Posts Tagged ‘குழந்தை’

பொம்மையன்

in கவிதை

பொய் சொல்லக் கற்றுவிட்டான்
சூதுவாது இப்போது தெரிகிறது
ஸ்பைடர்மேன் வந்த கனவைச்
சொல்லும்போது
என் பெற்ற ஆர்வத்தைக் கவனித்துக்
கனவில் வந்திருக்க முடியாத
உபகதைகள், கதாபாத்திரங்கள்
சேர்த்துக் கதையை வளர்ப்பான்
என் நெஞ்சுயரம் வளர்ந்த பிறகும்
ஊட்டிவிடச் சொல்லி அடம்பிடிப்பான்
எண்ணற்ற புதிய சொற்களைப்
பொருளறிந்து பயன்படுத்துவான்
ஆனால் மழலை முழுமையாக விடவில்லை
தலைகீழ் இந்திக்காரன் போல்
‘ட’வை ‘ர’ என உச்சரிப்பான்
சிறுவர்களுக்கான அம்பேத்கர் புத்தகம்
படிக்கையில் கேள்விகள் கேட்பான்
(விக்கிபீடியாவில் பார் என்பேன்)
பொம்மைகளுடன் பேசி விளையாடுவான்
அவனே பொம்மை போல் இருக்கிறான்
அவனுடைய அளவிலாத
சூட்டிகையைப் பார்க்கும்போது
இதயம் வெடித்துவிடும் போல் இருக்கிறது
கண்கள்கூடக் கொஞ்சம் ஈரமாகின்றன
ரொம்பக் கொஞ்சினால் செலவு வைப்பான்
என் வயதில் இவன்
தன் குழந்தைக்கு அம்பேத்கர் புத்தகம்
வாங்கித் தர மாட்டான்
யானை விலைக்கு லெகோ பிளாக்ஸ்
வாங்கிக் கொடுப்பான்
வேறொரு வர்க்கத்தில் ஒருவனாகிவிடுவான்
அப்பாவும் அம்பேத்கரும்
எச்சரிக்கைகளும் அறிவுரைகளும்
மறந்துவிடும்
இந்த அபூர்வக் குழந்தையை
இழக்க நான் தயாரில்லை
கரும்பு பிழியும் எந்திரத்தில் போல்
அவன் கடைவாய்ப் பற்களிடையே
குச்சி சிப்ஸைக் கொஞ்சம் கொஞ்சமாக
நுழைத்துத் தன்னை மறந்து தின்பதை
வேடிக்கை பார்க்கும்போதே
உயிர் பிரிந்துவிட வேண்டும்
(இன்சூரன்ஸ் இருக்கிறது).

ஐஸ்கிரீம்

in கவிதை

ஐஸ்கிரீம் வாங்கப்
போன குழந்தை
இரண்டு ஐஸ்கிரீம்களோடு
திரும்பி வந்தான்.
ஒன்று அவன்,
இன்னொன்று ஐஸ்கிரீம்.

குற்றக் குழந்தைகள்

in கட்டுரை

Father heard his children scream,
So he threw them in the stream,
Saying, as he drowned the third,
“Children should be seen, not heard!”

– Harry Graham (Ruthless Rhymes for Heartless Homes. New York: R. H. Russell 1901)

குழந்தைகளைப் பத்து வயது வரை தூளியில் கிடத்தலாம், தப்பே இல்லை. குறிப்பாக அவை வீட்டில் விழித்திருக்கும்போது தூளியில் இருப்பதே சிறந்தது. அப்போதுதான் சனியன்கள் குறுக்கும் நெடுக்கும் ஓடி வாழ்க்கையை நரகமாக்காமல் இருக்கும். தூளி இல்லையா? அத்தனை உருப்படிகளையும் ஒரு காலி அறையில் தள்ளிவிட்டு உள்ளே இரண்டு எறிகுண்டுகளை வீசிவிட்டு ஓடிவிட வேண்டும்.

ஒரு பழைய வீட்டின் அடித்தளத்தை ஆட்டங்காணவைக்க ஒரு ஜோடி சத்தமான குழந்தைகள் போதும் என்கிறார் பர்த்ருஹரி. போர்க் காட்சிகளை நயமாக விவரிக்கும் இலக்கியமான கலிங்கத்துப் பரணி, அன்றைய தினத்தின் “செரு” நிறைவடைந்த பின் போர்க்களமானது குழந்தைகள் விளையாடிச் சென்ற இடம் போல் அலங்கோலமுற்றுக் காட்சியளித்ததாகப் பாடுகிறது. படுகாயமடைந்தும் சாகும் தறுவாயிலும் சொந்த மற்றும் பிறத்தியார் ரத்தத்திற்கிடையிலும் கிடந்த வீரர்கள் வலியைப் “பொறாது” எழுப்பிய ஓலங்கள் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள் பகிர்வுச் சண்டைக் கூப்பாடுகளை ஒத்திருந்ததாகவும் கூறுகிறது கலிங்கத்துப் பரணி. இதனால் சிலர் கலிங்கத்துப் பரணி போர்க் களத்தின் கோரங்களை மிகைப்படுத்துவதாக விமர்சிப்பதுண்டு. ஆனால் குழந்தைகளின் இறைச்சலால் மூளையின் வேதியியல் நிரந்தரமாக மாறிப்போன ஆண்களைக் கேட்டுப் பாருங்கள். என் நண்பர் ஒருவர்கூட அவர் வீட்டுக்குக் குழந்தைகள் வருவதை “Saw VIII” என்பார்.

பிறக்கும்போது யாரும் கிரிமினலாகப் பிறப்பதில்லை என்று வேதம் ஓதுபவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். வீணர்களே, குழந்தைகள் கிரிமினல்களாகப் பிறப்பதில் என்ன பிரயோஜனம்? நான்கு வயதுக்குப் பிறகு அவர்கள் என்ன சுதந்திரப் போராட்டத் தியாகிகளா? காட்டுமிராண்டிகள்! அந்தக் காலத்தில் எங்கள் வீட்டில் வாரப் பத்திரிகைகளுக்குக்கூட இப்படி அடித்துக்கொள்ள மாட்டோம். தப்பு செய்யாதவர்களுக்கும் சேர்த்து முதுகில் விழும். நாங்கள் இந்தக் குழந்தைகளைப் போல் அடிப்பாரின்றி அலைய மாட்டோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள், நாட்டியப் பேரொளி பி.எஸ். வீரப்பா போலவே சிரிக்கும் குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன்.

எனக்கென்ன ஆச்சரியம் என்றால், எங்கள் காலத்தைப் போலின்றி குழந்தைகள் பள்ளிகளுக்கும் ஆயிரத்தெட்டு கிளாஸ்களுக்கும் அடிமையாக இருக்கின்றன. நமக்குக் கிடைத்தாற்போன்ற குழந்தைப் பருவம் அருகிவிட்டது. இந்த லட்சணத்திலேயே இவைகள் இந்த ஆட்டம் போடுகிறதென்றால் இல்லங்களில் ‘ஸ்மோக் டிடெக்டர்’ போல் ‘டெசிபல் டிடெக்டர்’ வைக்க வேண்டியதுதான். சத்தம் இத்தனை டெசிபலைத் தாண்டினால் அதிலிருந்து மயக்க வாயு கசிய வேண்டும்.

குழந்தைகளின் விளையாட்டுகள், தகராறுகள், சாப்பிடுவதற்கு, தூங்குவதற்கு ஏற்படுத்தும் ஓலங்கள் எந்த அளவுக்கு ஆண் ரத்த அழுத்தத்தை எகிறச் செய்கின்றன என்பது பெண்களுக்குப் புரியாது. பெண்கள் சப்தகோஷ மங்கைகள். சத்தத்தை உற்பவித்து சத்தத்தோடு இருந்தால்தான் அவர்களுக்கு வாழ்ந்த மாதிரி, வாழ்ந்து காட்டிய மாதிரி இருக்கும். எத்தனை பேரோசைக்கும் இடையே அசராமல் தொலைக்காட்சித் தொடர் பார்க்கும் அசாத்தியத் திறன் அவர்களுக்கு இருக்கும் வரை குழந்தைகளின் கத்தும் கடலோசை அவர்களை பாதிக்காது. “அங்க போய் விளையாடுங்க” என்று அரைநொடி மட்டும் முகத்தைச் சுளித்துக் கத்திவிட்டு மறுகணமே மீண்டும் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு தொலைக்காட்சியிடம் வாயைப் பிளப்பது அவர்கள் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது. சமூகத்தில் பெண்கள் தாழ்ந்த நிலையில் இருப்பதற்கு இந்த சுரணைகெட்டத்தனமும் ஒரு காரணம் எனலாம்.

இதில் பெண்கள் குறுக்கிட்டுக் காப்பாற்றுவார்கள் என்று நம்பிப் பயனில்லை. ஆகவே குழந்தைகளே, என்னதான் என்னுடைய வீடு இரண்டாம் மாடியில் இருந்தாலும் உங்கள் விளையாட்டைத் தொடங்குவதற்கு முன்பு நடுக்கூடத்தில் ஒரு குழி தோண்டி என்னைப் புதைத்துவிடுங்கள்.

குழந்தையும் கதைசொல்லியும்

in கவிதை

குட்டிப் பையனைக் குளிப்பாட்ட
அலிபாபா கதை சொல்லிவந்தேன்
தங்கத்தை எடைபோடும் வரை
அழகாய்க் கேட்டவன்
“அப்பா, கதை எப்ப முடியும்?” என்றான்
கேளாத பாவனையில்
கதையை நான் தொடர
“மூடிடு சீசேம்!” என்றான்
கவிதையை முடித்து.

 

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar