Archive for the ‘புனைவு’ Category

சம்பவ இரவு

in சிறுகதை, புனைவு

மழையைப் பார்த்தால் மயிலுக்கு நடனமாடவும் எனக்கு சிகரெட் பிடிக்கவும் வேண்டும். கனத்த மழை. பத்தரை மணிக்கு ஆரம்பித்து இன்னும் நிற்கவில்லை. இப்போது மணி பதினொன்றேமுக்கால். மயிலுக்கு சாராயம் ஊற்றிக்கொடுத்த மாதிரி ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறான் வருணன். இடையில் ஒரு ஐந்து நிமிடம் எங்கேயாவது நிறுத்துவானா என்று பார்த்தால் அறிகுறியே காணோம்.

இது சரிப்பட்டு வராது என்று செருப்பு, குடையோடு வீட்டை விட்டு வெளியே வந்தேன். வாசலில் நின்று உள்ளே தூங்கிக்கொண்டிருக்கும் மனைவி, மகனைப் பூட்டிவிட்டுத் தெருவில் இறங்குவதற்குள் பேன்ட் நனைந்துவிட்டது. என் தெருவில் பெரிதாகப் பள்ளம் எதுவும் இல்லை. எதிர்பாராமல் மழைநீர்ப் பள்ளத்தில் காலை விடுவதற்கு, விழுவதற்கு வாய்ப்பில்லை. அது வேறு தெருவில் வேறு ஆட்களுக்கு.

நேராகப் போய் வலப்பக்கம் திரும்பிச் சிறிது தூரம் நடந்தால் ஒரு பெட்டிக்கடை எப்போதும் இருக்கும். நம்பிப் போகலாம். பாதி தூரம் நடக்கும்போது ‘டுப்’ என்ற சத்தத்தோடு மொத்த இடமும் அவிந்துபோனது. மழை வரும் முன்னே, மின்வெட்டு வரும் பின்னே என்பது நியூட்டனின் நான்காம் விதி.

ஒரே இருட்டு. எதுவுமே தெரியவில்லை. இந்த இருட்டில் சின்னக் கல் போதும் தடுக்கி விட. எனக்குத் தரை மேல் ஒரு புதிய மரியாதை வந்தது. மெதுவாக நடந்தேன். குடையும் கருப்பாகப் போயிற்றா, நான் நனையாமல் இருந்தது மட்டும்தான் எனக்குத் தெரிந்தது. கையில் குடையின் பிடியை உணர்ந்தது வாஸ்தவம்தான். ஆனால் நான் சொல்ல வருவது புரிந்துகொள்ளப்படும் என்று நினைக்கிறேன். தெருவில் வேறு யாரும் இல்லை. மழை காரணத்தால் புழுக்கம் இல்லாததால் மக்கள் உள்ளேயே கிடந்தார்கள். ஓர் உள்ளூர் சிற்பியின் இன்ஸ்டாலேஷன்கள் போல் ஆங்காங்கே மாடுகள் நனைந்தபடி படுத்திருந்தன அல்லது அமர்ந்திருந்தன, வித்தியாசம் தெரியவில்லை. எப்படித் தெரிந்தது என்றால் கண்களுக்கு மை போன்ற இருட்டு பழகத் தொடங்கியிருந்தது.

குல்ஃபிகாரன் அமைதியாகச் சின்ன விளக்கோடு போய்க்கொண்டிருந்தான். திருப்பம் வந்தது. தலையைத் திரும்பிப் பார்த்தால் அந்தக் கடையைக் காணவில்லை. மூடியிருந்தது. மூடித்தான் இருந்ததா மெழுகுவர்த்தி இல்லையா என்று அருகில் போய்ப் பார்த்தேன். கடை முழுமையாக மூடியிருந்தது. முதல் தூறலிலேயே ஏறக்கட்டியிருப்பான் போல. உன்னை நம்பி நான் பிறக்கவில்லை என்று கடை கடந்து நடந்தேன்.

கொஞ்சூண்டு நிலவொளியில் ஒரு குழந்தைகளின் தெருவோர கிரிக்கெட் பிட்ச் அளவுக்குப் பெரிய மழைநீர்க் குட்டை இருந்தது. சற்று முன் வேகமாகக் கடந்து குழப்பிவிட்டுப் போன வாகனம் எழுப்பிய அலைகள் ஓயத் தொடங்குவதும் பெய்துகொண்டிருந்த மழை கிளப்பிய நீர்த்துளிச் சிதறல்களும் காற்றின் தள்ளி விடலும் தள்ளாடி மிதந்து ஒதுங்கிய குப்பைகளுமாய்க் குட்டை பிஸியாக இருந்தது. எவ்வளவு ஆழம் என்று தெரியவில்லை. வீடுகளின் வாசற்படிக்கட்டுகள் வழியே பாதம் மூழ்காமல் நடக்கத் தடையாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

பெரும் மழைக் குட்டையில் இறங்கினேன். செருப்பு மூழ்கியது. கால்களை நீரில் வைத்து எடுக்க எடுக்கக் குட்டை நீர் பேன்ட்டின் பின்னால் அடித்தது. எதிரில் ஒரு ஆட்டோ வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டு வந்தான். நான் மெதுவாகப் பக்கவாட்டில் நகர்ந்து வழி விட்டேன். தேங்கிய நீரை என் மேல் அடித்துவிட்டு அவன் போய்விட்டான். வண்டியை நிறுத்தித் திட்டு வாங்கிக்கொள்ளக்கூடப் பொறுமை இல்லை கூமுட்டைக்கு.

எங்கே போய்க்கொண்டிருந்தேன்? நெடுஞ்சாலையில் பல கடைகள் திறந்திருக்கும். மழையோ புயலோ திறந்திருக்கும். ஏனென்றால் லாரிகள், சரக்கு வண்டிகள் கடக்கும் வழி அது. சற்றுத் தொலைவில் ஒரு டூவீலர்காரன் விழுந்து வாரியிருந்தான். நான்கு பேர் கைகொடுத்து உதவிக்கொண்டிருந்தார்கள். பிரச்சினை எதுவும் இல்லை. அந்த ஆள் வண்டியைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டான். இந்தப் பக்கமெல்லாம் கரன்ட் இருந்தது.

குறிஞ்சிப்பூவாக ஒரே ஒரு பெட்டிக்கடை மட்டும் திறந்திருந்தது இதயத்துக்கு அமுதமாக – ஹ்ருதயாமிர்தமாக – இருந்தது. மூடிகீடித் தொலைத்துவிடப்போகிறான் என்று அவசரமாகச் சென்று ஒரு சிகரெட் கேட்டு சட்டைப்பையில் கையை விட்டால் நூறு ரூபாய் வந்தது. இளித்துக்கொண்டே நீட்டினேன். கடைக்காரன் ‘தோடா’ என்ற முகபாவத்துடன் தலையசைத்து “சில்ற குடுங்க சார். கொடைய மடக்குங்க” என்றான். “சில்ற இல்லீங்க” என்றேன் குடையை மடக்கி. “எங்கிட்டயும் இல்ல, என்ன பண்ணச் சொல்றீங்க?” என்றான் அதே மனநிலையில். “நூர்ருவா வெச்சிக்கிங்க. சில்றைய அப்புறமா வாங்கிக்கிறேன்” என்றேன். “இல்ல சார், சில்ற இருந்தா குடுங்க.”

நான் கொஞ்சம் சும்மா இருந்தேன். அங்கிருந்தபடியே வேறு ஏதாவது கடை திறந்திருக்கிறதா என்று பார்த்தேன். இல்லை. கோபம், வெறுப்பு, ஏமாற்றம் பொங்கின. “இந்த நூர்ருவா எனக்கு யூஸ் ஆகாதுப்பா, வெச்சிக்க” என்று ரூபாயை ஒரு சாக்லெட் டப்பா மூடி மேல் அறைந்து வைத்து வேகமாக நகர்ந்தேன். “அலோ, அலோ!” என்று பின்னாலிருந்து கத்தினான் கடைக்காரன். நான் வந்த வழியே சென்றுகொண்டிருந்தேன்.

சகலத்தையும் சபித்துக்கொண்டு சிறிது தூரம் சென்ற பின்பு பின்னால் ‘தபதப’. கூடவே, “அலோ, சார்!” திரும்பிப் பார்த்தேன். நான் வாழ்க்கையில் அதற்கு முன்பு பார்த்தேயிராத ஓர் இளைஞன் என் கையில் சிகரெட்டையும் நூறு ரூபாய்க்கு மீதிச் சில்லறை மாதிரியான ஒரு தொகையையும் அழுத்திவிட்டுத் திரும்பி ஓடிப்போனான்.

எனக்குக் காறித் துப்ப வேண்டும் போல் இருந்தது. நான் எந்நேரமும் தீப்பெட்டியைச் சுமந்து செல்பவன் அல்லன். குறிப்பாக மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டிருக்கும்போது. செல்பேசியைக்கூட வீட்டில் வைத்துவிட்டு வந்திருந்தேன். சிகரெட்டையும் பணத்தையும் அதனதன் இடத்தில் வைத்தேன். அந்தக் கடைக்குத் திரும்பிப் போய் பற்றவைப்பது பின்விளைவுகள் கொண்டதாக இருக்கும் என்று தோன்றியது. எனக்கும் அதில் ஆர்வம் தணிந்திருந்தது.

இதெல்லாம் ஒரு விசயமே இல்லை என்பது போல் மழை அப்படியே பெய்துகொண்டிருந்தது. நான் என் வீட்டை நெருங்கினேன். பார்க்கவே பயங்கர போர் அடித்தது. நாம் இதற்குள் இருக்க வேண்டிய ஆள். வெளியே வந்ததற்குக் கிடைத்த தண்டனைதான் இத்தனையும் என்று தோன்றியது. இடதுகையால் பூட்டைப் பிடித்துக்கொண்டு வலதுகையை பேன்ட் பைக்குள் விட்டேன். சாவி இல்லை துழாவினேன். கடையில் நின்றபோது தலையைத் துடைத்துக்கொள்ளக் கைக்குட்டையை வெளியே எடுத்தபோது வெளியே விழுந்திருக்கும். இப்போது நான் அந்தக் கடைக்குப் போய் சிகரெட்டைப் பற்றவைத்தே ஆக வேண்டும்.

*

சம்பவக் காலை
சம்பவ மதியம்
சம்பவ மாலை

மரணக் கிணறு

in சிறுகதை, புனைவு

(ஓர் இன்ஸ்பெக்டர் குமார் மர்மக் கதை)

“வெல், வெல், வெல்!” என்றார் இன்ஸ்பெக்டர் குமார் கிணறுகளை எண்ணியபடி. மூன்று வீடுகளுக்குப் பின்னே மூன்று கிணறுகள். ஈரம் சொட்ட இரண்டு பிணங்கள். மூன்றாவது ஆள் மட்டும் பிழைத்துவிட்டான். ஒரு பிணத்தின் திறந்த வாயில் இன்னும் இருந்த கிணற்று நீரில் இரண்டு தலைப்பிரட்டைகள் விளையாடிக்கொண்டிருந்தன. இரு பிணங்களும் மிகையான அட்டென்ஷனில் படுத்திருப்பது போலிருந்தது. ஏனென்றால் விண்வெளி வீரர்களின் பிராணவாயு போல் முதுகில் கனமான செவ்வகப் பாறை கட்டப்பட்டிருந்தது. இருவருக்கும் 30 வயதுக்கு மேல் இருக்காது. பிழைத்தவனை உடை மாற்றி உட்கார வைத்திருந்தார்கள்.

சம்பவக் கிணறுகளைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் திரண்டிருந்தது. தொலைக்காட்சி ஒளிப்பதிவில் விழ எட்டிப் பார்ப்பது போல் பல தலைகள் பிணங்களைப் பார்க்க எம்பின.

குமார் எரிச்சலடைந்தார். “ஃபர்ஸ்ட் ரோ – பாத்துட்டீங்கன்னா நகருங்க, மத்தவங்களுக்கு வழி விடுங்க” என்று அதட்டினார். முதல் வரிசைக்காரர்கள் முணுமுணுத்தபடி விலகிச் செல்ல பின்னாலிருந்தவர்கள் முன்னே வந்தனர். மூன்று கிணறுகளையும் எட்டிப் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.

“யாரு முதல்ல பாத்தது?” என்று குமார் கேட்டதும் எங்கோ மூலையிலிருந்து ஒரு இளைஞன், “நான்தான் சார்!” என்று கைதூக்கிக் கத்தினான். எல்லோரும் அவனுக்கு வழி விட்டார்கள்.

“என்ன நடந்துது சொல்லு.”

“என் பேரு கணேஷ் சார். அங்க படுத்திருக்காருல்ல சார் மாணிக்கம் (முதல் பிணம்), அவரப் பாக்க வந்தேன் சார். தொப்புனு சத்தம் கேட்டுச்சு. இவரு (பிழைத்தவன்) கெணத்துலருந்து ஏற ட்ரை பண்ணிட்டிருந்தாரு. நான் ஒரு கயிறப் போட்டு மேல ஏத்துனேன். பக்கத்துக் கிணத்துலயும் ஆள் விழுந்திருக்குன்னு இவர் சொன்னாருன்னு உள்ள பாத்தா ஒரு ஆள் கெடந்தாரு. பாடிய வெளிய எடுத்தோம். அதுக்கப்புறம் என் ஃப்ரெண்டப் பாக்கப்போனா அவர் வீட்ல இல்ல. சரி, கெணத்துல இருப்பாரான்னு பாத்தேன். அங்கதான் சார் பொணமாக் கெடக்குறாரு!” என்று முடிக்கும்போது குரல் கம்மியது அந்த இளைஞனுக்கு.

இன்ஸ்பெக்டர் மாற்று ஆடை அணிந்த மூன்றாமவனை ஏற இறங்கப் பார்த்தார்.

“என்னய்யா, கல்லு சரியா கட்டலியா?” என்றார்.

“ஆமா சார், பொழச்சிட்டன் சார்” என்று குழைந்தான் அந்த வாலிபன்.

“உம் பேரு என்ன? உம் பேருக்கு அப்புறம் என்ன நடந்துச்சு?”

“எம் பேரு சீனிவாசன்ங்க சார். இந்தப் பக்கமா போயிட்டிருந்தப்ப பெருசா ஏதோ சத்தம் கேட்டுச்சுன்னு வந்து பாத்தேங்க. ஒருத்தர் கெணத்துல மூழ்கிட்டிருந்தாரு. யாருன்னு பாக்க சொல்லோ பின்னாலேந்து மண்டைல யாரோ ஓங்கி அடிச்சாங்க சார். நெக்ஸ்டு முளிச்சுப் பாத்தா கெணத்துல கெடக்குறேன். எனக்கு நீச்சல்கூடத் தெரியாதுங் சார். இவர்தான் காப்பாத்துனாரு. அப்புறம் இவரு சொன்ன மாதிரி ரெண்டு பாடிய வெளிய எடுத்தோம்” என்று சொன்னவனின் பின்மண்டையை குமார் தடவிப் பார்த்தார். வீங்கித்தான் இருந்தது.

“எங்க, சட்டையக் கழட்டு பாப்போம்” என்றார் இன்ஸ்பெக்டர்.

சீனிவாசன் உடலுறவு அவசரத்தில் கழற்றுவது போல் பரபரவென்று சட்டையைக் கழற்றினான். உடலின் முன்பகுதியில் சில இடங்களில் நேர்த்தியான கீறல்கள். தடயவியல் நிபுணர் அவன் கிணற்றில் விழுந்தபோது அணிந்திருந்த ஈர ஆடைகளையும் அவற்றில் இருந்த பொருட்களையும் குமாரிடம் காட்டினார். அதில் குமாரைக் கவர்ந்தது ஒரு பேனாக் கத்தி. அவர் அதை எடுத்துக் கூர்மையைச் சோதித்தார், பிறகு முகர்ந்து பார்த்தார்.

“இப்ப நான் ஒரு கதை சொல்லட்டுமா? நீயும் கணேஷும் மாணிக்கத்த பிளான் போட்டுக் கொலை பண்றீங்க. அத நடுவீட்டுக்கார்ரு பாத்துடுறாரு. அவரையும் அதே மாதிரி கல்லக் கட்டி கெணத்துல போட்டுத் தள்றீங்க. உங்க ரெண்டு பேர் மேலயும் பழி விழக் கூடாதுன்றதுக்காக நீயும் விழுந்த மாதிரி காட்டிக்க ஒரு கல்லக் கெணத்துல போடுறதா பிளான் பண்றீங்க. ஆனா கணேஷு உன்னை தீத்துக்கட்ட பிளான் போட்ருக்கான். உன்னை அடிச்சுப் போட்டு கல்லக் கட்டி கெணத்துல தள்றான். உனக்கு கணேஷு மேல முன்னாடியே நம்பிக்கை இல்ல. தற்காப்புக்காக பாக்கெட்ல பேனா கத்தி வச்சிருக்க. கணேஷு பய டென்சன்ல கல்ல கொஞ்சம் லூசா கட்டிட்டான். நீ கத்தியால கயித்தை அறுக்குறப்ப உடம்புல காயம் பட்டிருக்கு. நீ வெளிய வர்றதுக்குள்ளாற ஜனம் சேந்துருச்சு. மாட்டிக்காம இருக்க நீங்க திருப்பியும் தோஸ்தாயிட்டீங்க. ரைட்டா?”

கணேஷும் சீனிவாசனும் இன்ஸ்பெக்டரின் கதை சொல்லலில் வெகுநேரமாய் கட்டுண்டிருந்தார்கள். தப்பிக்க வழி தேடி இருவரின் கண்களும் அலைபாய்ந்தன. ஆனால் 114 லத்தியை உயர்த்தித் தயாராக இருந்தார். தடயவியல் நிபுணரும் பேனா கத்தியை அது இருந்த பாலிதீன் பையுடன் சேர்த்துக் காட்டி மிரட்டினார்.

இன்ஸ்பெக்டர் சூழலை ரசித்துப் புன்னகைத்தபடி இருவரையும் கேட்டார், “எதுக்குடா கொன்னீங்க?”

(ஆனந்த விகடனில் 2012இல் வெளிவந்தது)

ஒமேகா செயல்திட்டம்

in கட்டுரை, புனைவு

மனைவி-மகனை ரயிலேற்றிவிட்டு மலர்ந்த முகத்துடன் வீடு திரும்பினேன். ஆனால் அவர்கள் போய்விட்டு வேறு யாரோ வந்த மாதிரி இருந்தது. என் வீட்டு வாசலில் அமெரிக்க ரகசியச் சேவை ஆட்களைப் போல் வாட்டசாட்டமாக இருவர் கோட்டு-சூட்டு, காதில் இயர்ஃபோன் அணிந்து நின்றிருந்தனர். இந்தியர்கள் போல் தெரிந்தனர். வீட்டுக் கதவு திறந்திருந்தது.

“யார் நீங்கள்?” என்றேன் திகைத்து.

“கெட் இன்” என்றான் ஒருவன் முறைத்து.

நான் மரியாதையாக என் வீட்டுக்குள் போனேன். உள்ளே நுழைந்ததும் எனக்கு முதுகைக் காட்டிக்கொண்டு புத்தக அலமாரியைப் பார்த்தபடி ஒரு மொட்டைத் தலை வெள்ளைக்காரர் நின்றிருக்கக் கண்டேன். அவர் பார்த்துக்கொண்டிருந்தவை என்னுடைய நூற்று சொச்சம் புத்தகங்கள். என் ஓசை கேட்டுத் திரும்பினார் அவர்.

நிரந்தரமாகச் சவரம் செய்தது போன்ற மொழுக்கென்ற முகம். இவரை நான் எங்கோ – செய்தித்தாளில், தொலைக்காட்சியில் – பார்த்த உணர்வு. நேரில் இன்னும் ஆளுமையாக இருந்தார். பார்வையில் தீட்சண்யம். ஆனாலும் என் அனுமதி இன்றி என் வீட்டைக் கள்ளச்சாவி போட்டுத் திறந்து நுழைந்த ஒரு மனிதர்.

“மிஸ்டர் பேயோன்:” என்றவர் சரியான, ஆனால் மழலையான தமிழில் தொடர்ந்தார். “700க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். வேறு பெயர்களில் எழுதியவற்றையும் சேர்த்தால் நாலாயிரத்து ஐநூறு புத்தகங்கள் வருகிறது. முக்கியத்துவம் இல்லாத பல விருதுகளைப் பெற்றவர். சொந்த ஊர் தமிழக மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் நீடுர். 1967 ஆகஸ்ட் 7ஆம் தேதி பிறந்தவர். 1998இல் திருமணம் செய்துகொண்டீர்கள். உங்களுக்கு ஒரு 16 வயது மகன் இருக்கிறான்” என்றார்.

“தெரியும்” என்றேன் திகைப்பிலிருந்து மீளாமல்.

“குட்! ஆர் தீஸ் ஃபார் சேல்?” என்றார் அவர், என் புத்தகங்களைக் காட்டி.

“நோ சார், தேயார் ஃபார் டிஸ்ப்ளே” என்றேன்.

“இம்ப்ரெஸ்ஸிவ்” என்றார் வெள்ளைக்காரர்.

‘சார் யாருன்னு சொல்லலியே?’ என்பதற்கு ஆங்கிலத்தில் என்ன என்று யோசித்துக்கொண்டிருந்தபோது அவரே அந்தத் தலைப்பில் பேசினார்.

“லெக்ஸ் லூத்தர்” என்றார் கை நீட்டி.

‘அடடா!’ என்று நினைத்துக்கொண்டேன். அவரேதான்! அதுவும் என் வீட்டில்! எப்படி?! தொண்டை வரை இருந்தார். இவரைப் பத்திரிகை பாஷையில் அறிமுகப்படுத்துவதென்றால்: லெக்ஸ் லூத்தர்! உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான லெக்ஸ்கார்ப்பின் தலைமை அலுவலர், உலகில் பெருமளவைக் கையில் வைத்திருக்கும் சக்திவாய்ந்த தொழிலதிபர். முக்கியமாக, வருங்கால அமெரிக்க ஜனாதிபதி. ஆனால் என் வீட்டில் இவருக்கென்ன வேலை? நான் பாய்ந்து கைகுலுக்கத் தவறவில்லை.

“அழகான சிறிய வீடு. உங்கள் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருக்கிறார்கள் என்று நம்புகிறேன்” என்ற லூத்தர், “நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன் மிஸ்டர் பேயோன்” என்றார். அலமாரியில் இருந்த ஒரு சிறிய புத்தர் பொம்மையைக் கையில் எடுத்து எல்லா பக்கமும் திருப்பிப் பார்த்தார்.

“அது என்னுடையது” என்றேன். அதைக் காதில் வாங்காதது போல் புத்தர் பொம்மையைத் திரும்ப அங்கேயே வைத்தார் லூத்தர். சோபாவில் அமர்ந்தார். ஒருவேளை அவர் தொடர்ந்து பேசுபவராக இருந்தால் அவர் பேசும்போது அவர் முகத்தைப் பார்க்க வசதியாக எதிர்த்தாற்போல் அமர்ந்தேன்.

“லெக்ஸ்கார்ப் உலகெங்கும் மேற்கொண்டுவரும் செயல்பாடுகளை உங்களுக்கு நான் விளக்கிச் சொல்லத் தேவையில்லை மிஸ்டர் பேயோன். ஐ நோ யூ ஹாவ் அன் ஆக்டிவ் இன்ட்ரஸ்ட் இன் அஸ். அறிவியல் துறையில் எங்களைப் போல் ஆராய்ச்சி செய்பவர்கள் வேறு யாரும் இல்லை. நோ டிஸ்ரெஸ்பெக்ட் டு யுவர் பாபா ராம்தேவ் ரிசர்ச் சென்டர். பட் யூ வோன்ட் பிலீவ் த கைண்ட் ஆஃப் லெங்த்ஸ் வீ கோ டு ஸ்ட்ரெட்ச் த லிமிட்ஸ் ஆஃப் ஹ்யூமன் பொட்டென்ஷியல்… ஆர் மே பி யூ டூ” என்றார் லூத்தர். அவர் விஷமமாகப் புன்னகைத்தது போல் தோன்றியது எனக்கு மட்டும்தானா?

“மிஸ்டர் பேயோன், ஓர் உயிரினம் என்ற முறையில் நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறீர்கள்?” என்றார் லூத்தர்.

எனக்குப் புரியவில்லை.

“ஐ மீன் – ஹ்யூமானிட்டி – வேர் ஆர் வீ ஹெடிங்?”

“வரலாற்றில் வேறு எந்த சமயத்திலும் இருந்ததைவிட, மனித இனம் ஒரு குறுக்குச்சாலையில் இருக்கிறது. ஒரு பாதை வேதனைக்கும் அப்பட்டமான நம்பிக்கையிழப்புக்கும் இட்டுச்செல்கிறது. இன்னொரு பாதை, முழுமையான அழிவுக்கு இட்டுச்செல்கிறது. இவற்றில் சரியான பாதையைத் தேர்வுசெய்யும் விவேகம் நமக்கு இருக்கட்டும் என்று பிரார்த்திப்போம்” என்று வுடி ஆலன் எழுதியது நினைவுக்கு வர, அதை லெக்ஸ் லூத்தரிடம் பகிர்ந்தேன்.

“சக்சிங்க்ட்லி புட்” என்றார். “ஆனால் மூன்றாவதாக ஒரு பாதை இருக்கிறது மிஸ்டர் பேயோன்: ஹோப்.”

“ஹோப்” என்றேன் கண்ணாடியாய்.

“ஐ மீன் நம்பிக்கை. நம்பிக்கைதான் வாழ்க்கை. அழிவு எல்லா இடத்திலும் இருக்கிறது மிஸ்டர் பேயோன். அழிவுதான் புதிய கடவுள். அழிவு என்றால் பொருட்கள் சேதமடைவதை நான் சொல்லவில்லை. எல்லாவற்றின் அழிவும். மக்கள் அதைக் கண்கூடாகப் பார்க்கிறார்கள். ஆனால் உணரவில்லை. இருந்தாலும் அவர்கள் மனதடியில் – சப்கான்ஷியஸ்லி – அழிவின் கூறுகளைக் கிரகித்துக்கொண்டிருக்கிறார்கள் – ”

நானும் இதே மாதிரி நிறைய பேசுவேன். ஆனால் இன்னொருவர் பேசிக் கேட்கப் பொறுமை இல்லை, பேச்சாளரிடமிருந்து எனக்கு எவ்வளவு தேற வாய்ப்பிருந்தாலும் என் பொறுமையின் லட்சணம் அதுதான். திருமணமான பின்பு வந்த குணம் இது. எனக்குத் திருமணமான பின்பு. நான் லூத்தரைக் குறுக்கிட்டேன்.

“இதில் நான் எங்கே வருகிறேன்?”

“பொறுமை மிஸ்டர் பேயோன். அழிவு எப்போதுமே இருந்திருக்கிறது. வரலாறு என்பது அழிவின் கதையில்லாமல் வேறென்ன? வரலாறு எப்போதாவது மக்கள் கும்பல் கும்பலாகக் காப்பாற்றப்படுவதைச் சொல்லியிருக்கிறதா? ஹிஸ்டரி இஸ் அபௌட் ஹவ் பீப்பிள் கில் பீப்பிள் – வித் பீப்பிள். அண்ட் டிசீசஸ், கலாமிட்டீஸ், சொல்லிக்கொண்டே போகலாம். அஃப்கோர்ஸ், இட் டெல்ஸ் அஸ் அபௌட் ஜோன் ஆஃப் ஆர்க், மேரி க்யூரி, மோஹன்தாஸ் காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் – எல்லாம் பெரிய மனிதர்கள் – கிவ் தெம் தேர் டியூ – அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும். ஆனால் அவர்கள் வந்து போன பின்பு ஏதாவது மாற்றத்தைப் பார்க்க முடிகிறதா – அபார்ட் ஃப்ரம் தேர் வேர்ட்ஸ் ஆல் ஓவர் த இன்டர்நெட்? டிட் பீப்பிள் ஸ்டாப் கெட்டிங் கில்டு ஆஃப்டர் காந்தி அண்ட் கிங் சாக்ரிஃபைஸ்டு தெம்செல்வ்ஸ்? அவர்கள் மாற்றத்தைக் கொண்டுவந்தார்கள். ஆனால் அழிவின் வரலாறு என்ற கடலில் சில துளிகள்தான் அந்த மாற்றங்கள். வரலாறு மிகவும் பெரியது மிஸ்டர் பேயோன். ஒரு சில மாமனிதர்களால் அது மாறிவிடாது. இட் நோஸ் இட்ஸ் ப்ளேஸ். மாற்றங்கள் அதன் உடலில் தோன்றும் பருக்களைப் போல. பருக்கள் மறைந்து புதிய பருக்கள் தோன்றுகின்றன. தே டோன்ட் மேட்டர் இன் த கிராண்ட் ஸ்கீம் ஆஃப் திங்ஸ் நாட் இன் அவர் கன்ட்ரோல். வரலாறு நம்மை ஏமாற்றும் வழிகளில் ஒன்று, அவ்வப்போது மகத்தான மனிதர்களைக் கசிய விடுவது. டு ஷட் டவுன் அவர் கலெக்டிவ்-ஃபிகரேட்டிவ் மவுத்ஸ். அழிவு எப்போதும் இருக்கிறது. இட்ஸ் த ஒன்லி பெர்மனன்ட் திங். ஒரு நாள் ஒரு பெரிய அடியில் எல்லாம் முடிந்துவிடும். ஆனால் அது வரையில், இட்ஸ் ஹியர் டு ஸ்டே.”

லூத்தர் கிங் சில நொடிகள் மௌனமாக இருந்தார். பிறகு வெளியே நின்றிருந்த தமது மெய்க்காவலர்களில் ஒருவரிடம் சைகை செய்தார். அளவெடுத்துக்கொண்டு வளர்ந்தது போல் கிட்டத்தட்ட சம உயரம் இருந்த இரு காவலர்களில் முகத்தின் நீளத்தால் உயரமாகத் தோற்றமளித்த ஒருவர் உள்ளே வந்து கூடத்தின் மூலையில் இருந்த ப்யூரிட் கருவி மேல் கவிழ்ந்திருந்த எவர்சில்வர் டம்ளரில் தண்ணீர் பிடித்து என்னிடம் நீட்டினார். நான் மறுக்க, “டிரிங்க் இட்” என்றார். நான் ஒரு மடக்கு தூக்கிக் குடித்துவிட்டு டம்ளரை அவரிடம் திரும்பத் தந்து “போதும்” என்றேன் தாடையில் வழிந்த தண்ணீரைப் புறங்கையால் துடைத்துக்கொண்டு. காவலர் டம்ளரில் தண்ணீர் பிடித்து லெக்ஸ் லூத்தரிடம் நீட்டினார். லெக்ஸ் அதை வாங்கிக் குடித்தார். பின்பு தொடர்ந்தார்.

“வேர் வேர் வீ? யெஸ், டிஸ்ட்ரக்‍ஷன். நான் சொன்னது போல, அழிவு எப்போதும் ஏறத்தாழ ஒரே அளவில் இருந்துவந்திருக்கிறது – கிவ் ஆர் டேக் எ ஃப்யூ மில்லியன் லைவ்ஸ் ஆர் கல்ச்சர்ஸ். ஆனால் இந்த முப்பது ஆண்டுகளில் ஒரு புதிய பிரச்சினை வந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்ப யுகம் அழிவை மக்கள் மனதில் பரப்புவதைச் சிரமேற்கொண்டிருக்கிறது. அழிவின் முகவர்களான ஊடகங்கள் அழிவு பற்றிய தகவல் மக்களுக்கு இன்பம் தருவதை உணர்ந்திருக்கின்றன. ஒரு குழந்தையின் சதைத் துண்டுகளை வெறிநாய்களுக்குத் தீனியாகப் போடுவது போல் அழிவின் காட்சிகளை, ஒலிகளை, துயரங்களை அவை பார்வையாளர்களின் கோரப் பசிக்குத் தருகின்றன. இத்தனை அழிவுக்கிடையே நெகிழ்ச்சியான சம்பவத் துணுக்குகள், அழகான முகங்கள், அழகான வார்த்தைகள், அழகான பிம்பங்கள் என்று உள்ளீடற்ற குப்பைகளை நம் மூளையில் ஏற்றி அழிவின் குரலைச் சன்னமாக்குகின்றன. ஐ ஓன் ‘த டெய்லி ப்ளானட்’. ஆனால் நானும் ஊழியர்களுக்குச் சோறு போட வேண்டுமே…”

“ஸோ யூ வான்ட் மீ டு ரைட் அன் ஆர்ட்டிக்கிள் ப்ரொட்டெஸ்டிங் அகைன்ஸ்ட் இட்” என்றேன் நான்.

“அகெய்ன், பொறுமை. அழிவின் நுகர்வோரான நம் மக்கள் அதன் வேதனையில் இன்பத்தைக் காணும் குருடர்களாக இருந்தாலும் என்னுடைய கவலை வேறு. தேர் ஆர் பீப்பிள் ஹூ டோன்ட் பய் இட். உண்மையைக் கண்டுணர்ந்து அதை உரக்கச் சொல்லும் கலாச்சாரம் இருக்கிறது. உண்மையைப் பக்கம் பக்கமாக எழுதுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவநம்பிக்கையை விதைக்கிறார்கள். ஃப்ரீ ஏஜன்ட்ஸ். ஃப்ரீ ஸ்பிரிட்ஸ். டிஸ்ரப்டிவ் எலிமென்ட்ஸ். இவர்கள் நம்பிக்கையின் எதிரிகள். இவர்களை செயலிழக்கச் செய்ய வேண்டும். மக்கள் அடிப்படையில் நம்பிக்கை சார்ந்தவர்கள். அவர்களைக் குறைசொல்ல முடியாது. அது சர்வைவல் விஷயம். இருந்தாலும் அந்த நம்பிக்கை கொஞ்சம் ஆட்டம் கண்டால்கூட அது ஏதாவதொரு பெரிய மாற்றத்திற்கான தொடக்கமாக அமையக்கூடும். இட் குட் பி டேஞ்சரஸ். மக்களுக்கு உண்மை அல்ல, நம்பிக்கைதான் தேவை. ஒரு அகதிக் குழந்தையோடு ஒரு ராணுவ வீரன் விளையாடும் காட்சியை ஊடகத்தில் பார்த்து நெகிழ்கிறோம். ஆனால் அந்தக் குழந்தைக்கு என்ன எதிர்காலம்? அந்தக் குழந்தை பிழைக்குமா? இந்த மாதிரிக் கேள்விகள் எழக் கூடாது. நம்பிக்கை அவர்களைக் குருடாக்க வேண்டும். அண்ட் வீ ஆர் கோயிங் டு கிவ் இட் டு தெம்” என்றார் லூத்தர். சொல்ல வந்ததைச் சொல்லி முடித்த பாவனையில் சோபாவில் இன்னும் நன்றாகச் சாய்ந்துகொண்டார் அவர்.

நான் மௌனமாக, ஆனால் உணர்ச்சிவசப்பட்டு இருந்தேன். இது ‘கொஸ்டின் செஷனா’, ஏதாவது கேட்க வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை.

லூத்தர் புன்னகைத்தார். “திஸ் இஸ் வேர் யூ கம் மிஸ்டர் பேயோன்” என்றார்.

“அழிவைக் கட்டுப்படுத்த நான் என்ன செய்ய வேண்டும் மிஸ்டர் லூத்தர்?”

“கால் மீ லெக்ஸ்” என்றார் லெக்ஸ். “எப்போது உருப்படும் இவ்வுலகு? / நாம் என்செய்தால் அது இலகு? – இந்தக் கவிதையை நினைவிருக்கிறதா மிஸ்டர் பேயோன்? உங்கள் கவிதைதான். ஹூ டு யூ திங்க் வி ஆர்? காட்ஸ்? அழிவைக் கட்டுப்படுத்த கோடிப் பேர் சேர்ந்தால் முடியுமா? கோடிப் பேர் சேர்ந்துதானே உங்கள் நாட்டு அரசைத் தேர்வு செய்தார்கள்? பர்சனல்லி மிஸ்டர் பேயோன், நான் எவ்வளவுதான் விரும்பினாலும் என்னால் அழிவின் மேல் கைவைக்க முடியாது. உங்கள் தெருமுனையில் எத்தனை மாடுகள் பார்த்தீர்களா? பத்து நிமிடங்களுக்கு என் கார் உள்ளே வர முடியவில்லை [இன்னோவா-வாக இருக்கும் – ஆ-ர்]. ஐ கான்ட் ஸ்டெம் த ராட். நோபடி கேன். ஐ கேன் ஒன்லி வாட்ச் வித் எ பிக் பவுல் ஆஃப் பாப்கார்ன் இன் டோ. பட் ஐ டோன்ட் ஹேவ் த ஹார்ட் ஃபார் இட். என்னுடைய தீர்வு, நம்பிக்கையை அளிப்பது. என்னுடைய புதிய இனிஷியேட்டிவ் அதுதான். இங்கேதான் நீங்கள் எனக்குத் தேவைப்படுகிறீர்கள்.”

நான் தீர யோசித்தேன். லெக்ஸ்கார்ப் அறப் பணிகளை கார்ப்பரேட் பொறுப்புடைமையுடன் செய்துவரும் எந்தப் பெருநிறுவனத்தையும் போல மிக ஆபத்தானது. எனக்குத் தெரிந்து லெக்ஸ்கார்ப் மருத்துவம், ஆயுதங்கள் எனப் பல துறைகளில் சட்டவிரோதமான ஆராய்ச்சிகளை நடத்திவருகிறது. என்னுடைய அறிவியல் புனைவுகளுக்காகத் தரவு சேகரிக்க லெக்ஸ்கார்ப்புக்குச் சொந்தமான கேட்மஸ் லேப்ஸில் பணிபுரியும் ஒரு வாசக எழுத்தாளரை உளவாளி போல் பயன்படுத்துகிறேன். நாள்தோறும் அவர் வாட்ஸ்ஆப்பில் ரகசியமாகப் பகிரும் அனுபவங்கள் சில்லிடுபவை. லெக்ஸ்கார்ப்பிடம் இது போல நூற்றுக்கணக்கான கேட்மஸ் லேப்கள் இருக்கின்றன.

பிறகு லெக்ஸ் கார்ப்புக்குப் போட்டி அதிகம், எதிரிகள் அதிகம் – குவீன் இண்டஸ்ட்ரீஸ், வெய்ன் என்ட்டர்ப்ரைஸ், ஸ்டார் லேப்ஸ், மற்றும் விஜிலாண்டிகள் எனப்படும் ஏராளமான தொண்டுத் தீவிரவாதிகள். லெக்ஸ்கார்ப்புக்காகப் பணிபுரிவது இத்தனை பேரின் பகைமையைச் சம்பாதிப்பதாகும். அதே சமயத்தில் லெக்ஸ் லூத்தருக்கு நண்பர்களுக்குப் பஞ்சமில்லை – பெரும்பாலும் ஆயுதம் தாங்கிய ரகம். அடியாட்கள், நிழல் அமைப்புகள், ராணுவம் காணாத ஆயுதங்கள். இருந்தாலும் உலகின் மாபெரும் தொழிலதிபர்களில் ஒருவருக்கு சுவிசேஷத்தைப் பரப்ப வேறு ஆள் கிடைக்கவில்லையா?

சரி, இது எங்குதான் போகிறது பார்ப்போம் என்று முடிவு செய்தேன்.

“நான் என்ன செய்ய வேண்டும் என்று திட்டவட்டமாகச் சொன்னால் வசதியாக இருக்கும்” என்றேன்.

“யூ ஆர் ஆல்ரெடி டூயிங் இட். ஜஸ்ட் லெட் மீ ஹேண்டில் யுவர் ஆபரேஷன்ஸ்” என்றார் லெக்ஸ் புன்னகைத்து.

ஆபரேஷன்ஸ்… மனம் போன போக்கில் தட்டச்சு செய்து பத்திரிகைக்கு கூரியரில் அனுப்பி “இந்த வாட்டி போட்ருவீங்கல்ல?” என்று மன்றாடுவதும் ‘நாளொரு நூல்’ கொள்கைப்படி தினமும் புத்தகம் எழுதுவதும்தான் எனது ஆபரேஷன்ஸ். இது லெக்ஸ் லூத்தருக்குத் தேவையான தகவல் அல்ல. கடல் கடந்து என்னைப் பார்க்க வரும் அளவுக்கு அவர் என்னைப் பற்றி மனதில் உருவாக்கிக்கொண்டுள்ள சித்திரத்தைக் கலைக்க எனக்கு மனமில்லை.

“கடந்த மூன்று ஆண்டுகளில்,” என்றார் லெக்ஸ், “எங்கள் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு ஓர் ஆய்வு நடத்தியது. வீ (ச்)சோஸ் 200,000 பீப்பிள். டமில்ஸ். ஹெல்த்தி வாலன்டியர்ஸ். சராசரி முதல் சராசரிக்குக் கொஞ்சம் அதிகமான அறிவுத் திறன் கொண்டவர்கள். சரியான வழிகாட்டல் கிடைத்தால் உங்களைத் தூக்கிச் சாப்பிடக்கூடியவர்கள், ஆஸ் தி எக்ஸ்பிரஷன் கோஸ். இவர்களுக்கு உங்கள் படைப்புகளைப் படிக்கக் கொடுத்தோம். அவர்கள் படிக்கும்போதே அவர்களுடைய மூளை நடவடிக்கைகளை ஆராய்ந்தோம். வீ ஃபவுண்ட் சம்திங் ரிமார்க்கபிள். அவை அறிவியக்கத்தை நிர்வகிக்கும் நியோபாலியம் என்ற பகுதியை… மந்தமாக்குகிறது என்று சொன்னால் துல்லியமாக இருக்காது, அதைக் கசக்கிப் பிழிந்து துருவி ஏறி மிதித்து ப்ரீஃப்ரான்ட்டல் சுவர்களில் மோதி முறுக்கிக் கந்தலாக்கிக் கடைசியில் முழுமையாகச் செயலிழக்கவைக்கிறது. முக்கியமாக, அதற்கான அறிகுறிகள் வெளியே தெரிவதே இல்லை. அறிகுறிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் என்னுடைய தொழில்நுட்பத்தைக் கொண்டுதான் கண்டுபிடிக்க வேண்டும்.”

அவருடைய பெருமிதப் புன்னகை எனக்கும் தொற்றிக்கொண்டது. ரிமார்க்கபிள் ஃபீட்.

“யாராவது பிழைத்தார்களா?” என்றேன்.

“நோபடி டைட். ஆனால் மூன்றாண்டு காலத்தில் அவர்கள் மூளை நிரந்தரமாக மாறிவிட்டது. அதே சமயத்தில் நாங்கள் நடத்திய ஓர் இணை ஆய்வில் உங்கள் படைப்புகளின் பிற மொழிபெயர்ப்புகளை அந்தந்த மொழி வாசகர்களிடம் ஆய்வு செய்தோம். அறுபத்தெட்டு சதவீத வெற்றி கிடைத்தது. சரியான மொழிபெயர்ப்பாளர்களை வைத்து அதைத் தொண்ணூறு சதவீதத்திற்கு உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறேன். ஐ வோன்ட் ரெஸ்ட் அன்டில் எவ்ரிஒன் ஆன் திஸ் ப்ளானட் இஸ் மேட் ஆஃப் ஹோப்.”

“என்னைப் படிக்காமல் அவர்களால் இருக்க முடிகிறதா (மெடிக்கல் இம்ப்ளிகேசன்ஸ்)?”

“அவர்கள் உங்களுக்கு அடிமை ஆகவில்லை. தே ஜஸ்ட் லாஸ்ட் தேர் பிரெய்ன்ஸ்.”

“ஆக…” என்றேன்.

“உங்களுக்கு ஃபைஸருடன் ஒரு பேரம் இருப்பது எனக்குத் தெரியும். அதில் அவர்களுக்குப் பைசா வருகிறது என்று அறிகிறேன். அவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன். லெக்ஸ்கார்ப் ஒரு புதிய பதிப்பகத்தின் மூலமாக உங்கள் புத்தகங்களைப் பதிப்பிக்கும். இட் வில் கெட் ஆல் யுவர் வொர்க்ஸ் ட்ரான்ஸ்லேட்டட் இன்ட்டு ஆஸ் மெனி லாங்வேஜஸ் ஆஸ் பாசிபிள். லெக்ஸ்கார்ப் உங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளைத் தரும் – ”

“லேட்டஸ்ட் ஐஃபோன்…”

“யூ வில் கெட் எ கன். உங்கள் கம்ப்யூட்டர் எப்போதும் ஒரு லெக்ஸ்கார்ப் சர்வருடன் இணைக்கப்பட்டிருக்கும். கீப் மீ இன் த லூப். ஷேர் யுவர் தாட்ஸ். கம் அப் வித் ஐடியாஸ். டோன்ட் யூஸ் பென் டிரைவ்ஸ். உங்கள் மொழிநடையையும் நாங்கள் ஆராய்ந்துவருகிறோம் – எங்கள் ஏ.ஐ. ரிசர்ச்சுக்காக. அதனால் நீங்கள் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் எங்கள் ஏ.ஐ. புரோகிராமைச் சென்றடையும். ஓ, ஐ நீட் எ பிளட் சாம்ப்பிள். கான்ட் வெயிட் டு கெட் டு நோ யுவர் டிஎன்ஏ.”

லெக்ஸ் பேசி முடிப்பதற்குள் வலது கையில் சுருக்கென்று வலித்தது. மெய்க்காவலர் ஒருவர் சுண்டுவிரல் நீளக் கருவி ஒன்றினால் ரத்தம் எடுத்து முடித்திருந்தார்.

“டிஎன்ஏ எதற்கு?” என்றேன் குழப்பமாக.

லெக்ஸ் அதற்கு நேரடியாக பதிலளிக்கவில்லை. உணர்ச்சியற்ற விழிகளால் என்னைப் பார்த்து, “த வேர்ல்ட் நீட்ஸ் மோர் பீப்பிள் லைக் யூ மிஸ்டர் பேயோன்” என்றார். பாராட்டு.

ஒரு விஷயம் உறுத்தியது. கேட்டுவிட்டேன். “உங்கள் திட்டத்தில் உள்ள ஒரே எழுத்தாளர் நான் மட்டும்தானா? வேறு யாரும் இல்லையா?”

லெக்ஸ் புன்னகைத்தார். “ப்ராஜெக்ட் ஒமேகா பத்தாண்டுகளுக்கு முன்பு என் மனதில் கருக்கொண்ட ஒரு எண்ணம். ஒரு சிறிய நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு நிகரான ஒரு தொகையைச் செலவு செய்து உலகெங்கும் தேடியிருக்கிறேன். அண்ட் தென் ஐ ஃபவுண்ட் யூ, மை ப்ராஜெக்ட் ஒமேகா. இது டாப் சீக்ரெட்.”

பிறகு லெக்ஸ் எழுந்தார். “மை லாயர்ஸ் வில் கான்டாக்ட் யூ. ஆன்லைனில் சந்திப்போம். ஒரு வாரத்திற்குள் ஓர் ஏற்பாடு செய்துகொள்வோம். யூ வில் பி பெய்டு ஹாண்ட்சம்லி. நீங்கள் எப்போதாவது உலகின் என்னுடைய பகுதிக்கு வந்தால், அவசியம் என் வீட்டுக்கு வாருங்கள். இட்ஸ் இன் ஸ்மால்வில், கான்சாஸ். அருமையான ஒயின் சேகரிப்பு வைத்திருக்கிறேன். குட்பை மிஸ்டர் பேயோன். அண்ட் வெல்கம் டு ப்ராஜெக்ட் ஒமேகா.”

வாசல் வரை அவரைப் பின்தொடர்ந்தேன். லெக்ஸ் சடாரெனத் திரும்பினார். “நான் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டேன். பெரிய மனிதர்களைப் பார்க்கப் போகும்போது வெறுங்கையோடு போவது அநாகரிகம். ஐவ் பிராட் .யூ எ கிஃப்ட்” என்றார்.

ஒரு மெய்க்காவலர் அழகாக ரிப்பன் கட்டிய ஒரு சதுரமான பெட்டியைக் கொண்டுவந்து டீப்பாய் மேல் வைத்தார். “குட்பை” என்றார் லெக்ஸ் புன்னகையுடன். அவர் தமது ஜாகுவார் காரில் ஏறிப் போகும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிச் சென்றேன். அவர் திட்டத்தில் சேர்வதா வேண்டாமா என்ற தேர்வைக்கூட லெக்ஸ் எனக்கு அளிக்கவில்லை என்று அப்போதுதான் உறைத்தது. கார்ப்பரேட் மாமுதலாளிகள் என்றாலே இப்படித்தான் போல.

கனமான அந்தப் பெட்டியை ஆவலுடன் மடி மேல் வைத்துக்கொண்டு ரிப்பனையும் இத்யாதிகளையும் அகற்றினேன். உள்ளே இருந்தது நான் எதிர்பார்த்தது போல் எலக்ட்ரானிக் பொருள் அல்ல. நான் குறிப்பிட்ட வாசக உளவாளியின் தலை. நான் துணுக்குற்றேன். இதை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

*

குறிப்பு: லெக்ஸ் லூத்தர், லெக்ஸ்கார்ப், குவீன் இண்டஸ்ட்ரீஸ், கேட்மஸ் லேப்ஸ், வெய்ன் என்டர்ப்ரைஸ், ஸ்டார் லேப்ஸ், த டெய்லி ப்ளானட், ஒமேகா குறிப்பாலுணர்த்தும் Darkseid, ஸ்மால்வில் ஆகியவை DC Comicsஇன் உடைமைகள்.

ஐந்து ரியோ

in சிறுகதை, புனைவு

ஆளற்ற எனோஷிமா நெடுஞ்சாலையில் ஒரு ஆள் மெல்ல நடந்து வந்துகொண்டிருந்தான். சாலையின் பக்கவாட்டு இறக்கத்தில் இருந்த புதர்களில் மறைந்திருந்த யாகுஸா கும்பல் ஒன்று அவனை வேடிக்கை பார்த்தது.

“இவனுக்கா ஐந்து ரியோ*?” என்றான் கும்பலில் ஒருவனான ஓர் அழுக்கு சாமுராய்.

“இவன் அதிவேகமாக வாள் வீசுவான்” என்றான் ஒரு யாகுஸா.

“என்னை அசிங்கப்படுத்துகிறாயா? பிச்சைக்கார நோஞ்சான் போல் இருக்கிறான். இரண்டு ரியோ கொடு, போதும்” என்று கை நீட்டினான் சாமுராய்.

“உன் இஷ்டம். ஆனால் ஜாக்கிரதை” என்று யாகுஸா இரண்டு நாணயங்களை எண்ணிக் கொடுத்தான். சாமுராய் அவற்றை வாங்கித் தன் சுருக்குப்பைக்குள் போட்டு ஆடைக்குள் வைத்துக்கொண்டான்.

நெடுஞ்சாலை மனிதன் இன்னும் நாற்பதடி தூரத்தில் வந்துகொண்டிருந்தான். சாமுராய் விடுவிடுவென்று மேட்டில் ஏறிச் சாலையை அடைந்தான். சிறிது நேரத்தில் எதிரில் வந்தவனை இயல்பாகக் கடந்த சாமுராய், சட்டென வாளை உருவினான்.

நெடுஞ்சாலை மனிதன் நொடியில் சுழன்று திரும்பித் தன் வாளை சாமுராயின் முதுகு வழியே இதயத்தில் பாய்ச்சினான். நெஞ்சிலிருந்து ரத்தம் பீறிட சாமுராய் சரிந்தான். நெடுஞ்சாலை மனிதன் வாளை மெல்ல உறைக்குள் போட்டுக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தான்.

“ஐந்து ரியோ வாங்கியிருக்க வேண்டும்” என்றான் தோற்ற சாமுராய்.

*

ரியோ – பழைய காலத்து ஜப்பானியத் தங்க நாணயம்.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar