Archive for the ‘கடிதம்’ Category

கடிதம்: வாழ்க்கைத் துணை

in கடிதம்

ஐயா,

என் வீட்டில் எனக்குப் பெண் பார்க்க ஆரம்பித்துள்ளனர். இந்த ஆண்டிற்குள்ளாக எனக்குத் திருமணம் நடந்துவிடும் என்றே எண்ணுகிறேன். ஆயினும் எந்த வகையான பெண் எனக்குப் பொருத்தமான மனைவியாக இருப்பாள் என்பதில் எனக்குக் குழப்பமே. என் ஜாதகப்படி நான் அப்பாவி, அன்பானவன், அமைதியானவன். இத்தகைய ஜாதகருக்கு எந்த மாதிரி வாழ்க்கைத் துணைவி சரியாக இருப்பாள்? உங்கள் மேலான ஆலோசனையை நாடி…

ப்ரியங்களுடன்…

வெங்கட்மரணன்
சென்னை

* * *

அன்பின் வெங்கட்மரணன்,

மிக்க மகிழ்ச்சி. என் வாழ்த்துக்களை உங்களுக்கு இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன். பிறகு முடியாது.

முதலில் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான சில கட்டுக்கதைகளை உடைக்க விரும்புகிறேன். நமக்குப் பிடித்த பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்துகொள்வது, காதலித்துத் திருமணம் செய்துகொள்வது எல்லாம் முதல் மூன்று மாதங்களுக்குத்தான் நிற்கும். அதற்குப் பின்பு வாழ்க்கை தொடங்கியதும் தேர்வுகள், பொருத்தங்கள், ஏன், பொருளாதாரப் பொருத்தங்கள்கூட அர்த்தமற்றவை என்று தெரியத் தொடங்கிவிடும். எனவே கவனமாகத் தேர்ந்தெடுப்பதெல்லாம் வீண் வேலை. இதை மனதில் கொண்டு வேலையை ஆரம்பியுங்கள்.

வாழ்க்கையிலேயே முக்கியமான முடிவு, முன்னதற்கு ஒரு துணையைத் தேர்ந்தெடுப்பதுதான். மேற்கத்திய கலாச்சாரம் தனிநபர் சார்ந்து இயங்குவது. ஒரு மனிதன் சமூகத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக வாழ்நாள் முழுதும் அவலமானதொரு மணவாழ்க்கையில் படிப்படியாக இற்றுப்போகும் கூத்து அங்கே நடப்பதில்லை. அபாயத்தின் முதல் அறிகுறிகளிலேயே சுதாரித்து விவாகரத்துச் செய்துவிடும் சமூகம் அவர்களுடையது. நம்முடையது மணவாழ்க்கைமையச் சமூகம்.

காதல் திருமணத்தில் ‘ரொமான்ஸ்’ அம்சம் திருமணத்திற்கு முன்பே கிடைத்துவிடுகிறது. அதனால்தான் அதற்கு மரியாதை. அதன் பின்பு மணவாழ்க்கை நாசமாகப் போனால்கூட அது நாமே வித்திட்ட தவறு என்கிற பெருமையாவது மிஞ்சும்.

பெரியோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அப்படியல்ல. திருமணம் என்ற நிரந்தர ஒப்பந்தத்தைச் செய்துகொண்ட பின்புதான் அந்தத் திருமணம் நடந்திருக்க வேண்டுமா கூடாதா என்பதே நமக்குத் தெரியும். ஒரு பெண்ணுடன் காலம் தள்ளுவது சாத்தியமா இல்லையா என்பது அவளிடமிருந்து பிரியவே முடியாத நிலைக்கு நம்மை ஆளாக்கிக்கொண்ட பின்பே நாம் தெரிந்துகொள்வோம். பல காதல் திருமணங்களில் இது திருமணத்திற்கு முன்பே தெரிந்துவிடும். இதுதான் இந்த இருவகை திருமணங்களுக்கு இடையிலான வித்தியாசம்.

பிறப்பதை “Thrown into existence” என்பார் பிரெஞ்சு எழுத்தாளர் சார்த்தர். அதாவது நம் விருப்பத்தையும் அறிதலையும் மீறி இருத்தலுக்குள் எறியப்படுகிறோமாம். அதைவிடத் திருமணம்தான் அப்படி, இல்லையா? போனால் திரும்பி வர முடியாத ஒருவழி ஒற்றையடிப் பாதை அது. ஆனால் அதற்காக நீங்கள் கவலையோ வருத்தமோ பட வேண்டியதில்லை. அவையெல்லாம் பிரயோசனப்படாது. ‘பெண் விடுதலை வேண்டும்!’ என்று கதறும் பல ஆண்களை எனக்குத் தெரியும்.

அடிப்படையில் மணவாழ்க்கை என்பது விவாகரத்தைத் தவிர்ப்பதற்கான ஓர் ஆயுட்காலச் சடங்குதானே அன்றி வேறில்லை. முதலில் உடலுறவும் சில்லறைச் சந்தோசங்களும் பின்பு குழந்தைகளும் கொஞ்சம் சுமையைக் குறைப்பது போல் தெரியலாம். ஆனால் தப்பிப்பதற்கு உள்ள கொஞ்சநஞ்ச வாய்ப்புகளையும் பறித்துக்கொள்வதே அவற்றின் முதன்மை நோக்கம். மலை வாசஸ்தலத் தற்கொலை முனைகள் அழகாக இருப்பதில்லையா, அது போல.

மலைகளையும் நதிகளையும் போல் நிரந்தரமானது மணவாழ்க்கை. இதை நீங்கள் உணர்ந்தால் வெட்டிக் கனவுகளையும் வீண் எதிர்பார்ப்புகளையும் தவிர்க்கலாம். சிலருக்கு ஆன்மீக ஈடுபாடு உதவுவதாகக் கேள்விப்படுகிறேன். சிலருக்குப் புத்தகங்கள், சிலர் கதை எழுதுகிறார்கள், சிலருக்கு ஷாப்பிங் மால்கள். லௌகீக மைல்கற்கள் இதயநோய்க்குத் தாயத்து போல் கொஞ்சம் உதவலாம்.

இப்போது ‘சில்வர் லைனிங்’கிற்கு வருவோம். மக்களுக்குக் காதல் திருமணங்களிடம் ஏற்படும் அப்பாவி வயிற்றெரிச்சல் உங்கள் திருமணத்தில் ஏற்படாது. சில காதலர்கள் காதலிக்காக வரதட்சணையைத் தியாகம் செய்கிறார்கள். உங்களுக்கு அந்தப் பிரச்சினை இருக்காது. உங்கள் வாழ்க்கையில் முதன்முதலாக யதார்த்தம் வலது காலை எடுத்து வைத்து நுழையும் வரை எல்லாம் சுகமாகவே இருக்கும். அதற்குப் பிறகுதான் இருக்கிறது இல்லறம்.

இன்னொரு விதியை மனதில் இருத்திக்கொள்ளுங்கள்; இது வாழ்க்கையில் பெரும்பாலான விசயங்களுக்குப் பொருந்தும்: எப்போதுமே உங்களைவிட அதிகமாகக் கஷ்டப்படும் தம்பதிகள் இருப்பார்கள். காதல் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு இணையாக இவர்கள் சண்டை போடக்கூடியவர்கள். இவர்களோடு உங்களை ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். சொல்ல முடியாது, இம்மாதிரி ஒப்பீடுகள் உங்கள் மணவாழ்க்கையைத் தேநிலவாகத் தெரியச் செய்யலாம். எக்காரணத்தைக் கொண்டும் பரஸ்பர அழிவுக்குத் திட்டமிடாதீர்கள். பிறகு எல்லாவற்றையும் இழந்துவிடுவீர்கள். அது அது அதனதன் போக்கில் நடக்கட்டும். நீங்களாக எதையும் செய்யாதீர்கள்.

நீங்கள் திருமணத்தில் நம்பிக்கை இழப்பதற்காக நான் இதையெல்லாம் சொல்லவில்லை. எதற்கும் துணிந்த ஆண்கள்தான் திருமணம் செய்துகொள்ளத் தகுதியுள்ளவர்கள். திருமணம் பலவீனமான இதயம் கொண்டவர்களுக்கல்ல. குழந்தைத் திருமணம் ஒழிக்கப்பட்டது வேறு எதனால்?

நீங்கள் அன்றாடம் பார்க்கும் தம்பதிகளைக் கவனியுங்கள். துரோகத்தின் கரிய நிழலில் இளைப்பாறுவது போலவா தெரிகிறார்கள்? பிறவி தம்பதிகள் போல் அல்லவா தெரிகிறார்கள்? அதற்காக அவர்களிடையே நல்லிணக்கமோ பேச்சுவார்த்தையோ இருப்பதாகப் பொருளல்ல. அது ஓர் உத்தி. இந்த உத்தியும் ஆயிரங்காலத்துப் பயிர்தான். இதைக் கற்றுக்கொள்ளுங்கள். சமூகத்தை, குறிப்பாக உங்கள் வீட்டுக் குழந்தைகளை, நம்பவைக்க அது பயன்படும். நம்பிக்கைதானே வாழ்க்கை?

கவலைப்படாதீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

அன்புடன்
பேயோன்

கடிதம்: அடித்தல், திருத்தல்

in கடிதம்

எழுத்தாளர் பேயோன் அவர்களுக்கு

நான் உங்கள் தீவிர வாசக அடிமை. எனக்குத் திருமணமாகி 14, 8 ஆகிய அகவைகளில் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதுநாள்வரை மழலையாக இருந்த இரண்டாவது குழந்தை இப்போதெல்லாம் பெரிய இம்சையாக மாறிக்கொண்டிருக்கிறான். அவன் முன்கோபத்தில் கத்தும்போது, வரம்பு மீறிப் பேசும்போது நாலு அறை விட்டு அடக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் உங்களைக் கலந்தாலோசிக்காமல் அதைச் செய்வது குறித்துத் தயக்கமாக உள்ளது. குழந்தைகளை அடித்து வளர்ப்பது சரியா?

இப்படிக்கு
ஸ்ரீனி விக்டர்
தாம்பரம் (தென்மேற்கு)

அன்பின் ஸ்ரீனி விக்டர்,

இந்தக் கேள்வியை தினமும் நான்கு பேர் என்னைக் கேட்கிறார்கள். நான் அவர்களைக் கடிதமாக எழுதி அனுப்பும்படி சொல்லிவிடுகிறேன்.

உண்மையில் உங்கள் கேள்வி என்னை அதிர்ச்சியில் தள்ளுகிறது. முதல் குழந்தையை எப்படி வளர்த்தீர்கள்? உங்கள் மூத்த மகன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்தால் குறிப்பிட்டிருப்பீர்கள் என்பதால் அவன் குற்றச் செயல்களில் ஈடுபடுவதில்லை எனப் புரிந்துகொள்கிறேன். அவன் குற்றங்களில் ஈடுபடாததை வைத்து நீங்கள் அவனை அடித்துத்தான் வளர்த்தீர்கள் என்பதும் புரிகிறது. இரண்டாம் மகனை அடிக்க மட்டும் ஏன் தயங்குகிறீர்கள்? அவனும் குழந்தைதானே?

அடித்து வளர்ப்பது சரியா என்று கேட்கிறீர்கள். குழந்தை வளர்ப்பு அன்போடு செய்யப்படும் கடமையாகும். அன்பு என வரும்போது சரி தவறு பற்றி யோசிப்பது நடைமுறையாகாது. எல்லா குழந்தைகளும் சமமாகப் பிறப்பதில்லையே. சில குழந்தைகள் ஒழுங்காக வளர்கின்றன. ஆனால் பெரும்பாலான குழந்தைகள் பிறக்கும்போதே தறுதலையாக இருக்கின்றன. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா, அடியாத மாடு படியுமா என்றெல்லாம் நமது முன்னோர்கள் கேட்டிருக்கிறார்கள். வளையாது, படியாது என்பதே நமது பதிலாக இருக்க வேண்டும்.

பெற்றோர் என்ற மிகப்பெரிய வாக்கு வங்கிக்காகப் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் குழந்தைகளை அடித்துத் திருத்துதல் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ள சமகாலச் சூழலில் அந்தப் பணி பெற்றோரின் தலையில் வந்து விழுந்திருக்கிறது. எனவே பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கும் சேர்த்துத் தங்கள் குழந்தைகளை நையப் புடைக்க வேண்டுமே தவிர சரியா தவறா என்று விநாடி வினா ஜல்லி அடிக்கக் கூடாது. அத்தகைய செய்கை எதிர்காலத்தில் மேலும் அதிக அரசியல்வாதிகளுக்கே வழிவகுக்கும்.

அன்புடன்
பேயோன்

கடிதம்: இலக்கிய சினிமா

in கடிதம்

அன்புள்ள பேயோன் சார்,

மகத்தான உலக இலக்கியங்கள் திரைப்பட வடிவம் பெற்றுள்ளன. தமிழில் அவைகளுக்கு நிகரான இலக்கியப் படைப்புகள் இருந்தபோதிலும் வெறும் டப்பாங்குத்து படங்களே வந்தவண்ணம் உள்ளன. உங்கள் ஆயிரம் பக்க நாவல்களில் ஒன்று கூடக் கரையேறியபாடில்லையே? இந்த நிலை ஏன் நிலவுகிறது? தமிழன் செத்துவிட்டானா?

வி. அர்த்தநாறி
செங்குன்றம்

அன்பின் அர்த்தநாறி

தமிழின் ஆகப்பிரபலமான நாவலாகிய ‘பொன்னியின் செல்வ’னுக்கே இந்தக் கதிதான். அதைப் போய் இன்னும் ஏன் படமாக்காமல் விட்டுவைத்திருக்கிறார்கள் என்று தினமும் நான்கு பேராவது என்னிடம் கேட்கின்றனர். நான் அலுப்பில்லாமல் அவர்களுக்கு ஒரே பதிலைத்தான் சொல்கிறேன்: “உன்னால முடிஞ்சா நீ எடுயேன் பாப்போம்.” ஏனென்றால் சினிமா பார்ப்பதைவிட உருவாக்குவது கடினம்.

ஒரு சராசரி சினிமா பார்வையாளனையும் அதே சராசரி திரைப்பட இயக்குநரையும் எடுத்துக்கொள்வோம். இந்தப் பார்வையாளன் சீவி சிங்காரித்துக்கொண்டு திரையரங்குக்குச் சென்று உட்கார்ந்து படம் பார்த்துவிட்டு வருகிறான், அவ்வளவுதான். ஆனால் இயக்குநரோ, பார்வையாளன் திரையரங்குக்கு வருவதற்குள் அந்தப் படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம், இசை. படப்பிடிப்பு, விநியோகம், தயாரிப்பாளர்களை மேய்த்தல் உள்பட எல்லா வேலைகளையும் செய்து முடிக்க வேண்டும். கொஞ்சம் தாமதமானால்கூட பார்வையாளன் பிரிண்ட் இல்லை என வேறு படம் பார்க்கப் போய்விடுவான். இயக்குநருக்குள்ள ஒரே வசதி, அவரும் நடுநடுவே உட்கார்ந்துகொள்ளலாம். இதுதான் இவர்களின் வேறுபாடு.

ஒரு படத்தை உருவாக்குவது எளிதானதல்ல. ஏனென்றால் அது கடினமானது. கதையில் “வேதனையை மறைத்துக்கொண்டு கோபமாகச் சிரித்தான்” என்று எளிதாக எழுதிவிடுகிறோம். இதைக் காட்சிப்படுத்துவதற்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா? நிறைய செலவாகும். முதலில் இப்படி நடிக்க ஆளில்லை. வேதனையைக் காட்ட ஒரு முகபாவம், அதை மறைத்துக்கொள்ள ஒரு முகபாவம், அடுத்து கோபமாக இருப்பதற்கு ஒரு முகபாவம், பிறகு சிரிப்பதற்கு ஒரு முகபாவம் என நான்கு தனித்தனி முறை நடிக்கச் சொல்லிவிட்டு நான்கு காட்சிகளையும் ஒரே ஷாட்டில் ‘மெர்ஜிங்’ தொழில்நுட்பத்தால் இணைக்க வேண்டும். பார்வையாளன் ரசித்துக் கைதட்டிவிட்டுப் போய்விடுவான் பஸ்ஸைப் பிடித்தோ டூவீலர் கொண்டுவந்திருந்தால் அதிலோ அல்லது வீடு அதிக தொலைவில் இல்லை என்றால் ஆட்டோவிலோ (சைக்கிளில் யாரும் சினிமாவுக்குப் போவதில்லை. அதில் என்னவோ ஒரு கௌரவக் குறைச்சல்). எல்லா மெனக்கெடலும் இயக்குநருக்கே.

பண்டைய தலைமுறை எழுத்தாளர்கள் சினிமாவை மனதில் வைக்காமல் எழுதினார்கள். அதனால்தான் ‘பொன்னியின் செல்வன்’, ‘இன்னொரு செருப்பு எங்கே’ போன்ற காவியங்கள் கடைசி வரை திரையேறவில்லை. எனவேதான் சென்ற தலைமுறை எழுத்தாளர்களான நாங்கள் நாவல், சிறுகதை எழுதும்போதே பார்த்து எழுதுகிறோம். எதுவெல்லாம் சாத்தியமோ அதை மட்டும்தான் எழுதுகிறோம். “ஓட்டலில் சுவையான சப்பாத்தி சாப்பிட்டான்” என்று எழுதினால் சுவையான ஓட்டல் சப்பாத்திக்கு எங்கே போவது? பிறகு ஓர் இயக்குநர் நம் சிறுகதையைப் படிக்கும்போது அவன் மனதில் ரூ. 5 கோடிக்குள் கதை விரிய வேண்டும். எனது சமீபத்திய சிறுகதை ஒன்றை முடிக்கும்போது அடைப்புக்குறிகளில் “இது சினிமா கதை மாதிரியே இல்லை?” என்று சேர்த்திருக்கிறேன். இந்த முனைப்பு இல்லாமல் கிளாசிக்குகளைத் திரைக்கு எடுத்துச் செல்ல முடியாது. அதிகபட்சம் அவற்றைக் கையில் எடுத்துக்கொண்டு போய் சினிமா பார்க்கலாம். அதனால் என்ன பிரயோஜனம்? “இதோ பார் ஹன்சிகா மோட்வானி!” என்று வந்தியத்தேவனிடம் காட்டவா முடியும்? தோலை உரித்துவிடுவாள் குந்தவைக்காரி.

அன்புடன்
பேயோன்

கடிதம்: கூடுதல் குழந்தை

in கடிதம்

அன்புள்ள பேயோன் சார்,

நான் உங்கள் எழுத்துகளைத் தொடர்ந்து படித்துவரும் நீண்டகால தீவிர வாசகன். எனக்குத் திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது. மனைவி உயிரோடு இருக்கிறார். 10 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இப்போது உறவினர்கள் முதல் குழந்தையைத் தனியாக விடாதே, இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள் என்று நச்சரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். எனக்குக் குழப்பமாக இருக்கிறது. உங்கள் ஆலோசனை தேவை.

கோபி,
செட்டிப்பாளையம்

பி.கு.: இந்தக் கடிதத்தில் தவறுகள் ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும்.

* * *

அன்பின் கோபி,

என் எழுத்துகளைத் தொடர்ந்து படித்துவருவதற்கு நன்றி. நலமாக இருக்கிறீர்களா?

உங்கள் கேள்வி, முதல் குழந்தை பெற்றுக்கொண்ட எல்லோருக்கும் எழும் கேள்விதான். இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ள மனைவி உயிரோடு இருந்தால் மட்டும் போதாது. உங்கள் இருவருக்கும் இன்னொன்றை மேய்க்கத் திராணி இருக்கிறதா என்று பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்த சில ஆண்டுகளிலேயே சமூகம் அவர்களிடம் இன்னொரு குழந்தையை எதிர்பார்க்கத் தொடங்கிவிடுகிறது. சமூகம் என்பது புற்றுநோய் போன்றது. நாம் அதன் உயிரணுக்கள். தனது உயிரணு எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதே புற்றுநோயின் செயல்பாடு. நாம் இதற்கு உடன்பட வேண்டும் என்றில்லை. இரண்டு குழந்தைகளைக் கட்டி மேய்க்கத் திணறும்போது சமூகம் உதவிக்கு வராது. அழுத்தம் கொடுக்கும் உறவினர்கள் கைகொடுக்க மாட்டார்கள். அவர்களுக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கும். அதனால்தான் அவர்கள் உங்களையும் தங்களாக மாற்ற முயல்கிறார்கள். எனவே உங்கள் வசதி எப்படி என்று மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள்.

சில நாடுகளில் இரண்டாம் குழந்தையைப் பெற்றுப்போடுவதன் விளைவுகளைச் சட்டங்கள் அங்கீகரிக்கின்றன. யுரேஷியாவில் (சீனாவைத் தாண்டி நேராகச் சென்று ஜப்பான் கடலில் இடப்பக்கம் திரும்பி மீண்டும் ஓர் இடது எடுத்தால் வரும் நாடு) இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன்பு முதல் குழந்தையின் ஒப்புதலைப் பெற வேண்டும். முதல் குழந்தையின் சம்மதம் இல்லாமல் இன்னொரு குழந்தையைப் பெறுவது அபராதத்திற்குரிய குற்றமாகும். அதே போல தெலுங்கர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் பம்ப்பிஸ்தானில் ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற கடுமையான விதி அமலில் உள்ளது. இங்கே கூடுதல் குழந்தை, தண்டனைக்குரிய குற்றம். இரண்டாம் குழந்தை பிறந்தால் முதல் குழந்தை ஐந்தாண்டுகள் சிறையில் வாழ வேண்டியிருக்கும்.

கூடுதல் குழந்தையின் சிக்கல்களைச் சில பெண்கள் தனியாக சமாளித்ததை மகாபாரதத்தில் காணலாம். சாந்தனுவை மணம் முடிக்கும் கங்கை, இரண்டாம் குழந்தை வேண்டாம் என முடிவெடுக்கிறாள். இந்த நிராகரிப்பை அவள் குக்கர் விசில் எண்ணிக்கை போன்ற ஒரு குழப்பத்தால் முதல் குழந்தையிலிருந்தே தொடங்கிவிடுகிறாள். ஒரு கட்டத்தில் சாந்தனு பொறுமை இழந்து அவளிடம் இப்படிக் கேட்கிறான்: ‘குழந்தைகளை ஆற்றில் குளிப்பாட்டும்போது ஏன் கையை எடுத்துவிடுகிறாய்?’ கங்கைக்குத் தன்னை யாராவது கேள்வி கேட்டாலே பிடிக்காது. பதில் சொல்ல வாயைத் திறந்தால் தண்ணீரும் மீனுமாக வெளியே கொட்டுவதும் ஒரு காரணம். கேள்வி கேட்கப்பட்ட கோபத்தில் கணவனைக் கைவிட்டுச் செல்கிறாள் கங்கை. இப்போது போய்ப் பார்த்தீர்கள் என்றால் வளர்ந்த ஆட்களே கங்கையில் மிதப்பதைக் காணலாம். கங்கையில் விடப்படும் செத்த சாரீரங்களில் எத்தனை இரண்டாவது குழந்தைகள் என்று தெரியவில்லை. இதற்கும் உங்கள் கடிதத்திற்கும் தொடர்பில்லை. ஆனால் எனக்கு இப்படி ஏதாவது சொல்லியாக வேண்டும்.

கிரேக்க புராணம், பாரசீக கதைசொல்லல் என உங்கள் பிரச்சினைக்கு சம்பந்தம் இல்லாமல் நிறைய எழுதலாம். உங்கள் தற்போதைய குழந்தை அலுத்துவிட்டது, மாறுதலுக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்றால், கர்ப்ப செலவுகள், குழந்தைச் செலவுகள் போன்றவைக்காக சேமிக்கத் தொடங்குங்கள். முதல் குழந்தையை வளர்க்கும் அனுபவம் இரண்டாம் குழந்தையின் வளர்ப்புக்கு ஓரளவு உதவும். கூடுதலாக ஒரு பாக்கெட் பால் வாங்குங்கள். முதல் குழந்தை சற்றுப் பெரியது என்றால் தம்பி/தங்கை பாப்பாவைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அதனிடமே விடுங்கள். க்ரஷ் வசதியைப் பயன்படுத்துங்கள். இம்மாதிரி விசயங்களைப் பட்டியல் போட்டுத் தீர்வு கண்டால் கூடுதல் குழந்தை ஒரு சுமையே இல்லை. கடைசியாக, நம்பகமான ஆணுறைகளைப் பயன்படுத்துங்கள். எல்லோரும் அதை மறந்துவிட்டுப் பின்பு புலம்புகிறார்கள்.

வாழ்த்துகளுடன்
பேயோன்

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar