இரு கவிதைகள்

in கவிதை | Comments Off on இரு கவிதைகள்

1. குறுஞ்செய்தி

என் இறப்புச் செய்தியைச் சொல்லி
எனக்கே குறுஞ்செய்தி வந்தது
அனுப்பியவரை அழைத்தேன்
“நீங்க இதுக்கெல்லாம்
வர மாட்டீங்கன்னு தெரியும்
இருந்தாலும் கூப்புடுறதுதானே மொற.”

2. ஐஸ் பெட்டி

என் சாவு வீட்டுக்குச் சென்றிருந்தேன்
லெனின் போல், தூங்கும் அழகி போல்
என்னை ஐஸ் பெட்டிக்குள் வைத்திருந்தார்கள்
எனக்கு நிற்க ஓர் இடம் கிடைத்தது
வழக்கமான காட்சிகள், வழக்கமான மனிதர்கள்
அங்கே நிற்க வேண்டியிருந்த நேரம் வரை
கதைகளும் உணர்ச்சிகளும் பகிரப்பட்டன
யாரும் என்னை அடையாளம் காணவில்லை
பெட்டிக்குள் இருந்த உடலைப் பார்க்க முயன்றேன்
என்னை மறைத்து மேலே இன்னும்
இரு பெட்டிகள் அடுக்கியிருந்தன.

மாஸ்டர் பீஸ்

in கட்டுரை | Comments Off on மாஸ்டர் பீஸ்

பழகிய டீ மாஸ்டர் ஒரு மாத விடுமுறைக்குப் பின்பு கடைக்குத் திரும்பி வந்திருந்தார். சந்தோசம்.

நலம் விசாரித்தால் ஏதாவது விவகாரமாகும் என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தேன்: “ரெண்டு டீ.”

“எனக்கு லெமன் டீ” என்றார் லபக்குதாஸ்.

தேநீர் கைக்கு வந்தது. அதை உறிஞ்சியதுதான் தாமதம், வயிற்றிலுள்ள குழந்தைகளுக்கான கைக்குட்டை அளவுக்கு ஆடை வாய்க்குள் வந்தது. ஓரமாகத் துப்பிவிட்டு மீண்டும் உறிஞ்சினேன். இன்னும் கொஞ்சம் ஆடை வந்தது.

“என்ன மாஸ்டர், டீயில மலாய் தூக்கலா இருக்கே? சமீபத்துல மலேசியா போய்ட்டு வந்தீங்களா?”

“ஊருக்குப் போயிருந்தன் சார்” என்றார் மாஸ்டர். “யாரு லெமன் டீ?” என்றார். லெமன் டீ அதை வாங்கிக்கொண்டார்.

“மலேசியா-மலாய்ன்னு ஒரு ஜோக் அடிச்சேன். மாஸ்டர் கண்டுக்கவேல்ல” என்று லெமன் டீயிடம் முணுமுணுத்தேன்.

“நம்ம மெசேஜ் எல்லாமே மக்களுக்குப் போய்ச் சேரும்னு எதிர்பாக்காதீங்க” என்றார் லெமன் டீ.

“மாஸ்டருக்கு மலேசியாவும் தெரிஞ்சிருக்கும், மலாயும் இயல்பாவே தெரிஞ்சிருக்கும். அப்புறம் ஏன் ரீச் ஆவ மாட்டேங்குது?”

“மலேசியாவும் மலாயும் தெரிஞ்சிருந்தாப் போதுமா? ரெண்டும் ஒண்ணாத் தெரிஞ்சிருக்கணுமே!” என்றார் அறிஞர் லெமன் டீ.

சரியான சில்லறை

in கட்டுரை | Comments Off on சரியான சில்லறை

தேநீர் குடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் வழியில் நாளேடு வாங்க செய்தித்தாள் கடைக்குச் சென்றேன்.

“ஒரு இங்லீஷ் ஹிண்டு, ஒரு தமிழ் ஹிண்டு” என்று நூறு ரூபாயை நீட்டினேன் – ஒற்றைத் தாளாகத்தான்.

“பேப்பர் பன்னண்ட் ருவா. ரெண்ட் ருவா சில்ற இருக்கா?” என்றார் கடைக்காரர்.

“இல்ல” என்றேன். தெரிந்த கடை என்பதால் நெஞ்சைக் கல்லாக்கிக்கொள்ளத் தேவையில்லாத மாதிரி ஒரு சூழல்.

கடைக்காரர் செய்தித்தாள்களையும் மீதிச் சில்லறையையும் கொடுக்கக் கையில் வாங்கிக்கொண்டேன். மீதிச் சில்லறையில் ஓர் ஐம்பது ரூபாய் நோட்டு, இருபது ரூபாய் நோட்டு, பத்து ரூபாய் நோட்டு, நாணயங்களாக எட்டு ரூபாய் ஆகியவை இருந்தன. காசைப் பார்த்ததும் மனசுக்குள் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது: கடைக்காரர் கேட்ட பன்னிரண்டு ரூபாய் அவர் கொடுத்த சில்லறையிலேயே இருந்தது, கேள்வியிலேயே பதில் இருப்பது போல.

கடைக்காரரைப் பார்த்தேன். அவர் கல்லாவைத் திறந்துவைத்துக்கொண்டு அன்றாட அலுவல்களில் மூழ்கியிருந்தார்.

“இந்தாங்க பன்னண்ட் ருவா. ‘சரியான சில்லறை’, ஹெஹ்ஹெ” என்று அந்தத் தொகையை நீட்டினேன்.

கடைக்காரர் காசையும் என்னையும் உற்றுப் பார்த்தார்.

“சரியாப் போச்சு சார். குட்த்துட்டீங்க. வீட்டுக்குப் போங்க” என்றார்.

பந்தாவாகச் சொல்ல வேண்டும் என்றால், முதல் வரியிலிருந்தே என்னுடைய திட்டமும் அதுதான்.

இவ்வளவு

in கவிதை | Comments Off on இவ்வளவு

இவ்வளவு நடக்கும்போது
நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்
என்று கேட்கிறார்கள்
அதான் புலம்புகிறேனே.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar