Archive for the 'ஓவியம்' Category

பேராயரின் பயணம்

22 Comments »

பேயோன் on August 9th 2010 in ஓவியம்

முதலையும் சியாமள விகாச பட்சியும்

(குழந்தைகளுக்கான புனைவு)

காலமும் வெளியும் இணையுமொரு புள்ளியில் முகிழ்த்த கண்காணா பூமியொன்றில் ஒரு வனம் இருந்தது. பல்வகை விலங்குகள் பூட்டப்பட்ட, பறவைகள் அடைக்கப்பட்ட ஒரு விசித்திரப் பிராந்தியம் அந்த வனம். வாசகர்கள் காலடித் தடம் பதியாத இந்தத் தன்னந்தனித்துவப் பிரதேசத்தை பல்வேறுபட்ட உயிர்வாழ் மிருகங்கள் பகிர்ந்துவந்தன.

அந்த வனத்தினூடே மனிதர் அறியா மர்ம மொழியில் தன்னோடு தானே பேசிக்கொண்டு இலக்கில்லாத் திசையில் ஒரு அவர்ண திரவ நாகமாய் சதா பயணித்தபடி இருந்தது அந்த ஜல நதி. விருட்சங்கள் மண்டிய பச்சிருளில் பரவியிருந்த அதன் கரையோரத்தில் பூமிக்கும் ஆகாயத்திற்குமான ஒரு செங்குத்துப் பாலத்தின் எஞ்சிய துண்டு போல் ஒரு நெடுங்கத்தரி மரம் முளைத்திருந்தது. எண்ணிக்கை துறந்த ஆலகால விழுதுகள் ஆயிரங்கால் மண்டபமாய் அம்மரத்தைத் தோற்றங்கொள்ள வைத்தன.

இப்படியான அந்தக் கத்தரி மரத்தில் ஏறி அதன் கனிகளை உண்டு செரிக்கும் பழக்கத்தைத் தனதாக்கிக்கொண்டிருந்தது ஒரு நதி முதலை. அனுதினமும் சூரியன் ஆகாயத்தின் உச்சிக்கு மெல்லத் தாவிக்கொண்டிருக்கும் காலப்பொழுதில் நமது முதலையும் கத்தரிப்பழம் தேடி மரத்தில் ஆரோகணிக்கும்.

ஒருநாள் முதலையின் கண்களில் பட்டவை ஆற்றுநீரின் மேல் கிளைத்தோங்கிய ஒரு கிளையில் தொங்கிய கத்தரிப் பழங்கள். நான்கு கால்களால் மரத்தைப் பிடித்து ஏறி நீள்முகத்தை நீட்டிக் கத்தரிப் பழங்களை அண்மிக்கையில் சறுக்கி விழுந்தது நதி நீரில் தலைகீழாக நமது கதாநாயக உயர்முதலை. வாயிலும் மூக்கிலும் நீரும் சேறும் உட்புகுந்து மூச்சுத் திணறி முதலை தத்தளித்தது. அதன் குட்டைக் கால்களை ஆற்றின் அல்லிப் பாம்புகள் சுற்றிக்கொண்டன.

திடீரென சிறகடிக்கும் சத்தம் கேட்டு அண்ணாந்தது முதலை. அது சறுக்கிய கிளையில் வந்து அமர்ந்தது ஒரு புராதன சியாமள விகாச பட்சி. முதலை திமிறத் திமிற பாம்புப் பிடிகள் இறுகியதைப் பட்சி பார்த்தது. முதலையின் உயிரூசல் நீடித்தால் அதன் பௌதிக இருப்பு கேள்விக்குள்ளாகிவிடும் என உணர்ந்தது பட்சி.

இன்னொரு இணை உலகில் ஒரு மூதாட்டியிடம் களவாடியிருந்த வடையைக் காலடி பொந்திற்குள் பதுக்கிவைத்த அந்தச் சிறகுதாரி, விருட்டென எழுந்து கருஞ்சிறகுகளை அடித்தபடி நீரினுள் பாய்ந்தது. கணப்பொழுதில் பாம்புகளைக் கொய்து முதலையை விடுவித்து முதலையின் நன்றிக்குக் காத்திராமல் வானுக்குள் தாவியது. கத்தரி மரத்தின் நீர் தீண்டாக் கிளையில் ஏறிக் கத்தரிப் பழங்களை உண்டு நதிக்கரைக்குத் திரும்பியது முதலை, புராதன சியாமள விகாச பட்சியின் மேலதிக பிரக்ஞையுடன்.

பிறிதொரு நாள், பிறிதொரு சமயம், பட்சியினுடைய முறையின்பேரில் ஒரு வேட்டுவன் அந்த வனத்தில் பிரவேசித்தான். ஆகாயத்தை இடைவிட்டு மறைத்த இலைகளின் பொய்க் கூரையினுடைய நீலப் பொத்தலில் நின்றிருந்த பட்சியை வேட்டுவப் பார்வை அவதானித்தது. அன்றிரவு சியாமள விகாச பட்சியை அடித்து சூப்புச் செய்துவிடத் தீர்மானித்தது வேட்டுவ மனம்.

அந்நேரம் வேட்டுவத் துப்பாக்கி தோளேறியதைக் கண்ணுற்றது நதியில் நீந்திய உயர்கதாநாயக முதலை. சின்னஞ்சிறு கால்களால் நீரை அளைந்தபடி மெல்லக் கரை நோக்கி முன்னேறிய முதலை, வேட்டுவனின் விழிகளூடே மரணம் தன் இரக்கமற்ற பார்வையைப் பட்சியின் மீது செலுத்தியதைக் கண்டு பதைத்தது. பட்சிக்கு நன்றி சொல்ல இது நல்ல தருணம் என உணர்ந்து வேட்டுவனை நோக்கி விரைந்தது.

மிகைப்படுத்திய மனிதத் தலை போன்றதொரு பாறையின் மேல் நின்றிருந்தான் வேட்டுவன். துப்பாக்கியின் எய்விசையில் விரலை அமர்த்திப் பட்சியின் தரிசனத்தில் அவன் ஆழ்ந்தான். முதலை நீரிலிருந்து வெளிப்பட்டு வேட்டுவனுக்கும் பட்சியின் மரணத்திற்கும் இடையிலிருந்த அரை நொடியில் அடியெடுத்து வைத்தது. வணக்கம் சொல்லிப் பிரியும் கைகள் போன்ற வாயைத் திறந்தது. கடித்தது வேட்டுவனுடைய காலை. வலி பொறுக்காமல் வேட்டுவன் அலறி துப்பாக்கியைத் தலை சுற்றி வீசியெறிந்தான். சப்தம் எழும்பிய இடத்தைப் பட்சியின் காதுகள் தேட, அவற்றைப் பின்தொடர்ந்த அதன் கண்கள் இலை இடைவெளிகளூடே ஓடிய வேட்டுவன் மீது பதிந்து புரிதலில் விரிந்தன.

ஒவ்வொரு பிரதிக்கும் ஒரு நீதி உண்டு. குழந்தைகளே, இந்தப் பிரதிக்கும் அது உண்டு. அது என்ன தெரியுமா? மற்றவர்கள் நமக்கு உதவி செய்தால் நாமும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் இன்னொரு முறை நமக்கு உதவி செய்வார்கள்.

17 Comments »

பேயோன் on August 4th 2010 in ஓவியம், புனைவு

மீசைக்காரன்

17 Comments »

பேயோன் on July 30th 2010 in ஓவியம்

Rss Feed Tweeter button Facebook button Delicious button Stumbleupon button

பேயோன் is using WP-Gravatar