ஒரு வேண்டுகோள்

அன்பின் வாசகர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். நான் ஃபேஸ்புக் கணக்கு தொடங்கிய புதிதில் நான் பார்த்த திரைப்படங்களாக ஃபேஸ்புக்கில் பட்டியலிட்டுக்கொள்ள படப் பெயரைகளைத் தருமாறு வேண்டுகோள் விடுத்ததும் உங்களில் பெரும்பாலோர் படப் பெயர்களை எனக்கு அளித்து அவற்றை சேர்த்ததும் உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம். அதை விக்கிபீடியா அளவில் பிரம்மாண்டமாக செய்யத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் தவிர்க்கவியலாத காரணங்களால் அதை மேற்கொண்டு தொடர முடியவில்லை.

2012 சென்னை புத்தகக் காட்சி எனது இன்னொரு கண்ணாகிய புத்தகங்களைப் பற்றிய அதே மாதிரி ஆசையைக் கிளறியிருக்கிறது. இந்த முறை புத்தகக் காட்சியில் பலருடன் பேச வேண்டியிருந்ததால் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க நேரமில்லை. அதனால் நான்கைந்து புத்தகங்களையே வாங்க முடிந்தன. அவற்றையும் இணையத்தில்தான் வாங்க முடிந்தன. புத்தகக் காட்சியில் புத்தகமேவாங்கிவில்லை என்றால் என்னை ஆதர்சமாகக் கொண்ட இளம் வாசகர்கள் யாராவது ஏமாந்து தீக்குளித்தாலும் ஆச்சரியமில்லை. என்னால் இவர்கள் சாவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆதலால் வாசகர்களாகிய நீங்கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியலை எனக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நூல்கள் நீங்கள் வாங்கிய புத்தகங்களாக இருக்க வேண்டும் என்கிற அவசியம்கூட இல்லை. புத்தகக் காட்சியிலோ நடைபாதைக் கடைகளிலோ கண்ணில் பட்டு அரைகுறையாய் நினைவில் தங்கிய புத்தகங்களாக இருந்தாலும் போதும். நீங்கள் அனுப்பும் புத்தகப் பட்டியல்களை நான் பரிசீலித்து என் ரசனைக்கு ஒத்துப்போவது போல் தெரியும் புத்தகங்களை நான் வாங்கியதாகப் பட்டியலிட்டுக்கொள்வேன். இதன் தார்மிகம் குறித்துக் கேள்வியெழுப்ப விரும்பும் அன்பர்களுக்கு: பார்க்காத படங்களை பார்த்ததாக சொல்லிக்கொள்ளும் தேவை இருப்பது வேறு, இனிமேல்தான் படிக்கவே போகும் புத்தகங்களை வாங்காமலே வாங்கியதாகச் சொல்லிக்கொள்ளும் அவசியம் ஏற்படுவது வேறு.

புத்தகப் பட்டியல்களை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். குறிப்பு:- முழு புத்தகங்களை யாரும் அனுப்ப வேண்டாம். புத்தகத்தின் பெயர்களை மட்டும் அனுப்பவும். சென்ற ஆண்டு படப் பெயர்களை கேட்டபோது சிலர் டிவிடிகளை அனுப்பியிருந்தார்கள். ஒருவர் ஒரு முழு இரானிய திரைப்பட யூனிட்டினரை அஞ்சல் செலவின்றி என் வீட்டிற்கு அனுப்பியிருந்ததால் நான் தண்டம் கட்ட வேண்டியிருந்தது.

மின்னணு புத்தகம்

பரீட்சார்த்த முயற்சியாக ஒரு படைப்பினை மின்னூலாக்கியுள்ளேன். epub வடிவிலான அதனை வாசகர்கள் இங்கு கிளிக் செய்து பெறலாம். அப்படைப்பானது ‘எனது பிரெஞ்சுப் புரட்சி அனுபவங்கள்’ புனைகட்டுரை ஆகும்.

புது புத்தக பதிவு

திசை காட்டிப் பறவை இப்போதுப் புத்தக கண்காட்சியில் கிடைக்கிறது. ஆழி பதிப்பகம். ஸ்டால் எண் 340-341. இனி இந்த பதிவு செல்லாது. ஏனெனில் புத்தக கண்காட்சி முடிந்துவிட்டது. இனிமேல் அடுத்த ஆண்டுதான் நடைபெறும். அது வரை இந்த பதிவினை முடக்கி வைக்கிறேன்.

டைரிக் குறிப்புகள்

டிசம்பர் 29, 2010

அடுத்த பத்திக்கு “பட்டாம்பூச்சிகளின் காதல்” என்று தலைப்பு வைத்தாயிற்று. இனி அதில் என்ன எழுதுவது என்று யோசிக்க வேண்டும். பட்டாம்பூச்சியும் காதலும் ஒரே வாக்கியத்தில் இடம்பெற்ற உயர்அற்புதத்தைக் குறித்தும் எழுதலாம். அல்லது “பட்டாம்பூச்சிகள் காதலிக்கும் நூலகம்” என்று தலைப்பையே மாற்றி பத்தியின் விஸ்தாரத்தை விசாலிக்கலாம். “பட்டாம்பூச்சிகள் காதலிக்கும் நூலகத்தின் மீது கவியும் தனிமையின் நிசப்தம்” என்று வைத்தால் பலர் வாயை அடைத்த கையோடு அவர்களுடன் சேர்ந்துகொண்ட மாதிரியும் இருக்கும். அல்லது இன்னும் இரண்டு வார்த்தைகள் சேர்க்க வேண்டியிருக்குமோ?

* * *

லார்டு லபக்குதாசை புனைவு எழுதச் சொல்லி நாள்பட்டு வற்புறுத்திவந்தேன். பின்னர் அவரின் மொழிபெயர்ப்புகளே ஒருவகையில் புனைவுகள்தாம் என்று புரிந்துகொண்டேன். இருந்தாலும் நம் புனைவுகள் நம் பெயரில் வந்தால் அது தனித்துவ மரியாதைதானே. ஆகையால் கதை எழுதுங்களேன் என்றேன். அவர் இந்திய அரசியல் சாசனத்தை விவிலியத் தமிழில் மொழியாக்கம் செய்துகொண்டிருக்கிறாராம். புதுமையான புனைவு முயற்சியாம். முடிப்பார் என்று தோன்றவில்லை.

* * *

உண்மையான எழுத்தாளன் ஒரு காட்டாறு போல இருக்க வேண்டும். அல்லது சில காட்டாறுகளைப் போல* (*அவரவர் வசதிப்படி).

* * *

ஏதோ ஏரியில் படகு கவிழ்ந்து இருவர் செத்திருப்பதை செய்தித்தாளில் படித்ததால் கிளறப்பட்ட நினைவில் ஒரு உறவினர் வீட்டிற்கு ஐந்து வயதில் சென்றிருந்தவன் அவ்வீட்டுக் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது சட்டைப்பையில் இருந்த ஒரு ரூபாய் நாணயம் அதனுள் விழுந்துவிட, பெற்றோர் காசைக் கேட்டால் என்ன சொல்வது என்ற பயத்தில் நான் அருகாமையில் இருந்த ஒரு புதருக்குப் பின்னே பதுங்கிச் சில நிமிடங்களில் தேடி வந்த ஒருசிறு கூட்டம் நீண்ட நேரம் தேடிப் பார்த்துவிட்டு என் தந்தையிடம் போய் நான் காணாமல் போனதாய்ச் சொன்னதும் இதென்னடா வம்பு என்று அவர் நேரடியாகப் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துவிட்டுத் திரும்பி வந்து என்னைப் புதருக்குப் பின்னே பார்த்து நொய்யப் புடைத்துவிட்டார்.

* * *

காலை 11:00 மணியளவில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன். சில அடிகள் தள்ளி என்னைப் போல் ஒரு இளம்பெண்ணும் நின்றிருந்தாள். நான் நிழற்குடைக்குக் கீழ் நின்றதும் ஒரு பேருந்து வந்து அவள் அதில் ஏறிச் சென்றுவிட்டாள். பேருந்தில் நிறைய கூட்டம். நான் வந்ததால்தான் அவள் அதில் ஏறிப் போய்விட்டாளோ என்று எனக்கு சந்தேகம். ஒருவேளை அடுத்த நிறுத்தத்தில் அவள் இறங்கிவிடலாம் என்று தோன்ற, உடனே அந்தப் பக்கம் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்திப் பேருந்தைப் பின்தொடரச் சொன்னேன். அடுத்த நிறுத்தத்தில் இறங்கிப் பார்த்தால் அந்த இடத்தில் அந்தப் பெண்ணுக்குப் பதிலாய் குள்ளமான முதியவர் ஒருவர்தான் நின்றிருந்தார். எனக்கோ சந்தேகம் வலுத்தது. முதியவர் அருகில் எதிரில் நின்று அவர் முகத்தை உற்றுப் பார்த்தேன். அவர் முகத்தைத் திருப்பிக்கொண்டார். ஒரு பேருந்து நிறுத்த இடைவெளியில் ஏதோ நடந்திருக்கிறது.

* * *

உலகில் அன்பைத் தவிர வேறு எந்த உணர்வும் சந்தேகத்தைக் கிளப்புவதாகவே இருக்கிறது. ஒவ்வொரு வெட்டு, குத்து, கொலையையும் அன்பிற்கான வேண்டுகோளாகவே என்னால் பார்க்க முடிகிறது. கால, தேச, வர்த்தமான எல்லைகளைத் தாண்டி எல்லோரையும் தொடுகிறது அன்பு. உறவுகளுக்கேற்ற வேடங்களைத் தரிக்கிறது அன்பு. அன்பிற்கு இல்லை அடைக்கும் தாள்.