Archive for the ‘குறும்படம்’ Category

மனமாற்றம் – குறும்படம்

in குறும்படம்

« குறுநாடகம்

(குறும்படத் திரைக்கதை)

பள்ளிக் கரும்பலகையில் டைட்டில்கள் தோன்றுகின்றன. முதலில் ‘மனமாற்றம்’, அடுத்து நடிகர்கள் பெயர். இறுதியில் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் பேயோன்’.

Establishing shot: தமிழக வரைபடம்.

காலை நேரம்.

ஃப்ளாஷ் கட்: ஒரு பள்ளியின் தரைத்தளத்தில் உள்ள Staff Room வாசல். உள்ளேயிருந்து ஆசிரியர் வெளிப்படுகிறார். அவர் கையில் உள்ள தமிழ்ப் பாடநூல் ஜூம் ஆகிறது.

ஆசிரியரின் POV: பின்னணியில் வயலின் இசை தொடங்குகிறது. இந்த இசை, வசனம் தொடங்கும் வரை நீடிக்கும். ஆசிரியர் வலப்பக்கம் திரும்பி மாடிப்படிகளில் ஏறுகிறார். மாடிப்படி ரெயிலிங்கில் ஒரு சிறுவன் சறுக்கிக்கொண்டு இறங்குகிறான். ஒரு பெண் ஆசிரியர் நம் ஆசிரியரை முந்திக்கொண்டு படிகளில் தவழ்ந்து ஏறி முதல் தளத்தை அடைந்ததும் எழுந்து ஓடி மறைகிறார்.

ஆசிரியரின் POV: முதல் தளத்திற்கு வந்தாயிற்று. எதிரில் ஒரு சிறுமி வருகிறாள். இவரைப் பார்த்து “உள்ளேன் ஐயா” என்கிறாள். ஒரு வகுப்பறை வாசலுக்கு நேராக இரு மாணவர்கள் முட்டி போட்டிருக்கிறார்கள். எதிர்ப்படும் ஓர் ஆசிரியர் வலக்கையை உயர்த்தி முகமன் கூறுகிறார். மதில் சுவருடன் சேர்ந்த ஒரு தூணில் சாய்ந்து ஓர் ஆண்-பெண் ஆசிரியர் ஜோடி முத்தமிட்டுக்கொண்டிருக்கிறது. இருவரும் முத்தத்தை நிறுத்திக்கொண்டு வணக்கம் சொல்கிறார்கள்.

ஆசிரியரின் POV: ஒரு பால்காரர் மெல்ல சைக்கிள் ஓட்டிக்கொண்டு வருகிறார். ஆசிரியர் அவருக்கு வழி விடுகிறார். குறுக்கே ஒரு பட்டாம்பூச்சி காரிடாரினூடே பறந்து போகிறது. பட்டாம்பூச்சிக்குக் கொஞ்சம் footage. எதிரே ஓர் ஆசிரியர் சஃபாரி சூட்டில் வருகிறார். பட்டாம்பூச்சி அவர் தோளில் எச்சமிடுகிறது. அவர் அதைக் கவனிக்கவில்லை.

ஆசிரியரின் POV: வழியில் ஒரு வகுப்பறை பூட்டியிருக்கிறது. உள்ளேயிருந்து யாரோ ஓயாமல் கதவைத் தட்டுகிறார்கள். அதைக் கடந்து சென்று அடுத்த வகுப்பறையினுள் பார்க்கிறார். இரு நபர்கள் ஜாக்கி வைத்து ஒரு காரை உயர்த்தி டயரை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆசிரியரின் POV: தரைத்தளத்தில் மைதானம் தெரிகிறது. குழந்தைகள் உடற்கல்வி வகுப்பில் ஆசிரியரின் மேற்பார்வையில் உடற்பயிற்சி செய்கிறார்கள். அவர்கள் dissolve ஆகி அதே இடத்தில் சில சிறுவர்கள் கிரிக்கெட் ஆடுகிறார்கள்.

ஆசிரியரின் POV: ஓர் அறையின் வாசலின் மேல் உள்ள “ஆய்வுக்கூடம்” என்ற பலகை ஜூம் ஆகிறது. ஆசிரியர் கடந்து செல்கிறார்.

ஆய்வுக்கூடத்தில் மாணவர்கள் பியூரெட் பிப்பெட்களில் அமிலங்களை ஊற்றுவதை ஜன்னல் வழியே பார்க்கிறோம். அவர்கள் ஊற்றியது பெரும் நெருப்புடன் வெடிக்கிறது.

பின்னணியில் எல்லாம் பற்றி எரிய ஆசிரியர் அலட்டிக்கொள்ளாமல் ஸ்லோ மோஷனில் கம்பீரமாக நடக்கிறார்.

மீண்டும் ஆசிரியரின் POV: அவர் செல்ல வேண்டிய வகுப்பறை நெருங்குகிறது. வகுப்பறைக்குள் நுழைய, பேசிக்கொண்டிருக்கும் மாணவர்கள் அமைதியாகி நேராக உட்கார்கிறார்கள்.

ஃப்ளாஷ் கட்: ஆசிரியர் கையிலுள்ள பாடநூலின் “மனமாற்றம்” என்ற கட்டுரைப் பக்கம்.

எல்லா மாணவர்களின் பார்வையும் பாடநூலில் பதிந்திருக்கிறது.

ஆசிரியர்
(புத்தகத்தைப் பார்த்து)

மனமாற்றம். இது எளிதில் நிகழ்வதல்ல. ஒரு நிலையில் உள்ள மனம், வேறொரு நிலைக்கு மாறுவதென்றால் –

ஜூம் இன்: ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் ஒரு பையன் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான்.

காமிரா அந்தப் பையனின் பார்வை செல்லும் திசையில் செல்கிறது. சில பெரிய மாணவிகள் மைதானத்தில் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களைப் பிரித்துவைக்கத் தீயணைப்புப் படையினர் முயல்கிறார்கள்.

குளோஸ் அப்: ஆசிரியரின் முகம். அது கடுப்பில் இருக்கிறது.

ஆசிரியர்
(ஜன்னலோர மாணவனை நோக்கிக் கத்துகிறார்)

கோபியர் கொஞ்சும் ரமணா!

ஆசிரியரின் குரல் அந்தப் பையன் காதில் விழாமல் தொடர்ந்து வேடிக்கை பார்க்கிறான். குளோஸ் அப்: பையனின் முகம். அவன் மெல்லப் புன்னகைக்கிறான்.

குளோஸ் அப்: கடுப்பில் உள்ள ஆசிரியரின் கண்கள்.

ஆசிரியர்
(இன்னும் சத்தமாக)

கோபாலகிருஷ்ணா!

மாணவன் திடுக்கிட்டு ஆசிரியரைப் பார்த்து நிமிர்ந்து உட்கார்கிறான்.

ஆசிரியர்
(இயல்பு நிலைக்குத் திரும்பி)

ஒரு நிலையில் உள்ள மனம்…

இனிய வயலின் இசை பின்னணியில் ஒலிக்க, காமிரா மெல்லப் பின்வாங்கி மேலே உயர உயரச் சென்று செயற்கைக் கோள் உயரத்திற்கு வந்துவிடுகிறது. தமிழகத்தை நோக்கி ஓர் அம்புக்குறி தோன்றுகிறது, வகுப்பறையைக் காட்ட.

– இறுதிக் கடன்கள்* –

* End credits

இன்றைய செய்தித்தாள் (திரைக்கதை)

in குறும்படம், சிறுகதை

இது எனது இன்றைய செய்தித்தாள் கட்டுரைக்கான திரைக்கதை. அந்தக் கட்டுரையைப் படிக்காமல் கீழ்க்காண்பது புரியாது.

*

காட்சி 1

ஒரு சமகால வீட்டின் மரக் கதவில் பெயின்டில் வரையப்பட்ட 70 என்ற எண்ணுக்கு க்ளோசப்.

இரு நொடிகள் கழிந்த பின் இருபத்தி சொச்ச வயது முஷ்டி ஒன்று அதை இருமுறை தட்டுகிறது. யாரும் வரவில்லை. இன்னும் இருமுறை தட்டுகிறது. இன்னும் யாரும் வரவில்லை. பின்னணியில் இரு நொடிகளுக்கு பியானோ இசை.

கை ஸ்லோ மோஷனில் வலப்பக்கமாக மேல்நோக்கி நகர்ந்து காலிங் பெல்லை அழுத்துகிறது. கதவு திறக்கிறது. ஒரு நடுத்தர வயதுக்காரர் பனியன், வேட்டி அணிந்து நிற்கிறார். அவருக்குப் பின்னால் அந்த வீட்டின் சிறிய ஹால். பிரீஸ் பிரேம்.

வாய்ஸ் ஓவர்: இவருதான் இந்தப் படத்தோட கதாநாயகர். இவருக்குப் பின்னணி எல்லாம் கிடையாது. இப்பதான் மொத மொதலா இந்தப் படத்துல வர்றாரு.

காமிரா ஒரு சுற்று சுற்றி காலிங் பெல்லை அழுத்தியவனைக் காட்டுகிறது. இளைஞன். வெளியூரிலிருந்து வந்ததற்கு சாட்சியாக டிராவல் பேகுடன் நிற்கிறான். பிரீஸ் பிரேம்.

வாய்ஸ் ஓவர்: இவன் கதாநாயகரோட நெப்யூ. இப்பத்தான் வெளியூர்லருந்து வர்றான். பைய வெச்சிட்டு ரூமுக்குள்ளாற போயிடுவான். அப்புறம் வர மாட்டான்.

இளைஞன்: (கதாநாயகரின் காலில் விழுந்து எழுகிறான்) மாமா, எப்படி இருக்கீங்க?

வாய்ஸ் ஓவர்: நல்லாத்தான் இருக்கேன் தம்பி. இப்பதான் உங்க ஊர்லருந்து வர்றியா?

இளைஞன்: (சுற்றுமுற்றும் பார்த்து) மாமா, இந்தக் குரல் எங்கேந்து வருது?

மாமா: நான்தான் பேசுறேன். நல்லாயிருக்கியா?

இளைஞன்: நல்லாயிருக்கேன். இருங்க, குளிச்சிட்டு வரேன்.

மாமா: தாராளமா வாப்பா.

இளைஞன் பாத்ரூமுக்கு போகும் வழியில் சோபாவைக் கடந்து செல்கிறான். காமிரா சோபாவில் கிடக்கும் தமிழ் செய்தித்தாளைப் பார்க்கிறது. பிரீஸ் பிரேம்.

வாய்ஸ் ஓவர்: இதுதான் இன்னிக்கி வந்த பேப்பர். ஞாயித்துக்கிழமைங்கிறதால நாலு ரூவா. இதுல தமிழ்ல எழுதிருக்கு.

பின்னணியில் மெல்லிய புல்லாங்குழல் இசை தொடங்குகிறது.

இளைஞன்: (செய்தித்தாளைப் பார்த்துவிட்டு மாமாவை நோக்கித் திரும்புகிறான்) மாமா, இது இன்னிக்கி பேப்பரா? காலையிலேந்து இத யாருமே படிக்கலியா? இல்லன்னா கண்டி இப்பதான் கடைலேந்து வாங்கிட்டு வந்தீங்களா? பொதுவா அன்னன்னிக்கி பேப்பர் அந்தி சாயறதுக்குள்ள வித்துருமே? ரெண்டு வருஷத்துல இந்த ஊரு ரொம்ப மாறிப்போச்சு மாமா.

இளைஞன் பையை சோபாவுக்கு அடியில் தள்ளிவிட்டு பாத்ரூமுக்குள் மறைகிறான்.

கதாநாயகரின் முகத்திற்கு க்ளோசப். பின்னணியில் வேகமான மிருதங்க இசை. கதாநாயகர் முகத்தில் திகைப்பு. காமிரா அவர் முகத்தை ஐந்து முறை ஜூம் இன், ஜூம் அவுட் செய்கிறது.

கதாநாயகர்: (டி.வி. மேல் இருக்கும் சிறிய பிள்ளையார் படத்தை எடுத்து அதனிடம்) ம்ம்ம்? வந்ததும் வராததுமா…, இவன் என்ன சொல்லிட்டுப் போறான்?

கதாநாயகர் சோபாவை நோக்கி விரைகிறார். செய்தித்தாளை எடுத்துப் பார்க்கிறார்.

க்ளோசப்: செய்தித்தாள் ஸ்லோ மோஷனில் புரட்டப்படுகிறது.

கதாநாயகரின் குரல் வாய்ஸ் ஓவர்: இவன் சொல்றதுலயும் உண்மை இல்லாம இல்ல. கிட்டத்தட்ட தெனமுமே பேப்பர் இந்த வீட்டுக்கு வந்து சேர்றதுக்குள்ள கசங்கிப் போயிடுது. இதுக்கு பேப்பர் போடுற குழந்தைத் தொழிலாளிய கொற சொல்ல முடியாது. ஏன், சொல்ல வக்கில்லைன்னு கூட சொல்லலாம்.

க்ளோசப்: கதாநாயகரின் வாய்: கோமதி, கோமதி, இன்னிக்கு பேப்பர் படிச்சியா?

திரையில் சமையலறையைக் காட்ட வெள்ளை மார்க்கரால் அம்புக்குறி வரையப்படுகிறது. பின்னணியில் –

சமையலறையிலிருந்து கோமதியின் குரல்: ஆமா, படிச்சிட்டேன். அதுக்கு என்ன இப்போ?

க்ளோசப்: கதாநாயகரின் முகம்: தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன். நீ வேலையப் பாரு.

கதாநாயகர் சோபாவில் அமர்ந்து பேப்பரை தொடர்ந்து புரட்டுகிறார்.

கதாநாயகர்: (உள்ளறைப் பக்கம் திரும்பிக் கூப்பிடுகிறார்) டேய், இங்க வா.

உள்ளே ஒரு அறையிலிருந்து குண்டாக ஒரு சிறுவன் வருகிறான்.

வாய்ஸ் ஓவர்: இவன்தான் குமார். நம்ம கதாநாயகரோட வாரிசு. ஸ்கூல்ல படிக்கிறான்.

குமார்: என்னப்பா?

கதாநாயகர்: இன்னிக்கு பேப்பரைப் படிச்சியா?

குமார்: நான் கிழிக்கலப்பா.

கதாநாயகர்: அட அதுக்கில்லடா. சரி, போ போ.

குமார் போகத் திரும்புகிறான்.

கதாநாயகர்: டேய், ஒரு நிமிசம் இங்க வா.

குமார் நிற்கிறான்.

குமார்: என்னப்பா?

கதாநாயகர்: அகமதாபாத் சிவில் மருத்துவமனை வெளம்பரம் எத்தனாம் பக்கத்துல வருது சொல்லு பாப்போம்?

குமார்: ஒம்பதாம் பக்கத்துலப்பா.

கதாநாயகர்: சரி. நீ போ.

குமார் போகிறான்.

கதாநாயகர்: (காமிராவை நோக்கி) அந்த வெளம்பரம் வந்திருக்குறதே…, இவன் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.

Dissolve: fade out.

காட்சி 2

திரையில் எழுத்துக்கள்: சில நொடிகளுக்குப் பின்…

சிறிய அறை. மேஜையில் கணினி, அருகில் படுக்கை, அதில் மூடிய நிலையில் லேப்டாப். இவற்றைக் காட்டியபடி காமிரா லேப்டாப்பை நெருங்குகிறது.

கதாநாயகரின் கை லேப்டாப்பைப் பக்கவாட்டில் திருப்பி புத்தகம் போல் திறக்கிறது. ஸ்கைப்பியில் லாகின் ஆகிறது.

திரையில் இன்னொரு நடுத்தர வயது மனிதர் தோன்றுகிறார்.

வாய்ஸ் ஓவர்: இவர்தான் நம்ம கதாநாயகரோட தம்பி. புள்ள குட்டிங்களோட அமெரிக்காவுல படிக்காரு.

கதாநாயகரின் தம்பி: நாம காலைலதானே பேசினாப்ல?

கதாநாயகர்: (காமிராவை, அதாவது லேப்டாப்பின் வெப்க்யாமை நோக்கி) இதப் பாத்தியா?

…என்று செய்தித்தாளைக் காட்டுகிறார்.

கதாநாயகர்: (காமிராவை நோக்கி) இது இன்னிக்கி பேப்பர். வீட்ல எல்லாரும் படிச்சாச்சு. எப்புடி இன்னும் கசங்காம இருக்கு பாரு.

கதாநாயகரின் தம்பி ஆச்சரியப்படுகிறாப்ல.

கதாநாயகரின் தம்பி: (காமிராவை நோக்கி) அடடே, இது எப்புடி?

திரும்பிப் பார்த்து மனைவி, குழந்தைகளைக் கூப்பிடுகிறார் –

கதாநாயகரின் தம்பி: சுமதி, வெங்கி, நரேந்திரா, எல்லாருமா சேந்து இங்க வாங்களேன்!

நிறைய நகைகள் அணிந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, 8, 10 வயதுச் சிறுவர்கள் முதலிய எல்லோரும் வந்து பார்க்கிறார்கள்.

கதாநாயகரின் தம்பி: (அவர்களிடம்) இது இன்னிக்கு பேப்பராம். கசங்கவே இல்ல பாரு. பாத்திருக்கியா இது மாதிரி?

கதாநாயகரின் தம்பியின் மனைவி: ஐய, போதுமே உங்கண்ணன் பெருமை!

கதாநாயகர் காமிராவை நோக்கி தம்பியிடம் செய்தித்தாளைப் புரட்டிக் காட்டுகிறார். அகமதாபாத் சிவில் மருத்துவமனை விளம்பரம் வெளிப்படுகிறது.

கதாநாயகர்: (காமிராவை நோக்கி) உனக்கு இதோட கதை தெரியுமாடா?

ஃப்ளாஷ்பேக்: கதாநாயகர் தன் மகனிடம் அகமதாபாத் சிவில் மருத்துவமனை பற்றிக் கேட்ட காட்சி புகையாலான ஃப்ரேமுக்குள் வருகிறது.

ஃப்ளாஷ்பேக் முடிந்ததும் நடப்பு உலகம் –

கதாநாயகர்: (காமிராவை நோக்கி) சரி, இதுக்குத்தான் கூப்புட்டேன். அப்பறமா பேசுவோம்.

கதாநாயகரின் தம்பி லேப்டாப் திரையிலிருந்து மறைகிறார்.

கதாநாயகர் செய்தித்தாளைப் படிக்கிறார்.

அவர் தோளின் பின்பக்கத்திலிருந்து செய்தித்தாளுக்கு க்ளோசப்.

காமிரா இப்போது கதாநாயகரை மூன்றடி தூரத்திலிருந்து காட்டுகிறது. கதாநாயகர் கூரையைப் பார்க்கிறார்.

கதாநாயகர் குரல் வாய்ஸ் ஓவர்: எனக்கு இப்பவே ஒரு கவிதைத் தொகுப்பு எழுதியாகணும். ஆனா இந்த கசங்காத பேப்பர் என்னை சுண்டியிழுக்குது. ஆனாலும் பாருங்க, ஒரு பேப்பரை முதல் முறையா படிக்கிற சொகம் கிடைச்சாலும்… முன்னாடியே படிச்சிட்டதால நேத்து பேப்பர படிக்கிற மாதிரி இருக்கு.

புரட்டும்போது அகமதாபாத் சிவில் மருத்துவமனை விளம்பரப் பக்கம் வருகிறது.

காமிரா கோணம் இப்போது வலப்பக்கம் கதாநாயகரையும் இடப்பக்கம் கணினி முன் அமர்ந்திருக்கும் குமாரையும் காட்டுகிறது. கதாநாயகர் விளம்பரத்தையும் மாறி மாறிப் பார்க்கிறார். குமார் கவனிக்கவேயில்லை. கதாநாயகரின் தலையிலிருந்து வெளிப்படும் சிந்தனை பலூனில் குமார் “ஒம்பதாம் பக்கத்துலப்பா” என்று சொல்லும் காட்சி தோன்றுகிறது. பிறகு பலூன் மறைகிறது.

கதாநாயகர்: (காமிராவை நோக்கி தலையை மெல்ல அசைத்து வாஞ்சையுடன் புன்னகைக்கிறார்) இந்த காலத்துப் பிள்ளைங்க!

அடுத்த இரு நொடிகளில் ஏழெட்டு ஷாட்களில் கதாநாயகர் மீதப் பக்கங்களைப் புரட்டுகிறார். படித்து முடித்துவிட்டு செய்தித்தாளை இந்தக் காட்சியில் மட்டும் சோபா எதிரில் வந்திருக்கும் டீப்பாய் மேல் விசிறியடிக்கிறார்.

கதாநாயகர்: ஸ்ஸ்ஸ்ஸப்பா!

கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது. கதாநாயகர் சந்தேகத்துடன் டீப்பாய் மீதுள்ள செய்தித்தாளைத் தூக்கி அடியில் பார்க்கிறார்.

காலிங் பெல் சத்தம் கேட்கிறது.

கதாநாயகர் எழுந்து போய் கதவைத் திறக்கிறார். பக்கத்து வீட்டு நடுத்தர வயது மனிதர் பனியனுடன் நிற்கிறார்.

பக்கத்து வீட்டுக்காரர்: நல்லாருக்கீங்களா? இன்னிக்கு பேப்பர் கெடைக்குமா?

சமையலறை அருகிலிருந்து லாங் ஷாட்.

கதாநாயகர்: அதுக்கென்ன, கெடைச்சா போச்சு.

பக்கத்து வீட்டுக்காரர்: அதச் சொல்லுங்க!

கதாநாயகர் சோபாவுக்குத் திரும்பிச் சென்று டீப்பாயிலிருந்து கலைந்து கிடக்கும் செய்தித்தாளை எடுத்து கவனமில்லாமல் ஒழுங்குபடுத்துகிறார். பின்னர் வாசல் வரை நடந்து வந்து பக்கத்து வீட்டு மனிதரிடம் கொடுக்கிறார்.

கதாநாயகர்: இந்தாங்க எடுத்துட்டுப் போங்க. இன்னிக்கு புதுசா நிறைய செய்திகள் வந்திருக்கு!

பக்கத்து வீட்டுக்காரர்: இல்லையா பின்னே? உங்க வீட்டு பேப்பராச்சே!

கதாநாயகரின் குரல் வாய்ஸ் ஓவர்: இனி இந்த பேப்பரோட கதை கந்தல்தான்.

பக்கத்து வீட்டுக்காரர் செய்தித்தாளுடன் கிளம்பிச் செல்கிறார்.

காமிரா அவருடன் வெளியே செல்கிறது. லலலல்லா என்கிற ஹம்மிங் தொடங்குகிறது. காமிரா பக்கத்து வீட்டுக்காரர் தம்முடைய வீட்டுக்குள் புகுவதைக் காட்டிவிட்டு தெருவில் தொடர்ந்து செல்கிறது.

“கதை, திரைக்கதை, வசனம் பேயோன்” என்ற வார்த்தைகளுடன் க்ரெடிட்கள் ஓடத் தொடங்குகின்றன.

வாய்ஸ் ஓவர்: குறிப்பு – திரையில் சப்டைட்டில் போடும் இடத்தில் படம் விழாமல் காலியாக விடவும்.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar