பேயோன்

படித்ததில் பிடித்தவன்

7. மோனாலிசாவின் கண்கள்

March 1st, 2012

(‘ஒரு லோட்டா ரத்தம்’ நெடுங்கதையின் தொடர்ச்சி. முந்தைய அத்தியாயங்கள்: ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, எட்டு)

உலகில் ஒவியங்கள் ஏகப்பட்டவை இருக்கின்றன. அவற்றில் பதினாறாம் நூற்றாண்டு இத்தாலிய ஓவியர் லியோனார்டோ டாவின்சியின் ‘மோனாலிசா’ முதன்மையானது. உலகின் ஆகப்புகழ்பெற்ற இந்த ஓவியம், தற்போது பிரெஞ்சில் பாரிசின் லூவர்1 அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நான் முதல் முறையாக பிரெஞ்சிற்குச் சென்றபோது லூவருக்குச் சென்று இந்த ஓவியத்தைப் பார்த்திருக்கிறேன். அருகில் இருந்த பல அமரத்துவம் பெற்ற ஓவியங்கள் ஈ ஓட்டிக்கொண்டிருக்க, மோனாலிசாவிற்கு மட்டும் சிறப்பு போணி ஆகிக்கொண்டிருந்தது. இந்தப் பிரபலம் எப்படி சாத்தியமானது?

நாம் பல தருணங்களில் இந்த ஓவியத்தைப் பார்த்து வியந்து மறந்துவிட்டிருக்கிறோம். கூகுள் படத் தேடலில் monalisa என்று தேடினால் monalisa hot முடிவுகளும் சேர்ந்து கிடைக்குமளவு மோனாலிசாவின் பயணம் தமிழ்ச்சூழல் வரை வந்துவிட்டிருக்கிறது. இந்தப் பெண்ணிடம் அப்படி என்ன இருக்கிறது, நிர்வாணப் படமாகக்கூட இல்லாத ஒரு ஓவியம் ஏன் இவ்வளவு பிரசித்தி பெற்றுள்ளது என என்றைக்காவது நாம் நம்மை நாமே கேட்டுக்கொண்டிருக்கிறோமா? அங்கேதான் நான் வருகிறேன்.

ஒரு படைப்பைப் புகழ்பெற்றதாக்குவது எந்தத் தன்மை? படைப்பின் ‘உண்மை’ப் பொருள் எதுவாயினும் அதைத் துய்ப்பவர் தான் காணும் அர்த்தத்தை அதில் ஏற்ற அனுமதிக்கிறது கலை. பல பரிமாணங்களைக் கொண்டதுதான் உண்மையான கலைப் படைப்பு. அதனால்தான் கியூபிச ஓவியர்கள்கூட ஒரு ஒவியத்திலேயே எல்லா பரிமாணங்களையும் ஒரே சமயத்தில் கொண்டுவந்துவிடப் பார்த்தார்கள். டாவின்சியின் மோனாலிசா, காட்சியைக் கலைத்துப்போடும் விளையாட்டுகளில் இறங்காமலே பல்பொருள்கூறுதன்மையைச் சாதிக்கிறது.

டாவின்சியின் மோனாலிசா சொரசொரப்பான பரப்பில் வரையப்பட்டிருக்கிறாள். நேர் வகிடு, தலையை மூடிய மெல்லிய முகத்திரை, அரைகுறை முன்வழுக்கை என்று சொல்லத்தக்க பெரிய நெற்றி, மீசையில்லாத கமல்சாரை நினைவுபடுத்தும் புருவங்கள், வர்ணிக்க முடியாத சிறிய கண்கள், நீண்ட, கூரிய, ஆனால் எடுப்பில்லாத மூக்கு, அளவான புன்னகை, சிறிய தாடை, புஷ்டியான தோள்களைத் தொடும் குட்டையான கூந்தல், பொருத்தமான சந்தர்ப்பங்களில் விம்மக்கூடிய மார்பகங்கள், கட்டிய கைகள், கித்தான் மீதுள்ள கறைகளைத் தவிர மாசு மருவற்ற சருமம், இவற்றைச் சுற்றிப் பெண்கள் அணியும் ஒரு ஆடை, இலக்கணப் பிழையில்லாத உடல்மொழி… இதுதான் மோனாலிசா.

உழைப்புக்குப் பழக்கப்படாத உடல், வாழ்வியல் சிரமங்கள் எதையும் பிரதிபலிக்காத, “நன்றாகத்தான் இருக்கிறேன், எனக்கென்ன கேடு?” என்று பதிலை எதிர்பாராமல் கேட்கும் முகம் மோனாலிசாவுடையன. கூந்தலுக்கு நீளமான வண்ணம், தோலுக்கு மென்மையான வண்ணம், சதைப்பாங்கான இடங்களுக்குத் திரட்சியான வண்ணம் என்று பயன்படுத்தியிருப்பது வின்சியின் மேதைமைக்கு எடுத்துக்காட்டு. முக நிழல்கள் அவள் வயதை அம்பலப்படுத்திவிடுகின்றன. மோனாலிசாவை இளம்பெண் என்று வர்ணிக்க முடியாது, ஆனால் அப்படி வர்ணிப்பதும் புரிந்துகொள்ளப்படக்கூடியதே. அவளின் ஆடை பளபளப்பாக, மடிப்பு குலைந்தாலும் கசங்காத தரமுள்ளதாக இருப்பதிலிருந்து அதை அணிந்திருப்பவரின் பொருளாதார நிலை வசதியானது என்று காட்டுகிறார் வின்சி.

ஆகச்சிறந்த இலக்கியப் படைப்புகளைப் படிக்கும்போது அவை நம்மைப் பற்றிப் பேசுபவையாக உணர்கிறோம். மேகங்களற்ற இரவில் சாலையில் நடந்து செல்லும்போது நிலவைப் பார்த்தால் அதுவும் நம்மைப் பார்ப்பது போல உணர்கிறோம். இந்த மரபில் மோனாலிசாவின் விழிகளும் நம்மையே பார்ப்பது போல் நமக்குத் தெரிகின்றன. ஆனால் அவள் கண்ணின் கருவிழிகளைப் பாருங்கள். அவை விழிகளுக்கு நடுவில் இல்லை; வலது ஓரத்தில் இருக்கின்றன. அவை நம்மைப் (ஓவியரைப்) பார்க்கவில்லை, நமக்கு அருகில் இருப்பவரைப் பார்க்கின்றன. படம் வரையப்பட்டபோது ஓவியருக்கு அருகில் யார் இருந்திருக்க முடியும்? ஓவியத்தை வரையுமாறு வின்சியை ‘கமிஷன்’ செய்தது பட்டுத்துணி வியாபாரியான அவரது கணவர் டான் மோனாலிசா. மனைவியின் உருவப்படம் வரையப்படுகையில் அதைக் கணவர் அருகில் நின்று பார்ப்பதுதானே இயற்கை? கலை விமர்சகர்களால் புதிரான புன்னகை என்றும் நம்மவர்களால் மையமான சிரிப்பு என்றும் விவரிக்கப்படும் மோனாலிசாவின் சாந்தமான புன்னகை, கணவனை இலக்கிட்டுச் செய்யப்படுகிற ஒன்று. இந்தச் சூழலைக் கொண்டு ஊகிக்கும்போது, ஒரு பிரபல ஓவியரால் தனது உருவப்படம் வரையப்பட வேண்டும் என்ற ஒரு மேட்டுக்குடி மனைவியின் ஆசை நிறைவேறுவதில் எழும் திருப்திப் புன்னகையது என்று கூறலாம்.

புகைப்படக் கலைஞர்களுக்கு இருப்பது போல் ஓவியர்களுக்கும் ஸ்டுடியோக்கள் உண்டு. லிசாவைத் தனது ஸ்டுடியோவில் உள்ள ஒரு பிரம்மாண்டமான நிலப்பரப்பு ஓவியத்தைப் பின்னணியாக வைத்து வரைந்திருக்கிறார் வின்சி. இங்கே பெண் நிஜம், பின்னாலுள்ள படம் புனைவு. நிஜத்தையும் புனைவையும் தனிப்படுத்திக் காட்ட வின்சி இருவேறு வண்ணத் தொனிகளைப் பயன்படுத்துகிறார். ஆனால் ஓவியம் என்பதும் புனைவுதானே? ஒரு புனைவுக்குள் புனைவாகச் சித்தரிக்கப்படும் புனைவையும் (நிலப்பரப்பு ஓவியம்) நிஜமாகச் சித்தரிக்கப்படும் புனைவையும் (பெண்) கொண்டிருப்பது இந்த ஓவியத்தின் சிறப்பு.

லூவர் அருங்காட்சியகத்தில் மோனாலிசா ஓவியத்திற்கு முன் கூட்டம் போடும் கலைப் பிரியர்கள் சமூக, வரலாற்றுப் பின்னணிகளைப் பற்றிக் கவலைப்படாத சுற்றுலாப் பயணிகள். மோனாலிசாவின் புன்னகையில் பொதிந்திருக்கும் ஒரு பிரபஞ்ச உண்மையே அவர்களைச் சுண்டியிழுக்கிறது. ஒரு மலரை அதன் செடியிலிருந்து பறித்துப் பயன்படுத்துவது போல எந்த ஒரு கலைப் படைப்பையும் அதன் சூழலிலிருந்து பெயர்த்தெடுத்து ரசிப்பதும் அவசியம். மோனாலிசா விசயத்தில் இதுதான் நடக்கிறது. புயலுக்கு முந்தையதோ பிந்தையதோ அல்லாத ஒரு அமைதியைக் கண்களில் ஏந்தி, ஒரு புன்னகையின் தொடக்கத்தை மெல்லிய இதழ்களில் காட்டி, “நான் பெண்ணாகவே இருந்தாலும் யாருக்கும் ஆபத்தில்லாமல் சமர்த்தாகக் கைகட்டி உட்கார்ந்திருக்கிறேன் பார்” என்பது போல் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் மோனாலிசா. ‘பெண்ணுக்கு வேண்டியதைக் கொடுத்துவிடு, அவள் சமர்த்தாக இருப்பாள்’ என்பதுதான் ஒரு கலைஞன் என்ற முறையில் வின்சி நமக்குச் சொல்லும் செய்தி போலும்.

1 Fodor’s Paris 2011

6. ஒரே இங்கிலீஷ்…

February 26th, 2012

(‘ஒரு லோட்டா ரத்தம்’ நெடுங்கதையின் தொடர்ச்சி. முந்தைய அத்தியாயங்கள்: ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து)

சுடோக்குவிற்குத் தன்னைக் கொடுத்திருந்த மைக் பிரையரின் கவனத்தை மேஜை மேல் படாரென விழுந்த ஃபைல் கலைத்தது. ஐபோனிலிருந்து நிமிர்ந்த மைக்கின் பார்வையிடமிருந்து பிரியாவிடை பெற்றது அன்னாவின் பின்புரம் (சற்றுப் பெரிது என்பதால் சின்ன ‘ர’). ஃபைலைத் திறந்ததும் வைக்கோல் தொப்பி அணிந்து ஊடுருவலாகப் பார்த்தார் வின்சென்ட் வில்லெம் வான் கோ, 37, டச்சு ஓவியர்.

மைக்கிற்குப் பொறுக்கவில்லை. அடப் பாவமே, இவருமா?

கடக்கும் அன்னாவைக் கடந்த குமார் பிரையரின் எதிரில் இருந்த நாற்காலியை இழுத்து அமர்ந்தான்.

“இதென்ன குமார்? இவர் எதற்கு இப்போது சாக வேண்டும்? நம் தியரிப்படி இது தாஸ்தாயெவ்ஸ்கியின் முறைதானே?” என்று கேள்விகளை எரிச்சலாய் அடுக்கினார் மைக்.

“சார், தியரீஸ் வில் ஆல்வேஸ் பி தியரீஸ்… அதற்கு மேல் அவற்றிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது” என்றான் குமார்.

“பட் உனக்கு அதிர்ச்சியாக இல்லையா? வான் கோ கூடவா?”

“வான்கா” என்று திருத்தினான் குமார். “அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது… ஆனால் இது கொலையாளியின் பேட்டர்னுக்கு ஒத்துப்போகிறது… நாம்தான் ஊகிக்காமல் விட்டுவிட்டோம்… அதற்காக நம் மீதே முழுப் பழியும் போட்டுக்கொள்ள முடியாது… ஏனென்றால் கேண்டிடேட்ஸ் பட்டியல் ரொம்பப் பெரியது…”

“ஐ ஸீ வேர் யு ஆர் கோயிங்… வான்கா எப்படி செத்தார் தெரியுமா?”

“அன்னா சொன்னாள்… ஏ.கே. 47…”

“கொடூரம்… எல்லா கொலைகளிலும் அனக்ரானிசத்தை கவனித்தாயா? குரூர ரசனை கொலையாளிக்கு… ஆனால் ஆட்டோமேட்டிக் வைத்திருக்கும் அளவு பெரிய ஆளா அவன்? எத்தனை பேர் சேர்ந்து இந்த வேலையைச் செய்கிறார்கள்?”

“சார், சகல மரியாதைகளோடும் சொல்லிக்கொள்கிறேன், நீங்கள் இந்த கேஸை கொஞ்சம் லிட்டரலாக எடுத்துக்கொள்வது போல் தோன்றுகிறது… எப்படிக் கொல்கிறான், எப்படி சாகிறான் என்பது முக்கியமே அல்ல… எவன் சாகிறான் என்பது மட்டும்தான் விஷயம்… மற்றதெல்லாம் சுவையான உள்விவரங்கள், அவ்வளவுதான்… கொலையாளி அணுகுண்டு பயன்படுத்தினால்கூட ஆச்சரியப்படக் கூடாது என்று நினைக்கிறேன்… குரூரத்தின் அளவைப் புரியவைக்கவே செய்யவே இந்த வழிமுறைகள் பயன்படுகின்றன…”

மைக்கிற்கு திடீரென ஒரு சந்தேகம்… “உனக்கு எப்படி இந்த கேஸ் பற்றி இவ்வளவு தெரிகிறது?”

குமார் பதில் சொல்வதற்குள் மைக்கிற்கு திடீரென இன்னொரு சந்தேகம்… “அதை நான் ஏன் அவ்வளவு சீக்கிரம் நம்பிவிடுகிறேன்?”

“இந்த கேஸ் பற்றி எனக்குத் தெரிந்ததாக நினைத்துக்கொள்ள விரும்புகிறேன்… ஆனால் எனக்கும் நிச்சயமாகத் தெரியவில்லை… கொலையாளியின் நோக்கத்தை எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதில்தான் இந்த கேஸ் இருக்கிறது… நான் ஊகிக்கும் நோக்கத்தின் பின்னாலுள்ள மனப்பான்மை எனக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன்… விடுதல்களின் அரசியல் என ஒன்று இருக்கிறது அல்லவா?”

“அது என்ன?”

“கொலையாளி ஏன் சிலரைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று பார்க்க வேண்டும்… மோனே, பிகாசோ, மாக்ரித், காண்டின்ஸ்கி, ஷகால், மொந்திரியான் போன்ற பெரியவர்கள்… ஏன், ஜாக்சன் போலாக், வில்லெம் டி கூனிங் மாதிரி சாக வேண்டிய ஆட்களையும் இதில் சேர்க்கலாம். இவர்கள் யாரும் கொலைபட வாய்ப்பே இல்லை. ஏனென்றால் இவர்கள் வான்கா செய்த எதையும் செய்யவில்லை. வான்கா – பைபோலாருக்கு ஆளாகி, காதை அறுத்து, தற்கொலையெல்லாம் செய்து… – ஹீ இஸ் அ நேச்சுரல் விக்டிம்… வான்காவுக்குக் காக்காய் வலிப்பு வேறு இருந்தது, இளவரசர் மிஷ்கின் மாதிரி. எல்லாமாய்ச் சேர்ந்து அவர் தாஸ்தாயெவ்ஸ்கிய கதாபாத்திரம் ஆகிறார்… அதனால்தான் இப்போது செத்திருக்கிறார்… தாஸ்தாயெவ்ஸ்கி கொலைக்கு இதை முன்னோட்ட ருசி காட்டுகிறான் கொலையாளி என்று தோன்றுகிறது…”

இந்திய பீரோவிலிருந்து இவனை அனுப்பியது யாருடைய முடிவாக இருக்கும் என்று யோசித்தார் மைக்.

“ஓ.கே. பிஃபோர் வீ ஆர் லெஃப்ட் வித் சிட்னி ஷெல்டன் அண்ட் பௌலோ கொய்லோ, நாம் சீக்கிரம் விசாரணையைத் தொடங்க வேண்டும். ஏனென்றால் திஸ் இஸ் நோ மோர் சீரியல் கில்லிங். திஸ் இஸ் எ ஸ்ப்ரீ.”

5. ஒழிந்தான் ஓவியன்

February 25th, 2012

(‘ஒரு லோட்டா ரத்தம்’ நெடுங்கதையின் தொடர்ச்சி. முந்தைய, பிந்தைய அத்தியாயங்கள்: ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஆறு)

ஏப்ரல் 1, 1890, பிரான்ஸ்.

“வான்கா, வான்கா, வான்கா. என் பெயர் அது அல்ல. ஆனாலும் வான்கா என்றால் செத்தா போய்விடப்போகிறேன்?” என்று நினைத்துகொண்டான் வேறு யார் வான்காதான். வின்சென்ட் வில்லெம் வான் கோ (1853-1890) சாகத்தான் போகவிருந்தான். அவனுக்கும் அது தெரிந்திருந்தது. ஏனென்றால் ஆரம்பத்திலிருந்தே அது அவனுடைய திட்டம்தான். இடுப்பில் இயந்திரத் துப்பாக்கி உறுத்தியது. இன்னும் சிறிது நேரம்தான், பொறுத்திரு என்று தனதிடுப்பை வான்கா சமாதானப்படுத்தினான்.

பார்வையைத் தொலைவில் செலுத்தியபடி நடந்தான் வான்கா. அவனால் காதலிக்கப்பட்டக் கோதுமை வயல்கள் தூர விரவிக் கிடந்தன. சூரியன் குழப்பமான வட்டக் கோடுகளால் சூழப்பட்டு திப்பித்திப்பியாக இருந்தது. ஆனால் இந்தா, இந்தா என்று கதிர்களை வீசிக்கொண்டிருந்தது. இது போதாதென்று வெயில் வேறு ராட்சதப் பூரான் போல வயல்களின் மேல் ஊர்ந்துகொண்டிருந்தது. தன் பங்கிற்கு வானமும் போஸ்ட்-இம்ப்ரஷனிச நீலவெளியாக விரிந்திருந்தது.

அவ்வளவு பெரிய வானத்தின் கீழ் தன்னை மிகச் சிறிசாக உணரத் தொடங்கினான் வான்கா. தினமும் இதே வாடிக்கையாய்ப் போயிற்று என்று அவன் அலுத்துக்கொண்டான். ஆனால் நீலம் அவனுக்குப் பிடித்த நிறம். ஏன், எல்லா நிறமும் அவனுக்குப் பிடிக்கும். அதனால்தான் வண்ணங்களை அவன் தாராளமாய்ப் பயன்படுத்தினான். வாழ்க்கையில், அதுவும் தன்னுடைய வாழ்க்கையில், அவன் விற்ற ஒரே ஓவியம் நானூறு பிராங்குகளுக்குப் போனது. ஆனால் அதற்கு பெயிண்ட் செலவே ஐநூறு பிராங்குகள். பிறகு சிறிசாக உணராமல் எப்படி இருக்க முடியும்?

ஆகாயம், சூரியன், காற்று, வயல், வீடுகள், பாலங்கள், தேவாலயங்கள் எல்லாம் வான்கா புகழ் வான் கோவின் தூரிகைக்கு மெழுகாகத் தயாராய் திருகியும் நெளிந்தும் கொண்டிருந்தன. அவனைப் பார்த்துக் காக்கைகள் பறந்தன. நிற்பது இயற்கை, நடப்பது நான், பறப்பது காக்கை என்று அவனுக்குப் பட்டது. இயற்கை பிரம்மாண்டமாக இருந்தாலும் அதை ஒரு கித்தானில் மீட்டுருவாக்கி சுருட்டி எடுத்துச் செல்வதோடல்லாமல் அதை மறந்துபோய் எங்கேயோ வைத்துத் தொலைந்துபோக்கவும் முடிவது சிறுசாக இருப்பதன் பலாபலன்தானே என்று சமாதானப்படுத்திக்கொள்ளத் தோணியது வான்காவுக்கு.

நடுவயலை அடைந்த பின் வான்கா ஈசலை ஓரிடத்தில் வைத்தான். அண்ணாந்து சூரியனைப் பார்த்தான். ஒன்று, பெய்து கடுக்கும், அல்லது காய்ந்து கடுக்கும் என்று அவன் இப்போது நினைத்தான். “செயற்கையைத் தீட்டாதே, இயற்கையைத் தீட்டு” என்பான் நாசகார பால் கொக்கெய்ன். எது இயற்கை, எது செயற்கை? தாஹிதியர்களுக்குக் கொடுத்த பால்வினை நோய் இயற்கையா? காதின் ஒரு ஓரத்தைக் கொஞ்சம் நறுக்கினால் முழுக் காதையும் நறுக்கியதாக ஊரெல்லாம் அவதூறு பரப்பியது இயற்கையா? அல்லது செயற்கையா?

சுபாவப்படி இயற்கையின் ஒரு பகுதியாகத் தன்னை உணர்ந்தான் வான்கா. இயற்கையைப் போலிசெய்வதில் பெருமிதம் அடைந்தான். இயற்கைதான் என் மூலம் தன்னை (“தன்னைத் தானே”) போலிசெய்துகொள்கிறது என்று புளகித்தான். இயற்கை தன்னைப் போலிசெய்துகொள்ளத் தன்னை (வான்காவை) பயன்படுத்தினாலும் போலிசெய்யப்படுவதை அது அறியாது என்று நினைத்தான் வான்கா. ஆனால் அப்படி நினைத்தால் இரண்டு இயற்கைகள் இருப்பது போலவும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போலவும் ஆகுமே என்றும் அவனுக்குத் தோன்றியது.

திடீரென இந்த சிந்தனையின் ஓட்டம் வான்காவின் தூரிகையின் கையினைப் பிடித்து நிறுத்தியது. கடவுளே! இதெல்லாம் என் சிந்தனைகள் அல்லவே? வெயில் பூரானா? இதென்ன வக்கிரம்? என் பெயர் வான்கா அல்ல. எங்கிருந்து வருகிறது இந்தத் தட்டும் சத்தம்? எனக்கு என்ன ஆயிற்று? வான்காவுக்கும் வியர்த்துக்கொட்டியது. நன்றாகத்தான் இருந்தான், ஆனால் திடீரென்று சாக வேண்டும் போல் இருந்தது. இடுப்பில் ஏதோ உறுத்தியது. வான்கா அங்கே கைவைத்துப் பார்த்தான். இயந்திரத் துப்பாக்கி. அதிர்ந்தான். என்ன இது? எப்படி என்னிடம் வந்தது? மரணத்தின் குரல் கேட்டுத் திரும்புவது போல் திரும்பியது துப்பாக்கி.

ரட்டட்டட்டட்டட்!

நெஞ்சில் பகீரென்ற வலி. தோட்டாக்கள் இதயத்திற்குப் பக்கவாட்டில் சென்று புதைந்துகொண்டன. வான்காவுக்கு ஒன்றும் புரியவில்லை. நெஞ்சைத் தொட்டுப் பார்த்தான். அக்ரிலிக் அல்ல, ரத்தம். அக்ரிலிக் இன்னும் விலை அதிகம்.

எனக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது? பிரான்சில் உள்ள ஆர்லேயா இது? இந்த சூரியனுக்கு என்ன ஆயிற்று? யார் இந்த பால் கொக்கெய்ன்? இது என்ன மொழி? கேள்விகள் அலைபுரண்டன.

ஆனால் அவை மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்தன.

சம்பவ மதியம்

February 23rd, 2012

மதியத்தில் ஒரு நேரம். ஒரு பேருந்துக்காக அதன் நிறுத்தம் ஒன்றில் காத்திருந்தேன். பேருந்து என்னை நெருங்கப்போவதற்கு முன்னோட்டமாகப் பேருந்து வரும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. மணி இரண்டரை என்று சொன்ன கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். காலம் கனிய இன்னும் ஐந்து பத்து நிமிடங்கள் காத்திருந்தன. வெயிலில் காய்ந்துகொண்டிருந்த எதிர்வரிசையின் கடைகள் அவற்றின் உரிமையாளர்களுடைய மதிய உணவிற்காக மூடியிருந்தன. என் பக்கமெல்லாம் நிழல். என்னோடு நிழற்குடையும் சேர்ந்து நிழலை அனுபவித்துக்கொண்டிருந்தது.

அப்போது பக்கத்தில் தானும் பேருந்திற்காகக் காத்திருந்த ஒருவர். ஆளுயரம் இருந்தார், வயது நடுத்தரம். கோலம் போடத்தக்க அளவு சப்பட்டையான முகம். நுனி மட்டும் உள்ளிருந்து எட்டிப் பார்ப்பது போன்ற சிறு மூக்கு. “என் அப்பா செங்கல்பட்டு தாசில்தார் ஆபீசில் வேலை பார்த்தார். 1970இல் அவர் ரிடையர் ஆனதும் நான் இங்கே சென்னைக்கு வந்துவிட்டேன். சிங்கபெருமாள் கோவிலில் நிலம் இருக்கிறது. என் தெய்வாதீனம், நான் சென்னைக்கு வந்ததும் எனக்கு வேலை கிடைத்தது. மனைவி ஹவுஸ்வைஃப். இரண்டுமே பிள்ளைகள். பெரியவன் எஸ்.ஆர்.எம்.மில் இன்ஜினியரிங் படித்தான். இங்கேயே ஒரு நல்ல படித்த பெண்ணாகப் பார்த்து கல்யாணம் செய்துவைத்தேன். இப்போது பெங்களூரில் வசதியாக இருக்கிறான். அவனுக்கும் இரண்டுமே பிள்ளைகள். சின்னவன் பாலிடெக்னிக் படிக்கிறான். அவனுக்குப் பாடுவதில் கொஞ்சம் ஆர்வம். போட்டியிலெல்லாம் பரிசு வாங்கியிருக்கிறான். நான் இருப்பது டபுள் பெட்ரூம் வீடு. சொந்த வீடுதான். வேளச்சேரி பஸ் ஸ்டாண்டிலிருந்து ஐந்து நிமிடம் நடக்க வேண்டும். நல்ல இடம். எல்லாமே பக்கத்திலேயே இருக்கிறது. ஆனால் மழை பெய்தால் நாறிவிடும். மற்றபடி அருமையான இடம். அங்கே எல்லோரும் நன்றாகப் படித்து ஓரளவு நல்ல நிலையில் இருப்பவர்கள். மாடர்னான ஏரியா. நாங்களும் மாடர்ன்தான். என் மனைவி கொஞ்சம் பழைய காலத்துப் பெண்பிள்ளை. மற்றபடி நாங்கள் ரொம்ப ஃபார்வர்டு. சின்னவன் எப்போதும் மொபைல்தான். நிறைய தோழிகள் இருக்கிறார்கள். சில நாட்களில் அவர்களை வீட்டுக்குக் கூட்டி வருவான். நான் அதையெல்லாம் கேட்டுக்கொள்ள மாட்டேன். ‘எனக்கு உன் வயது புரிகிறது. என் வயதை நீ மதிப்பது போல் உன் வயதை நான் மதிக்கிறேன் – ‘ என்ன? ‘உன் சுதந்திரத்தில் நான் தலையிட மாட்டேன். ஆனால் முக்கியமான டெசிஷன் மேக்கிங்கை உன் பெற்றோரிடம் விட்டுவிடு. நீ நன்றாக இருப்பாய், நான் கியாரண்டி.’ நம் காலத்தில் நமக்கு இது மாதிரி விஷயத்தில் சாய்ஸ் இல்லை. பெற்றோர் பேச்சுதான் நமக்கு ஜி.ஓ., ஹெஹ்ஹெஹ்ஹே. அதனால் நமக்கு ஒன்றும் குடிமுழுகிவிடவில்லை. என் மனைவி மாதிரி ஒருத்தி கிடைப்பது அபூர்வம். பிள்ளைகளை முழுக்க அவள்தான் வளர்த்தாள் (அவளுக்கு ஏற்கனவே பி.பி., கொலஸ்ட்ரால் இருக்கிறது. இன்னும் மூன்று வருஷங்களில் இதயநோய் வந்து பைபாஸ் செய்ய வேண்டியிருக்கும். அடுத்து எனக்கு ஹெர்னியா ஆபரேஷன், காடராக்ட் என மூன்று லட்சம் செலவாகிவிடும்). ஆனால் நம் சந்ததிகளுக்கு சாய்ஸ் இருக்கிறது. அதன் அருமை, அதன் வலிமை அவர்களுக்குத் தெரியுமா என்றால், எல்லா பிள்ளைகளுக்கும் தெரிவதில்லை. எத்தனையோ பேர் நாசமாகப் போகிறார்கள். பெரியவனுக்கு நானேதான் பார்த்துத் திருமணம் செய்துவைத்தேன். கைநிறைய சம்பளம், விக்கிரகம் மாதிரி குழந்தைகள். சின்னவனிடம் சொல்லிவிட்டேன், ‘வெள்ளைக்காரியைத் தவிர யாரானாலும் உன் இஷ்டம்.’ வெள்ளைக்காரி என்றால் கலாச்சார ரீதியாக ரொம்ப தூரம். நிற்காது. எனக்கு இன்னும் ஒரு வருஷம்தான் சர்வீஸ். மணலியில் மூன்று பெட்ரூம் வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன். முடித்தாயிற்று கட்டி. ரெஜிஸ்ட்ரேஷன் ஆயிற்றென்றால் பால் காய்ச்சிவிடலாம். அதற்குத்தான் போய்க்கொண்டிருக்கிறேன். ஆட்டோவில் போகலாம் என்றால் ஆட்டோவிற்கே விலை சொல்கிறான்” என்பது போன்ற முகபாவத்துடன் என்னிடம் ஏதோ பேச வாயைத் திறக்கத் தொடங்கினார்.

அந்த சமயம் பார்த்து என் கைபேசி ஒலித்தது. நான் சற்று நகர்ந்து நின்றுகொண்டு கைபேசியை எடுத்தேன். காதில் அதை வைத்து எதிர்முனையிடம் இப்படிக் கேட்டேன்:

“ஹலோ, யார் பேசறது?”

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar