Posts Tagged ‘கட்டுரை’

மாஸ்டர் பீஸ்

in கட்டுரை

பழகிய டீ மாஸ்டர் ஒரு மாத விடுமுறைக்குப் பின்பு கடைக்குத் திரும்பி வந்திருந்தார். சந்தோசம்.

நலம் விசாரித்தால் ஏதாவது விவகாரமாகும் என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தேன்: “ரெண்டு டீ.”

“எனக்கு லெமன் டீ” என்றார் லபக்குதாஸ்.

தேநீர் கைக்கு வந்தது. அதை உறிஞ்சியதுதான் தாமதம், வயிற்றிலுள்ள குழந்தைகளுக்கான கைக்குட்டை அளவுக்கு ஆடை வாய்க்குள் வந்தது. ஓரமாகத் துப்பிவிட்டு மீண்டும் உறிஞ்சினேன். இன்னும் கொஞ்சம் ஆடை வந்தது.

“என்ன மாஸ்டர், டீயில மலாய் தூக்கலா இருக்கே? சமீபத்துல மலேசியா போய்ட்டு வந்தீங்களா?”

“ஊருக்குப் போயிருந்தன் சார்” என்றார் மாஸ்டர். “யாரு லெமன் டீ?” என்றார். லெமன் டீ அதை வாங்கிக்கொண்டார்.

“மலேசியா-மலாய்ன்னு ஒரு ஜோக் அடிச்சேன். மாஸ்டர் கண்டுக்கவேல்ல” என்று லெமன் டீயிடம் முணுமுணுத்தேன்.

“நம்ம மெசேஜ் எல்லாமே மக்களுக்குப் போய்ச் சேரும்னு எதிர்பாக்காதீங்க” என்றார் லெமன் டீ.

“மாஸ்டருக்கு மலேசியாவும் தெரிஞ்சிருக்கும், மலாயும் இயல்பாவே தெரிஞ்சிருக்கும். அப்புறம் ஏன் ரீச் ஆவ மாட்டேங்குது?”

“மலேசியாவும் மலாயும் தெரிஞ்சிருந்தாப் போதுமா? ரெண்டும் ஒண்ணாத் தெரிஞ்சிருக்கணுமே!” என்றார் அறிஞர் லெமன் டீ.

சரியான சில்லறை

in கட்டுரை

தேநீர் குடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் வழியில் நாளேடு வாங்க செய்தித்தாள் கடைக்குச் சென்றேன்.

“ஒரு இங்லீஷ் ஹிண்டு, ஒரு தமிழ் ஹிண்டு” என்று நூறு ரூபாயை நீட்டினேன் – ஒற்றைத் தாளாகத்தான்.

“பேப்பர் பன்னண்ட் ருவா. ரெண்ட் ருவா சில்ற இருக்கா?” என்றார் கடைக்காரர்.

“இல்ல” என்றேன். தெரிந்த கடை என்பதால் நெஞ்சைக் கல்லாக்கிக்கொள்ளத் தேவையில்லாத மாதிரி ஒரு சூழல்.

கடைக்காரர் செய்தித்தாள்களையும் மீதிச் சில்லறையையும் கொடுக்கக் கையில் வாங்கிக்கொண்டேன். மீதிச் சில்லறையில் ஓர் ஐம்பது ரூபாய் நோட்டு, இருபது ரூபாய் நோட்டு, பத்து ரூபாய் நோட்டு, நாணயங்களாக எட்டு ரூபாய் ஆகியவை இருந்தன. காசைப் பார்த்ததும் மனசுக்குள் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது: கடைக்காரர் கேட்ட பன்னிரண்டு ரூபாய் அவர் கொடுத்த சில்லறையிலேயே இருந்தது, கேள்வியிலேயே பதில் இருப்பது போல.

கடைக்காரரைப் பார்த்தேன். அவர் கல்லாவைத் திறந்துவைத்துக்கொண்டு அன்றாட அலுவல்களில் மூழ்கியிருந்தார்.

“இந்தாங்க பன்னண்ட் ருவா. ‘சரியான சில்லறை’, ஹெஹ்ஹெ” என்று அந்தத் தொகையை நீட்டினேன்.

கடைக்காரர் காசையும் என்னையும் உற்றுப் பார்த்தார்.

“சரியாப் போச்சு சார். குட்த்துட்டீங்க. வீட்டுக்குப் போங்க” என்றார்.

பந்தாவாகச் சொல்ல வேண்டும் என்றால், முதல் வரியிலிருந்தே என்னுடைய திட்டமும் அதுதான்.

கடனுக்கு

in கட்டுரை

மகனின் கல்லூரிப் படிப்புக்காக வங்கியில் ரூபாய் முப்பது லட்சம் கல்விக் கடன் வாங்கியிருக்கிறார் லபக்குதாஸ். கேட்டு ஆடிப்போனேன். நாட்டில் இருக்கிற பணமே கொஞ்சம்தான் என்கிறபோது கல்விக் கடன் என்ற பெயரில் லட்சலட்சமாக வாரிக் கொடுத்தால் செலவுக்கு என்ன செய்வது? வங்கிகள் இந்தப் போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும். மாணவர்கள் ஒரு வாரம் கல்லூரிக்கு மட்டம் போட்டால் ஒன்றும் கெட்டுவிடாது.

என் மகனுக்கும் லபக்குதாசின் மகன் வயதுதான். ஆனால் நான் கடனெல்லாம் வாங்குவதில்லை. எதிலாவது முதலீடு செய்து தருவதாகச் சொல்லிப் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிடுவேன். இன்னோர் எழுத்தாளரிடமிருந்து கற்றுக்கொண்ட உத்தியிது. பணம் கொடுத்தவர் சில காலம் காத்திருப்பார். பிறகு வந்து பணத்தைத் திரும்பக் கேட்பார். நானும் இப்போது வரும், அப்போது வரும் என்று சொல்லிச் சமாளிப்பேன். “எப்போது வரும்?” என்பதை மட்டும் அவர் கேட்காவிட்டால் அதையும் நானே கேட்டுவிடுவேன். நாம் எதையோ செய்யாமல் விடுவதாக அவர் நினைக்கக் கூடாது, அல்லவா?

என் புத்தகங்கள் ஆண்டு முழுக்க வெளியாகிக்கொண்டே இருக்கும். எனவே இடையில் வரும் ஒரு சல்லிப் புத்தகத்தை ‘முதலீட்டாளருக்கு’ அர்ப்பணித்து அவர் கையில் ஒரு பிரதி கொடுப்பேன். புத்தகத்தில் தம் பெயரை அச்சில் பார்த்து நெகிழ்ந்துவிடுவார். அவனவன் புதுமைப்பித்தன், நகுலன், விக்ரமாதித்யன், ஜி. நாகராஜன் என்று புத்தக அர்ப்பணிப்பு செய்துகொண்டிருக்கும்போது நான் டெலிபோன் டைரக்டரி பெயர்களுக்கெல்லாம் கும்பிடு போட்டுக்கொண்டிருப்பேன். ஆனாலும் நஷ்டம் இல்லை. நம்மால் நாலு பேர் மற்றவர்களுக்குத் தெரிவதில் அர்த்தமில்லாத ஒரு திருப்தி, அவ்வளவுதான். இவர்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியாததும் ஒரு வசதி.

இந்த ஆளுமைகள் பெரும்பாலும் வளரும் எழுத்தாளர்கள் அல்லது வாசகர்கள். அங்கீகார ஆசை இருந்தாலும் கூச்சம் தூக்கும் தலைகளின் சொந்தக்காரர்கள். எனவே வெளியீட்டு விழாவில் என் புத்தகம் பற்றிப் பேச முடியுமா என்று எங்கேயோ பார்த்துக்கொண்டு நண்பரிடம் கேட்டுவைப்பேன். பதறி மறுப்பார் என்று தெரிந்துதான். பேச ஒப்புக்கொண்டால் புத்தகம் வெளிவந்த தடயமே இல்லாமல் செய்துவிடுவேன். இந்த வெளியீட்டு விழாப் பேச்சு அழைப்புக் கௌரவம் அவரைச் சிறிது காலம் நிசப்தமூட்டிவைக்கும். (கொஞ்சம் ஆபத்தான தொடர்புகளைக் கொண்ட எழுத்தாளர்கள் என்றால் நான் மதிப்புரை எழுதிப் பேட்டிகளில் குறிப்பிட்டு அடிப்பொடிகளையும் மதிப்புரையில் இறக்குவேன்.)

அடுத்து அவர்கள் ‘படைப்பு’ எதையாவது வாங்கிச் சிறுபத்திரிகைகளிலோ பண்பாட்டு மாத இதழ்களிலோ பிரசுரப்படுத்துவேன். சமூக ஊடகங்களில் இருக்கும் வாசக அடியாட்களை விட்டு அந்தப் படைப்புகளைக் குதற விடுவேன். பிறகு அவரை அழைத்துத் துக்கம் விசாரிப்பேன். எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று ஊக்குவிப்பேன். அதன் பிறகு முதலீட்டாளரிடமிருந்து தாக்குத் தகவலே இருக்காது. இந்த ஏற்பாடு எனக்குப் பெரும் மனநிறைவைத் தரும். ஏனென்றால் பணத்தைத் திருப்பிக் கொடுப்பது என்பது பணத்தைப் பெற்றவருக்கு இழப்பை ஏற்படுத்தும் விசயம். ஏதோ தேவையிருந்தது, வாங்கிவிட்டோம், திருப்பிக் கொடு என்றால் எங்கே போவது? பந்தா என்ன, திருப்பி எறிய?

எனக்குப் போட்டியாக வருவார் என்பதால் லபக்குதாசிடம் இந்த உத்தி பற்றிச் சொல்லவில்லை. நான் மென்மையாகப் புன்னகைத்து வாங்குவேன். அவர் தோளில் கைபோட்டுச் சிரித்து உரிமையாக வாங்குவார். அவருடைய உடல்மொழி உக்கிரமானது. நான் தோற்றுவிடுவேன். ஆனால் அவரது வங்கிக் கடன் பற்றி என் கவலையைத் தெரிவித்தேன். முப்பது லட்சம் ரூபாய் என்றால் அதில் கொஞ்சமாவது என் பணம் இருக்கும்தானே.

முன்பே திருமணம்

in கட்டுரை

என் அறையில் என் நாற்காலிக்கு எதிரே இன்னொரு நாற்காலியைக் கொண்டுவந்து போட்டேன். என் இருக்கையில் அமர்ந்துகொண்டு பிணைவியை அழைத்தேன். அவர் அடுத்த அறையில் இருந்தார்.

“ஒரு நிமிஷம் இங்க வாயேன்.”

“வேலையா இருக்கேன். என்னான்னு சொல்லுங்க.”

“கத்த முடியாது. உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.”

புடவையில் கையைத் துடைத்துக்கொண்டு வந்தார்.

“உக்காரு.” உட்கார்ந்தார்.

“சொல்லுங்க.”

“எனக்கு முன்னாடியே கல்யாணம் ஆயிருச்சு.”

பல ஆண்டுகளுக்குப் பின்பு வாயடைத்துப்போனார் நெருங்கிய உறவினர்.

“என்ன உளர்றீங்க?”

“உண்மையத்தான் சொல்றேன். எனக்கு முன்னாடியே கல்யாணம் ஆயிருச்சு.”

“எப்ப? யாரோட? ஏன் முன்னாடியே சொல்லல?”

என் நாற்காலியின் கைதாங்கிகள் இரண்டும் அவரது பிடியில் இறுகச் சிக்கியிருந்தன.

“அதான் இப்ப சொல்றனே.”

“எப்ப, யாரோட-ன்னு கேட்டேன்.”

“தொண்ணூறுகளோட இறுதி-ல உன்னோடதான்.”

பொங்கிய பால் அடுப்பணைக்கப்பெற்றது போல் பிணைவி அடங்கினார்.

“சீ! ஆயிரம் வேல இருக்கப்ப சும்மா கூப்ட்டு லொள்ளு பண்றது!” என ஆவேசமாக வெளியேறினார்.

இப்படித்தான் பெரும்பாலான பெண்கள் விஷயம் தெரியாமல் கோபப்படுகிறார்கள். நான் வேறொரு பெண்ணுக்காக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தேன்.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar