Archive for the ‘கடிதம்’ Category

வாசகர் கடிதம்: கருத்து விசாரிப்பு

in கடிதம், கட்டுரை

என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பேயோன் சார் அவர்களுக்கு,

என் கவிதைத் தொகுப்பின் பிரிண்ட் அவுட் ஸ்பைரல் பைண்டிங் பிரதி கிடைத்ததா? மிகவும் கனமாக இருந்ததா? கவிதைகளைப் பற்றி உங்கள் கருத்துகளை அறிய ஆவலுடன் காத்திருக்கிறன்.

ஜெய்ஸ்ரீராம்,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை

*

வணக்கம் ஜெய்ஸ்ரீராம்.

அன்பு, மதிப்பு எல்லாம் கிடக்கட்டும். உங்கள் கவிதைத் தொகுப்பைப் படித்தேன். நீங்கள் சற்று நண்பர் என்பதால் உங்கள் கவிதைகள் தனிப்பட்ட முறையில் நன்றாக இருக்கின்றன. ஆனால் அவற்றைக் கவிதைக் கண்ணால் பார்க்கும்போது வெறுப்பு மண்டுகிறது. தூக்கத்தில் உங்கள் வரிகளை அரற்றித் தலையில் அடித்துக்கொள்கிறேன். அவ்வளவு சக்திவாய்ந்த கவிதைகள் உங்களுடையவை.

எந்த ஒரு படைப்பாளியால் ஒரு நல்ல வாசகனை இந்த மட்டிற்குத் தீவிரமாக பாதிக்க முடிகிறதோ, அப்போதுதான் அவன் படைப்பாளி என்ற அரிய அந்தஸ்தை அடைகிறான். உங்கள் விஷயம் எப்படியோ. உங்கள் தொகுப்பைத் தமிழ் எழுத்துச் சூழல் எப்படி எடுத்துக்கொள்ளும் என்பது சார்ந்து எனக்கு வெளிச்சம் இல்லை. அதற்குச் சாதகமான மதிப்புரைகள் கிடைக்கலாம், அல்லது சரேலென விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

நீங்கள் கேட்டுக்கொண்டபடி கருத்துச் சொல்லிவிட்டேன். உங்கள் கவிதைகள் உங்களைச் சுரணையற்றவராகச் சித்தரிக்க முயன்று வெற்றி பெற்றாலும் உங்களைப் புண்படுத்தக்கூடும் என்ற ஐயத்தையும் என் கருத்துகளால் நீங்கள் பயனடையக்கூடும் என்ற எரிச்சலையும் மீறி உங்களுக்கு வெளிப்படையாக மறுமொழி அளித்திருக்கிறேன். ஆனால் மதிப்புரை எழுதும் தூரம் மெனக்கெட விருப்பமில்லை. ஐநூறு கிடைக்கும். அதுவும் வந்ததும் கைவிட்டுப் போய்விடும். திருமணமாகிவிட்டதா உங்களுக்கு?

உங்கள் கவிதைகள் வாத்து, வரப்பு, பள்ளிப் பருவக் காதல்கள், வாத்தியார்கள், மாமா பெரியப்பா தாத்தா பாட்டிகள், மாட்டூர்திப் பயணங்கள், நாகப்பழத்தை உலுக்கிச் சாப்பிட்டமை என்று ஊர் நினைவுகளாகவே இருக்கின்றன. ஆனால் ஊரைப் பற்றி, மக்களைப் பற்றி, சாதி, வர்க்க நிலை, பண்பாடு பற்றி ஒரு சடங்கார்த்தக் குறிப்பிடல்கூட இல்லாததில் ஏமாற்றம் கண்டேன். இந்தக் கவிதைகள் ‘ஊர்மேய்’ பத்திரிகையில் வந்தபோதே இந்தப் போக்கை கவனித்துப் பத்திரிகையைத் தலை மேல் கவிழ்த்துக்கொண்டதுண்டு. ஆனால் அவை என்னையே முட்ட வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

நீங்கள் மூன்று கழுதை வயது ஆகும் வரை ஊரில் இருந்துவிட்டுச் சென்னைக்கு பத்தாண்டுகள் முன்பு வந்ததாகச் சொன்னீர்கள். இந்த ஆண்டுகளில் உங்கள் ஊரைப் பற்றியும் அங்கே உங்கள் வாழ்வியல் பற்றியும் நீங்கள் உணர்ந்துகொண்டது இவ்வளவுதானா? பின்பு சம்பவத் துணுக்குகளை ஏமாற்றிக் கவிதைகளாக்கியது போல் ஒரு நடை. கவிதை நடை என்பது வாக்கிங் விஷயம் அல்ல, அது ஒரு நடனம். மூத்த எழுத்தாளராக ஓர் அறிவுரை தருகிறேன்: ஊருக்குப் போய்விடுங்கள், நான்கு விஷயம் தெரிந்துகொள்ளுங்கள், 35 வயதுக்கு மேற்பட்டஉயிருள்ள அல்லது ‘மரணித்த’ கவிஞர்களின் கவிதைகளைப் படியுங்கள். பிறகு திரும்பி வந்து எழுதுங்கள். பிறகு பக்க எண்கள் எதற்கு? கடைசிப் பக்கத்திற்கு மட்டும் எண் கொடுத்தால் போதாதா?

நான் உங்களை நம்பிக்கையிழக்க வைப்பதாக நினைக்க வேண்டாம், என் நோக்கம் அதுதான் என்றாலும். நீங்கள் எழுத வந்துவிட்டீர்கள். ஒரு தொகுப்பு போட்டுவிட்டீர்கள். ஒரு கவிதைத் தொகுப்பு என்பது உயிருள்ள வஸ்து. என்னிடமிருந்தான இத்தனை எதிர்மறை விமர்சனங்களுக்கும் அப்பால் உங்கள் தொகுப்புக்கென்று ஒரு இடம் இருக்கவே செய்கிறது – உங்கள் வீட்டுக் குப்பைத் தொட்டி.

அடுத்த முறை பார்ப்போம்.

அன்புடன்
பேயோன்

கடிதம்: செய்தித்தாளைக் குழந்தைகள் பார்க்கலாமா?

in கடிதம்

பேரன்புடைய பேயோன் அவர்களே,

நான் காலையில் செய்தித்தாள் படிக்கும்போது எனது 8 வயது மகள் எட்டி பார்த்து அது என்ன, இது என்ன என்று ஒவ்வொரு கெட்ட செய்திக்கும் விளக்கம் கேட்கிறாள். அவை என்ன மாதிரியானச் செய்திகள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. “போடி உள்ளே!” என்று திட்டவும் மனம் வரவில்லை. இதனை எப்படி சமாளிப்பது?

எல். குழந்தைஸ்வாமி,
திருப்போரூர்

அன்பின் குழந்தைஸ்வாமி,

செய்தித்தாள்களைப் பெரியவர்கள் படிப்பதையே நான் ஊக்குவிப்பதில்லை. நீங்கள் “என்னடா?” என்றால் குழந்தைகளைப் பற்றி, குறிப்பாகப் பெண் குழந்தைகளைப் பற்றி, கேட்கிறீர்கள்.

எத்தனையோ விஷயங்களைக் குழந்தைகள் எதிர்கொள்ளக் கூடாது என்று பொத்திப் பொத்தி வளர்க்கிறோம். செய்தித்தாளையும் பத்திரிகைகளையும் அவைகளில் சேர்த்துக்கொள்ளுங்கள். வளர்ந்த பின்பு தெரிந்துகொள்ள வேண்டிய யதார்த்தங்களை அவர்கள் பிஞ்சிலேயே பழுத்துவிட்டால் உலகைப் பற்றிய அவர்கள் பார்வை அவநம்பிக்கை மிகுந்ததாகிவிடும். ஆழமான புரிதலும் சரியான வழிகாட்டலும் இல்லாத அவநம்பிக்கை, விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே செய்தித்தாளைக் குழந்தைகளின் கைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

உங்கள் குழந்தைக்கு உலகம் தெரிவது அவசியம் என்பதை மறுக்க முடியாது. இப்போதே தொடங்க வேண்டும் என்றால் அவளுக்கு “கோ கரிக்குலர் ஆக்டிவிட்டி”யாகத் தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்கச் செய்யுங்கள். வாரம் மூன்று படங்கள் என்ற டோஸ் சரியாக இருக்கும். அவள் மனமுதிரும் சமயத்தில் மனம் இறுகி உலகை எதிர்கொள்ளத் தயாராகியிருப்பாள். எல்லா அநீதிகளையும் வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு பகுதியாக ஏற்கும்படி அவள் பக்குவப்பட்டுவிடுவாள். அது வரை குழந்தையின் புத்தகங்களுக்கு அட்டை போடக்கூட செய்தித்தாளைப் பயன்படுத்தாதீர்கள்.

தவிரவும், செய்தித்தாள்கள் அவற்றின் உரிமையாளர்களின் வாழ்வாதாரத்திற்காக நடத்தப்படுபவை. அவர்களுக்கும் பேப்பர் கடைகளுக்கும் இடையிலான வியாபாரம். இது விசயத்தில் நாம் குறுக்கிட வேண்டாம்.

அன்புடன்
பேயோன்

கடிதம்: வாழ்க்கையின் அர்த்தம்

in கடிதம்

அன்புள்ள பேயோன் சார்,

உங்கள் படைப்புகளின் வாயிலாகவே நான் வாழ்க்கையை நுட்பமாக ரசிக்கக் கற்றுக்கொண்டேன். இருப்பினும் சமீபத்தில் எனது சில நண்பர்கள் சில தத்துவ நூல்களை அறிமுகப்படுத்தினர். அவற்றைப் படித்த பின்பு ஆழ்ந்த மனக் கலக்கத்திற்கு ஆளாகியுள்ளேன். வாழ்க்கை அர்த்தமற்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. இதனால் என் வாழ்க்கையில் அனைத்தும் கேள்விக்குள்ளாகிறது. நீங்கள் வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து அது பற்றிய தகவல்களைப் பதிவுசெய்பவர் என்பதால் உங்களிடம் கேட்கிறேன். வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளதா?

பெ. சரவணகிருஷ்ணன், M.A. B.Ed.
துபாய்

ஐயம்நீர்,

இந்தக் கேள்வியை நாங்கள் எண்பதுகளிலேயே கேட்டுவிட்டோம். இடையே மாதச் சம்பள வேலை, திருமணம், குழந்தைக் குட்டி என்று திசை மாறிவிட்டது. இப்போது இந்தக் கேள்வியே அபத்தமாகத் தோன்றுகிறது.

வாழ்க்கைக்கு அர்த்தம் இருந்தால் என்ன சார் செய்யப்போகிறீர்கள்? எப்படியும் உங்கள் குப்பையை நீங்கள்தானே கொட்ட வேண்டும்? அதுதானே வாழ்க்கையின் அர்த்தம்? விலங்குகளின் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா? நுண்ணுயிர்களின் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா? அரசியல் கட்சி அபிமானிகளின் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா? அளவிட முடியாத பிரபஞ்சத்தில் ஒரு துகளில் பத்துக் கோடியில் ஒரு பங்குகூட இல்லாத அளவு இருந்துகொண்டு வாழ்க்கையில் அர்த்தம் எல்லாம் எதிர்பார்ப்பது பேராசை இல்லையா? கேட்காமல் மூடிக்கொண்டிருப்பவனெல்லாம் மடையனா?

நீங்கள் கேட்டது நல்ல கேள்வி. வேலை வெட்டி இருப்பவர்கள் எல்லோரும் இப்படிக் கேட்டுவிடுவதில்லை. ஆனால் கேட்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் புத்திசாலி என்பது அதிலேயே நிரூபணமாகிவிட்டது. அதில் திருப்திப்பட்டுக்கொள்ளுங்கள். “அஞ்சுவது அஞ்சாமை பேதமை” என்றார் வள்ளுவர். “கேள்விகள் கேட்காமல் வாழ்ந்துவிட்டுப் போ” என்றார் ஆத்மாநாம். சிந்தனை என்பது இருபக்கமும் கூரான கத்தி போன்ற ஒரு பெரும் வரம். அதைத் தவறான முறையில் பயன்படுத்தினால் அசிங்கப்படுவீர்கள்.

ஒரு விதத்தில் பார்த்தால், மகிழ்ச்சிதான் வாழ்க்கையின் அர்த்தம். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறது. இல்லை என்றால் இல்லை. மகிழ்ச்சி நிலையாக இருப்பதில்லை. சில சமயங்களில் அது துன்பத்திற்கு வழி விட்டு ஒதுங்கிக்கொள்கிறது. இம்மாதிரி சமயங்களில் வாழ்க்கையின் அர்த்தத்தை பூதக் கண்ணாடி வைத்துத்தான் தேட வேண்டும். எனவே உங்கள் கேள்விக்கு பதில்: வாழ்க்கை விட்டு விட்டு அர்த்தமுள்ளது.

அன்புடன்
பேயோன்

மணவாழ்க்கை: மேலும் கடிதங்கள்

in கடிதம்

அன்புள்ள சார்,

வாழ்க்கைத் துணை தொடர்பான ஒரு கடிதத்துக்கு உங்கள் பதிலைப் பார்த்தேன். என் பிரச்சனைக்கு நீங்களே தீர்வு என்று தோன்றியது. பிரச்சனை இதுதான் சார் – நான் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் தப்பாகிறது. சாதாரணப் பேச்சுகூட சண்டையில் முடிகிறது. எப்போது சனி-ஞாயிறு வருமோ என்ற கவலையிலேயே இளமை கழிகிறது. என்னதான் செய்வது? என் மனைவியை எப்படிப் புரிந்துகொள்வது?

இவண்

சூசை D.
தி.நகர்

அன்பின் சூசை D.,

பெண்களைப் புரிந்துகொள்ள முயன்று சிரமப்பட வேண்டாம். அவர்களே புரியவைத்துவிடுவார்கள். உங்கள் திருமணம் தொடங்கி ஆயுட்கடைசி வரை அவர்கள் அதைத்தான் செய்கிறார்கள். அதை அவர்கள் “மணவாழ்க்கை” என்பார்கள். கவலையே படாதீர்கள், இப்போது புரியாவிட்டாலும் இறுதியில் நீங்கள் பெண்கள் “ஸ்பெஷலிஸ்ட்”-ஆகத்தான் சாவீர்கள். சுமங்கலியாகச் சாவதன் ஆண் வடிவம் இது.

அன்புடன்
பேயோன்

* * *

அன்புள்ள பேயோன் சார்,

நான் உங்கள் நீண்டகால வாசகி. வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் ஒரு இளைஞனின் வேதனைகளை ‘வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் ஒரு இளைஞனின் வேதனைகள்’ என்ற உங்கள் நாவலில் சிறப்பாக வருணித்திருந்தீர்கள். அதே கோணத்தில் உங்களிடம் ஒரு ஆலோசனை கேட்க விரும்புகிறேன்.

எனக்குப் பெரியோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்தே பெற்றோருடன் வளர்ந்ததால் அவர்கள் மீது கொள்ளைப் பிரியம் வைத்திருக்கிறேன். அவர்களை விட்டுப் பிரிந்து இரண்டு நாட்கள்கூட இருந்ததில்லை. அதே போல நானும் என் தம்பி, தங்கையும் இணைபிரியாத பாசம் உள்ளவர்கள். யாரோ ஒரு மூன்றாம் மனிதனுடன் இருப்பதற்காக இதுநாள்வரை வளர்த்த பாச உறவுகளை விட்டுச் செல்லலாமா? உலக நடைமுறை அதுதான் என்றாலும் எனக்கு மனம் ஒப்பவில்லை. இது விஷயத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்கலாம் என விரும்புகிறேன். தயவுசெய்து உதவவும்.

இப்படிக்கு
ஸ்ரீமதி

அன்பின் ஸ்ரீமதி,

உங்கள் உறுதியான அற உணர்வைப் பாராட்டுகிறேன். பெண்கள் திருமணமான பின்பு வேறொருவர் வீட்டில் குடியேறும் நிகழ்வுகளை நானும் பார்த்திருக்கிறேன். உண்மையில் அவை தவிர நான் வேறு எதையும் பார்த்ததில்லை. இதுதான் நம் நாட்டு இயற்கை நியதி.

ஒரு பெண் திருமணமானதும் அவளது அசல் சொந்தங்களைக் கைவிட்டு அன்னியர்களின் வீட்டில் புகுவது பிதுரார்ஜிதக் கலாச்சாரத்தின் (patriarchal culture) விளைபொருளாகும். கலாச்சாரமற்ற பண்டைய சமூகங்களில் இளைஞர்கள் வளர்ந்தவுடன் அவர்களை ராணுவத்தில் சேர்த்துப் போருக்கு அனுப்பிவிடுவார்கள். பெண் பிறந்தவீட்டை விட்டுப் புகுந்தவீடு செல்வதும் அதைப் போன்றதே. நமக்கென்று வீடு வாசல் இருக்கும்போது ஏன் இன்னொருவர் வீட்டுக்குப் போக வேண்டும்?

திருமணமாகிப் புகுந்தவீடு செல்லும் பெண்ணுக்கு அந்த வீட்டில் என்ன நடக்கிறது? கணவனின் தாய் ஓய்வெடுக்க, அந்தப் பெண்ணே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது. கணவனின் நானாவிதத் தேவைகளையும் பூர்த்திசெய்ய வேண்டியிருக்கிறது. குடும்பப் பொறுப்பு என்ற பெயரில் ஒன்பது மாதம் குழந்தைச் சுமையை அவள் அனுபவிக்கிறாள். அதன் பின்பு தாயாகவும் பாடுபட வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் சம்பளம், போனஸ்கூடக் கிடையாது. நல்ல குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாலே இந்தக் கதிதான். மோசமான குடும்பத்தில் சிக்கினால் என்ன ஆவாள்? எப்போதாவது அவளது பெற்றோர் தவறாமல் வருடத்திற்கு ஒருமுறை நான்கைந்து மாதங்கள் அவளுடைய கணவன் வீட்டில் தங்கும்போது மட்டுமே ஏதோ சிறிது நிவாரணம் கிடைக்கிறது.

என்னைக் கேட்டால் பெண்கள் திருமணமான பின்பு பெற்றோருடனே இருக்க வேண்டும். அவர்கள் திருமணம் ஆனதையே காரணமாகக் கொண்டுகூட நிரந்தரமாகப் பெற்றோருடன் இருக்கலாம். அப்போதுதான் அந்த உறவு விட்டுப்போகாது. கணவன் எங்கும் ஓடிவிடப்போவதில்லை. ஒரு மின்னஞ்சல், குறுஞ்செய்தி அனுப்பினால் வந்து பார்க்கப்போகிறான். அல்லது ஏதாவது ஒரு வார இறுதியில் கணவன் வீட்டில் விருந்தாளியாகத் தங்கிவிட்டு வரலாம், சில புத்திசாலிப் பழங்குடிகள் மத்தியில் இந்தப் பழக்கம் இருக்கிறது. கணவன் உடன் இல்லாதிருப்பது முக்கியமானது. “Good fences make good neighbours” என்பார்கள் ஆங்கிலத்தில். இன்று நிலவும் கணவன்-மனைவிப் பிரச்சினைகளுக்கெல்லாம் வேலி தாண்டும் வெள்ளாடுகளே காரணம்.

திருமணம் என்ற பெயரில் இளம்பெண்களின் குடும்பங்கள் பிரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். இது ஒரு மாபெரும் இயக்கமாக உருவெடுக்க வேண்டும். அப்போதுதான் எங்களுக்கெல்லாம் நிம்மதி.

அன்புடன்
பேயோன்

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar