன்றியது. புத்தரைக் குறித்து தியானம் செய்வதைக் கைவிட்டு ஈயின் ரீங்காரத்தைக் குறித்து தியானித்தார். அது அவர் நீண்ட காலத்திற்குப் பிறகு செய்த மிக ஆழ்ந்த தியானமாக இருந்தது. அதன் பிறகு அவர் புத்தரை நினைக்கவேயில்லை.

கல்வியின் போதாமை

குரு யான்ஷூ தியானம் செய்வதற்காக மடாலயத்திற்கு வெளியே நீண்ட தூரம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு சீடருக்கு யான்ஷூவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. ஒருமுறை யான்ஷூ தியானத்திற்குக் கிளம்பியபோது சீடர் அவரைப் பின்தொடர்ந்தார். குரு காட்டை விட்டு வெளியேறி ஊரில் இருந்த ஒரு வீட்டிற்குள் நுழைவதைப் பார்த்தார். சிறிது நேரத்திற்குப் பின் அந்த வீட்டினுள் நுழைந்த சீடர், தமது குரு ஒரு பெண்ணுடன் தீவிர சல்லாபத்தில் இருந்ததைக் கண்டு அதிர்ந்தார். “குருவே, என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார். “ஏன், தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறாய்?” என்றார் யான்ஷூ.

“இன்மையை முழுமையால் நிரப்புகிறேன்” என்று குரு சொன்னதாகவும் ஐதீகம் உண்டு.

திடீர் பழம்

ஒரு பயணி வயல்களின் வழியே பயணித்துக்கொண்டிருந்தபோது புலி ஒன்று எதிரில் வந்தது. அவன் தப்பியோட, புலி துரத்தியது. ஒரு உயர்ந்த பாறையின் உச்சிக்கு வந்த பயணி, அதன் விளிம்பிலிருந்து தாவி எதிரே இருந்த காட்டுக் கொடியைப் பிடித்துக்கொண்டு தொங்கினான். அவன் தலைக்கு மேலே புலி நின்று உறுமியது. அவனுக்குக் கீழே இன்னொரு புலி அவனை சாப்பிடக் காத்திருந்தது. அந்தக் கொடி மட்டுமே அவனைத் தாங்கியது. இரு சுண்டெலிகள் அந்தக் கொடியை மெல்லக் கடித்துத் தின்னத் தொடங்கின. அப்போது தன் கையருகே ஒரு ஸ்ட்ராபெரிப் பழம் தொங்கிக்கொண்டிருந்ததை அவன் பார்த்தான். கொடியை ஒரு கையால் பிடித்துத் தொங்கியபடி இன்னொரு கையால் ஸ்ட்ராபெரியைப் பறித்துத் தின்றான். சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்!


குறிப்பு: இங்குள்ள ஜென் கதைகள் நானே சொந்தமாக எழுதியவை. எனவே இவற்றை அனுமதியின்றி சொற்பொழிவுகளில் பயன்படுத்துவதோ ஜென் கதைத் தொகுப்புகளில் சேர்ப்பதோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அஞ்சலி: ஏட்ரியன் ரிச்

March 29th, 2012

மொழிபெயர்ப்பாள நண்பர் லபக்குதாஸ் பெருமகிழ்ச்சியில் இருக்கிறார். பெண் கவிஞர் ஏட்ரியன் ரிச்(1929-2012)சின் மரணச் செய்திக்குப் பிறகு சிற்றிதழ்களிலிருந்து அவருக்குத் தொலைபேசி அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் வந்தவண்ணம் உள்ளன. ஏட்ரியன் ரிச்சின் கவிதைகளை மொழிபெயர்க்கவும் ஏட்ரியன் ரிச்சுக்கு அஞ்சலி எழுதவும் ஆர்டர்கள் குவிந்துகொண்டிருக்கின்றன என்கிறார் லபக்குதாஸ். இதையும் அவர் தொலைபேசியில்தான் என்னோடு பகிர்ந்துகொண்டார். சொல்லும்போது அவர் கண்கள் மின்னியதை அவர் குரலில் கேட்க முடிந்தது.

சிம்போர்ஸ்காவின் துயரச் சாவு கொடுத்த மகசூல் லபக்குதாஸ் வீட்டு சோபாவுக்குப் புதிய உறைகளைப் பெற்றுத் தந்திருந்தது. ஏட்ரியன் ரிச் விவகாரத்தில் டூவீலருக்குப் புதிய இருக்கை வாங்க முடியுமென நம்புகிறார்.

இது அவர் அஞ்சலி எழுதிக்கொண்டிருந்த சூட்டில் மொழியாக்கம் செய்த ஏட்ரியன் ரிச் கவிதை ஒன்று:-

விடுப்பு

கோடையானது பிறிதொரு தேசம், அங்கே பட்சிகள்
சொட்டும் இலைகளினூடே எங்களை விடியலில் விழிப்பூட்டின
எமதெல்லா விசேடங்களிற்கும் தமதொப்புதலை ஈந்தன.
சதை மீதான காற்றின் ஸ்பரிசம் இன்னமும் லேசாக, உன்னிப்பாக இருந்தது,
தனதொவ்வொரு சைகையும் ஒரு மலரில் முடிகின்ற
ஒரு லேடன் மரமொத்து புலன்கள் வளர்ச்சியடைந்தன.
அக்காக்கப்படாத பிரதேசங்களில் ஒரு பச்சைக் கால்வாயருகே
பீச் மற்றும் நெக்டரைன் பழங்களால் எமதிதழ்களைக் கறைப்படுத்தியும்
தங்கக் குளவிகளை அறைந்துகொண்டும்
விக்கர் கூடைகளிலிருந்தபடி நாம் இரவுணவருந்தினோம்.
பின்னர் முத்தமிட்டோம், சூரிய ஒளி பாய்ந்த பழச்சாறை அருந்தி
நிலப்பரப்பு எமது பிடிக்குள் மடங்கியது, தொலைவுகளுக்கு அப்பால் கிடந்த
பனிக்காலத்திற்கான நீண்ட மீள்நடையை யாதொரு சுவாசமும் நினைவுகூரவில்லை.

சிம்போர்ஸ்கா, சில்வியா ப்ளாத், எமிலி டிக்கன்ஸ், அன்னா அக்மதோவா வரிசையில் ஏட்ரியன் ரிச் இடம்பிடிப்பாரா என்பது நமது அஞ்சலி மொழிபெயர்ப்பாளர்களிடமே உள்ளது.


உசாத்துணை

குத்துக்கல்

March 26th, 2012

விசாரிப்புக்கு நன்றி
கூழுக்கும் மீசைக்குமான ஊசலாட்டமாய்
நகர்கிறது வாழ்க்கை

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar