Posts Tagged ‘நான்லீனியர்’

பெண்கவர் லபக்குதாஸ்

in கட்டுரை

லபக்குதாஸ் ஒரு கலைஞர். கலையில் அல்ல, மற்றதில். சக எழுத்தாளர்களில் பெண்களையும் வாசகர்களில் பெண்களையும் கவரும் உத்திகள் பல அவர் வசம் இருந்தன. எனக்கு அவ்வளவு சாமர்த்தியம் இல்லை. அதனால்தான் அவரைவிட என்னிடம் பெண்கள் குறைவு.

லபக்குதாசின் நூதனத்தன்மையால் எனக்கு வியப்பேற்றிய உத்தி ஒன்று உண்டு. ஏதாவது ஆங்கிலப் புத்தகங்களை எடுத்துக் கண்ட இடத்திலிருந்து ஒரு பாரா, இரண்டு பாரா பார்த்து எழுதிவைத்துக்கொள்வார். பிறகு அதை மனப்பாடம் செய்துகொள்வார். பெண்களுடன் பேசும்போது உரையாடலை மெதுமெதுவாகத் தமது மனப்பாடப் பகுதியை நோக்கி நகர்த்துவார். அவருடைய ஸ்டாப்பிங் வந்ததும் இறங்கி விளையாடுவார் ஆங்கிலத்தில். கேட்கும் பெண்கள் உன்மத்தமா என்மத்தமா என்று ஆகிவிடுவார்கள். அது வரை பேசிக்கொண்டிருந்த பெண்கள் அமைதியாவார்கள்.  இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். ஃபோனிலும் செய்வார்.

உதாரணமாக, ஒருமுறை லபக்குதாசின் வீட்டுக்குப் போயிருந்தபோது ஓர் அம்மணியும் அம்மணரும் வந்திருந்தார்கள். அம்மணிக்கு விவாகரத்து வயது இருக்கும். லபக்குதாசின் அபிமான வயதுக் குழு. இடையிடையே அந்த ஆளைப் பார்த்து, ‘வந்ததற்கு இந்தா ஒரு புன்சிரிப்பு, எடுத்துக்கொண்டு ஓடிப்போ’ என்கிறாற்போல் புன்னகைத்த லபக்குதாஸ் அந்தப் பெண்ணைப் பார்த்தே பேசிக்கொண்டிருந்தார். உடன் வந்தவர் என்னைப் பார்த்தார். நான் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.

இளம் கவிஞர்களில் யாரெல்லாம் தேறுவார்கள் என்பதில் தொடங்கி இளைஞர்கள் தீவிரவாதத்தை நாடுதல், நவீன இலக்கியம் நவீனத்தைப் பேசத் தவறிய சோகம், கலைகள் மதிப்பிழத்தல் என்று நகர்ந்து கிழக்காசியக் கலை வடிவங்களுக்கு வந்தது பேச்சு. இது லபக்குதாசின் காய்நகர்த்தல்.

நவீனத்துவத்தின் வேர்கள் சீனாவில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டபோது விழுது விட்டன என்றார் லபக்குதாஸ். பின்பு தம் மனதில் இருந்ததை அவிழ்த்து விட்டார்.

Neolithic cultures produced many artifacts such as painted pottery, bone tools and ornaments, and jade carvings of a sophisticated design. Excavations at B’ei-li-kang near Luo-yang date materials found at that site to 6000–5000 BC. An excavation in the early 1970s of the royal tomb of Shih-huang Ti revealed an array of funerary terra-cotta images…

மொத்தம் ஐந்து நிமிடம் ஒப்பித்தார். பிறகு அலேக்காகத் தமிழுக்கு மாறினார். லபக்குதாஸ் லேசுப்பட்ட ஆளல்ல. கபாலென்று ஆங்கிலப் பகுதிக்கு மாறினால் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று அவருக்குத் தெரியும். அதனால் தருணம் வரும் வரை நடுநடுவே ஓரிரு வாக்கியம் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருப்பார். “யூ டோன்ட் ஸே ஸோ!”, “இட்ஸ் ஸல்ட்ரி,” “லண்டன் பிரிட்ஜ் இஸ் ஃபாலிங் டவுன்” – இப்படி. எனவே அவர் நீளமாகப் பேசும்போது ட்ரான்சிசன் இயல்பாக இருக்கும். சிலர் அவர் முடித்ததும் ஆங்கிலத்தில் மறுமொழி சொல்வார்கள் அல்லது கேள்வி கேட்பார்கள். அவர் எல்லாவற்றுக்கும் ஒரே பதில் வைத்திருப்பார்: “I have formed the habit of preferring red wine.” கேட்டவர் திகைத்தால் மர்மப் புன்னகை உதிர்ப்பார். சரி, ஏதோ குறிப்பால் சொல்ல வருகிறார் பெரிய மனுசர், நமக்கு விவரம் பற்றாது என்று எதிராளினி அடங்குவார்.

நாலு புத்தகம் படித்துவிட்ட லபக்குதாஸ் இப்போது சொந்தமாக எழுதிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். சில வரிகள் எழுதி எனக்கு அனுப்பிக் கருத்து கேட்டார். பெண் இனமே ஆபத்தில் இருப்பதாகத் தோன்றியது –

The question of the hypothecated self, either transdermal or corrugated, intravaginal or alterized, is by default raised in obscure quovadisms purportedly to rhetoricize away seemingly pertinent counter-constructs designed to obfuscate “ex-contextus” the veracity of the aforesaid in an infelicitous chiaroscuro of projections which only work to establish the original locutor’s personal friendship with Dr. Puneet Mishra…

இல்லை

in சிறுகதை, புனைவு

இல்லை என்றால் விட்டுவிடுங்கள். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனிதனுக்கு ஒரு சொல்: இல்லை. இருந்தால் நான் உங்களுக்குக் கொடுக்கலாம், கொடுக்காமலே கூட இருக்கலாம்; பிரச்சினை அது இல்லை. இல்லை என்பதுதான் பிரச்சினை.

நீங்கள் கடந்த காலத்தில் எனக்குச் செய்த நன்மைகளுக்கு மிக்க நன்றி. இனி செய்யப் போகிறவற்றுக்கும் நன்றி. ஆனால் உங்களுக்கு என் பதில் “இல்லை”தான். நீங்கள் எனக்கு நிறைய நன்மைகள் செய்தவராக இருப்பின் உங்களுக்கு ஒரு பதில்: என்னடா இவன் நன்றி கெட்டவனாக இருக்கிறானே என்று நினைப்பதற்கு முன் நீங்கள் எனக்கு எத்தனை தீமைகள் செய்திருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். நினைவில் எதுவும் அகப்படவில்லை என்றால் என்னிடம் கேளுங்கள்.

உலகில் யாரும் யாருக்கும் பெரிதாக நன்மைகள் அதிகம் செய்துவிட முடியாது. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இவன் ஒரு தடவை இல்லை என்று சொல்லிவிட்டதால் இவன் நண்பன் இல்லை என்று முடிவு கட்டிவிடாதீர்கள். இல்லை என்று சொல்லுமுன்பே நான் உங்களுக்கு நண்பன் இல்லைதான்.

யோசித்துப் பாருங்கள் நீங்கள் யார், நான் யார் என்று. நம்மைப் போல் இரண்டு பேர் நண்பர்களாக இருந்தால் உலகம் தாங்குமா? மூன்றாவது உலக நாடுகள் இது வரை பட்டது போதாதா? நம்மால் வேறு இன்னும் படவேண்டுமா? உங்களோடு என்னைப் பார்த்தால் எனக்கு அசிங்கம். என்னோடு உங்களைப் பார்த்தால் உங்களுக்கு அசிங்கம்.

இல்லை என்று சொல்வதால் நான் உங்களை வெறுக்கிறேன் என்று அர்த்தமில்லை. மனதிற்குள் சபித்துக்கொண்டு கொடுப்பதை விட இல்லை என்று சொல்வதையே நீங்கள் விரும்புவீர்கள், குடி போதையிலாவது. குடித்திருக்கும்போது நீங்கள் எல்லாரும் மனிதருள் மாணிக்கங்கள் என்று எனக்குத் தெரியும். நான் அவ்வளவு மோசம் இல்லை. நான் அது வரை போவதில்லை. என் எல்லை எனக்குத் தெரியும். பேலன்ஸ் தவறி உத்தமன் ஆகிவிடும் ரகம் இல்லை நான்.

உங்கள் தேவையைத் தற்காலிகமாக மறந்துவிட்டு இல்லை என்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். தேவை உங்களுக்குத்தானே தவிர எனக்கல்ல என்பதையும் உங்கள் பிரச்னைகள் என்னைத் துளி கூட பாதிப்பதில்லை என்பதையும் தயவுசெய்து மறக்காதீர்கள். இல்லை என்ற வார்த்தை ஆமாம் என்பதை விடத் தெளிவானது. ஆமாம் என்பதற்கு சமயத்தில் இல்லை என்றும் அர்த்தமாகும்.

இல்லாதவன், இருப்பின் இன்மை என்கிற ஓல் பஜனை எல்லாம் என்னிடம் வேண்டாம். நான் என்ன சொன்னேன்? ‘இல்லை’ என்றுதானே சொன்னேன்? அதற்குப் பிறகு எப்படி இல்லாதவன் பற்றியும் இருப்பின் இன்மை பற்றியும் பேச்சு வர முடியும்? இல்லை என்று சொன்னால் புரிந்துகொள்ள மண்டையில் மசாலா இல்லாதவர்கள் கேட்கவே தகுதி இல்லாதவர்கள். அவர்களுக்கு இல்லை என்ற பதிலே அதிகம். அவர்களிடம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதற்கு பதிலாக ஒரு அரூப ஓவியத்தை வரைந்து காட்டலாம். அதற்கு ‘சுயத்தின் எச்சங்கள்’ என்பது போன்றொரு தலைப்பு வைக்கலாம். கேட்டவர்கள் மனம் நிறைந்து போகட்டும்.

ப்ளீஸ்! நானும் உங்களைப் போன்று டீசன்ட்டானவன்தான். நானும்தான் கோல்ட்ஃப்ளேக் கிங்ஸ் பிடிக்கிறேன். நானும்தான் உங்களைப் போல ‘லாஜிக் இடிக்கிறது’ என்பதற்கு பதில் ‘தர்க்க இடிபாடுகளிடையே சிக்கியுள்ளது’ என்று சொல்ல விரும்புகிறேன். நானும் கஷ்டப்பட்டும் முன்னுக்கு வர முடியாதவன்தான். ஆனால் இதே போலொரு சூழ்நிலையில் நீங்கள் என்னிடம் ‘இல்லை’ என்று சொன்னால் புரிந்துகொள்வேன். என்னவோ நீங்கள்தான் என்னிடம் கையேந்தி நிற்பது போல் நடந்துகொள்ள மாட்டேன்.

கடைசியாக ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது முதலில் நான் உங்களுக்கு சொன்னதுதான்: இல்லை. நான் சொல்வது புரிகிறதா? புரியவில்லை என்றால் அது என் பிரச்னை இல்லை. இல்லை என்று நிறைய தடவை சொல்லிவிட்டேன். ஒரு விஷயத்தைப் பல தடவை சொன்னால் புரிந்துவிடாது என்பது எனக்கும் தெரியும். புரிந்துகொள்ள மிக எளிமையான ஒரு விஷயத்தைப் பல முறை சொன்னால் இன்னும் தெளிவாகவெல்லாம் புரிந்துவிடாது என்பதும் எனக்குத் தெரியும். தெளிவுக்கும் வரம்புகள் உண்டு. நான் திரும்பத் திரும்ப சொல்லக் காரணம், நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு சொல். உங்களுக்கு ஒரு சொல் போதவில்லை. அதனால்தான் இவ்வளவும்.

வீட்டில் எல்லோரையும் விசாரித்ததாக சொல்லுங்கள். நீங்கள் நான் பார்த்துப் பல வருடங்களான நண்பராக இருந்து உங்கள் குடும்பத்தினரில் யாராவது நடுவில் இறந்துவிட்டிருந்தால் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நான் வந்திருப்பேனே! நண்பர்கள் எதற்கு இருக்கிறார்கள், சொல்லுங்கள். இடையில் யாருக்காவது திருமணம் ஆகிவிட்டதா? என் வாழ்த்துக்கள். அதே நாளில் என் நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணம், அதனால்தான் வர முடியவில்லை.

பார்த்தீர்களா, என்னைத் தவிர உங்களுக்கு எத்தனை பேர் இருக்கிறார்கள்! அவர்களைக் கேட்காமல் என்னிடம் மட்டும் கேட்பது ஏன்? என்பால் உள்ள அன்பினாலா? என்பால் உள்ள அன்பைக் காட்ட உங்களுக்கு இதுதானா சமயம்? அதான் இல்லைன்னு சொல்லிட்டேனே, அப்புறம் ஏன் நிக்கிறே? போ, போ!

அடுத்த வாரத் தொடர்ச்சி

in சிறுகதை, புனைவு

கதையின் முதல் வரி என்பதால் அன்று நாராயணனின் தேனீர் அங்காடி வழக்கத்தை விட கூடுதலாகவே களைகட்டியிருந்தது. நாராயணன் தனது தொண்ணூற்றி மூன்றாவது வாடிக்கையாளரிடம் இரைந்தார்: “முதலில் காசை எடுத்து வை. அப்புறம் டீ சாப்பிடலாம்!” வாடிக்கையாளர், “நான் இங்கேதானே பக்கத்து கட்டிடத்தில் இருக்கிறேன், காசைக் கொடுக்காமல் எங்கே போய்விடப் போகிறேன்” என்றார். “இதோ பார், இந்த விளையாட்டெல்லாம் என்னிடம் வேண்டாம். காசு கொடுத்தால்தான் டீ” என்றார் நாராயணன் கறாராக.

சென்ற மாதம் நான் எழுதிய கதையைப் பிரசுரித்தமைக்கு நன்றி. என் கதை தங்கள் பத்திரிகையில் வந்து சரியாக 24 நாட்கள் ஆகின்றன. ஆனால் எனது சன்மானத்தைத் தாங்கள் இன்னும் எனக்கு அனுப்பவில்லை. திரு. பூபதி தங்கள் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தபோது கதை வெளிவந்த அடுத்த நாள் காசோலை எழுத்தாளர்களைச் சென்றடையும் என்பதைத் தாங்கள் அறிந்திருக்கலாம். மன்னிக்கவும், இது பணம் தொடர்பான விவகாரம் அல்ல. எழுத்தாளர்களுக்குத் தாங்கள் எவ்வளவு மதிப்பு தருகிறீர்கள் என்பது அவர்களுக்கு எவ்வளவு விரைவில் பணம் அனுப்பி வைக்கிறீர்கள் என்பதன் வாயிலாக வெளிப்படுகிறது.

வாடிக்கையாளர் சிறிது நேரம் தயங்கி நின்றார். நாராயணன் அவர் அங்கு நின்றதைப் பொருட்படுத்தாமல் பிறிதொரு வாடிக்கையாளருக்கு முறுக்கு எடுத்துக் கொடுத்தார். முறுக்குதாரர் தான் பெற்றதில் சிறிது கடித்து அதிலொரு பகுதியை உள்வாங்கிக்கொண்டார். முதல் பகுதியானது வாயில் மெல்லப்பட்டுக்கொண்டிருக்கையில் அவர் தயங்கி நின்றவரை ஏறவிறங்கப் பார்த்தார். முதல் வாடிக்கையாளர் அவரது பார்வையை சரியான சமயத்தில் தவிர்த்தார்.

அது கூடப் பரவாயில்லை. கதை வெளிவந்த பிறகு வழக்கமாக அனுப்பப்படும் அன்பிதழ்களையும் எனக்கு அனுப்பாததை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தாங்கள் அவைகளை அனுப்புவீர்கள் என்கிற நம்பிக்கையில் நான் பிரதிகளை வாங்கவில்லை. ஒரு வாரம் கழித்துக் கடைகளில் கேட்டால் உங்கள் பத்திரிகை விற்றுத் தீர்ந்துவிட்டது என்ற பதிலே கிடைத்தது. சில சமயங்களில் உங்கள் பத்திரிகை விரைவாக விற்பனை ஆகிவிடுகிறது போலும்.

தற்காலிகமாக வேறு வாடிக்கையாளர்கள் யாரும் வரவில்லை என்பதனால் நாராயணன் மீண்டும் முதல் வாடிக்கையாளரிடம் தமது பார்வையைத் திருப்பினார். “நான்தான் இல்லை என்று சொல்லிவிட்டேன் அல்லவா, பிறகு ஏன் என் முகத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாய்?” என்றார் அவர். “இன்று கொடுக்கவில்லை என்றால் நாளைக்குக் கொடுக்கப் போகிறேன். நான் எங்கே இரண்டரை ரூபாய்க்கு டீ சாப்பிட்டுவிட்டு துபாய்க்கா ஓடிவிடப் போகிறேன்?” என்று முதல் வாடிக்கையாளர் மடக்கினார். நாராயணன் உடனே எதிர்மடக்கலில் இறங்கி, “உன்னை யார் துபாய்க்குள் அனுமதிக்கப் போகின்றனர்?” என்று கேட்டார்.

இது தொடர்பாக நான் நேற்று உங்கள் அலுவலகத்திற்கு வந்திருந்தேன். அரை மணிநேரம் உங்களுக்காகக் காத்திருந்த பிற்பாடு உதவி ஆசிரியர் ஒருவர் வந்து என்னிடம் மரியாதை இல்லாமல் பேசினார். எனது காசோலை தயாராகிவிட்டது என்றும் பொது மேலாளர் கையொப்பமிட்டுவிட்டால் அது அனுப்பப்பட்டுவிடும் என்றும் அவர் என்னிடம் தெரிவித்தார். ஒரு காசோலையில் ஒரு கையொப்பம் போட எவ்வளவு நேரம் ஆகிவிடப் போகிறது?

இதற்கிடையில் மூன்றாவதாக ஒருவர் அவ்விடம் வந்தார். “என்ன நாராயணா, அவருக்கு ஒரு தேனீரைக் கொடுத்துத் தொலையேன்” என்றார் அவர். நாராயணன் உடனே கொதித்து, “காசை நீ தருகிறாயா?” என்றார். “ஏனப்பா, தினமும் பார்க்கிற முகம்தானே? கொடுத்தால் என்ன?” என்றார் மூன்றாமவர் சமாளித்து. நாராயணன், “தினமும் பார்க்கிற முகம் என்றால் அப்புறம் தினமும் காசு கொடுத்துவிட்டு சாப்பிடுகிறதுதானே?” என்றாரே பார்க்கலாம்.

என்றைக்கு ஒரு எழுத்தாளன் தனக்குப் பணமோ பிரதிகளோ அனுப்பத் தவறப்பட்டுவிட்டது என்று ஒரு பத்திரிகை அலுவலகத்தில் காலடி எடுத்து வைக்கிறானோ அப்போது தொடங்குகிறது அந்தப் பத்திரிகையின் கேடுகாலம். நான் பெயர் குறிப்பிட விரும்பாத இன்னொரு பத்திரிகை, எழுத்தாளர்களுக்கு நல்ல சன்மானத்தை உடனடியாக அனுப்புவதோடு ஒரு அன்பிதழுடன் ஒரு நன்றிக் கடிதத்தையும் அனுப்பி வைக்கிறது.

“சரி, ஒரு தேனீர், ஒரு பில்டர் கோல்டு ஒன்று கொடு” என்றார் மூன்றாமவர். நாராயணன் கோல்டு பில்டரை எடுத்துக் கொடுத்தபடி, “இந்த ஆள் தினமும் இலவசமாகத் தேனீர் அருந்தப் பார்க்கிறான். என்றோ ஒரு நாள் கடன் என்றால் பரவாயில்லை. தினமும் என்றால் கடுப்பாக இருக்காது மனிதனுக்கு?” என்றார்.

என்னைப் போன்ற மாத வருமானக்காரர்கள் வராத தொகைக்காகப் பஸ் ஏறி ஆறு ரூபாய் செலவழித்துப் பத்திரிகை அலுவலகத்திற்குப் படியேறும் அளவுக்கு இறங்கிவிட்டது இலக்கியத்தின் நிலமை. அது மட்டுமின்றி, என் கதையினில் சில அச்சுப் பிழைகளைக் கண்டேன், மனம் வருந்தினேன். எப்படி இருந்த பத்திரிகை!

இவ்வளவு நேரமும் நாராயணனின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த முதல் வாடிக்கையாளர், எதிர்பாராத விதமாகத் தனது சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாய்த் தாளொன்றை எடுத்துக் கடலை உருண்டை ஜாடியின் மூடி மீது வைத்து, “இந்தா. ஒரு கோல்டு பில்டர், ஒரு டீ, ஒரு பிஸ்கட்” என்று சொன்னவாறு பட்டர் பிஸ்கட் ஜாடியிலிருந்து ஒரு பிஸ்கட்டை எடுத்தார்.

எழுத்துக்களும் படங்களும் தம் இடத்திலிருந்து நகர்ந்தது போல் இரண்டாகத் தெரிகின்றன. எழுத்துக்களின் மை கையில் ஒட்டிக்கொள்கிறது. உங்கள் நகைச்சுவைத் துணுக்குகளைப் படித்தால் விரக்தி ஏற்படுகிறது. பேட்டிகள், கேள்வி-பதில் பகுதி, வாசகர் கடிதங்கள் ஆகியவை உங்கள் நிருபர்கள் எழுதியது போலிருக்கின்றன. கதைகளுக்கான சித்திரங்களில் மனிதர்களின் கைகளில் சிலவற்றில் நான்கு விரல்களும் வேறு பலவற்றில் 7 விரல்களும் இருக்கின்றன. கடைசிப் பக்கத்திற்குப் பிறகு எத்தனை பக்கங்களையோ காணவில்லை.

பூபதியின்பால் உள்ள மரியாதைக்காகவும் என் வளர்ச்சியில் அவர் ஆற்றிய பங்கிற்காகவுமே நான் உங்களுக்குச் சிறுகதை எழுதி அனுப்பினேன். எனக்கும் ஆயிரம் பணிகள் இருக்கின்றன. மகளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும். மகனுக்கு உயர்கல்வி அளிக்க வேண்டும். மனைவிக்கு நான் உயிர்நீத்த பின்னர் மறுமணம் செய்து வைக்க வேண்டும். இலக்கியம் படைத்துப் பல விருதுகள் பெற வேண்டும். தாம்பரம் போக ஜெமினியில் பஸ் ஏற வேண்டும். இங்கிருந்து நேரடி பஸ் இல்லை.

நாராயணன் அவர்தம் ஐந்து ரூபாயைக் கையிலெடுத்துக் காட்டி “என்ன? ஒரு சிகரெட்டு, ஒரு டீ, ஒரு பிஸ்கட் – மொத்தம் ஐந்து ஐம்பது. இன்னொரு ஐம்பது காசு எங்கே?” என்று எரிச்சலுடன் வினவினார். “நாளை தருகிறேன்” என்று சிகரெட்டுக்குக் கை நீட்டினார் முதலாமவர். “இதே வேலையாகப் போய்விட்டது உனக்கு” என்றபடி அவருக்கு சிகரெட்டை எடுத்துக் கொடுத்தார் நாராயணன். அன்புள்ள ஆசிரியருக்கு, இத்துடன் நாராயணன் எழுதிய தேனீர் ஒன்றை இணைத்திருக்கிறேன். இதைத் தங்கள் பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டுகிறேன்.

டைரிக் குறிப்பாக ஒரு நூல் மதிப்புரை

in கட்டுரை

– பேயோன்

கற்கால தமிழ் அந்தாதி

தமிழில் வரிவடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு சில நூற்றாண்டுகளாவது ஆகியும் தமிழில் இருமொழிப் படைப்புகள் ஏறத்தாழ இல்லை என்றே கூறிவிடலாம். ஒரு வகையில் 19ஆம் நூற்றாண்டு கிரந்தச் சுவடிகளை இருமொழி படைப்புகளாக கருதலாம். ஆனால் அவை நேரடியாக தமிழில் எழுதப்படாததான காரணத்தை கூறி இக்கருதுகோளை ஏற்க மறுப்பவர்களும் உண்டு. இந்த வெற்றிடத்தை நிரப்ப வந்திருக்கிறது க்ரியாவின் சமகாலத் தமிழ் அகராதி (க்ரியாவின் மொழியில் “தற்காலத் தமிழ் அகராதி”).

பெருமளவு மேலை இலக்கியக் கூறான அகராதி வகை இலக்கியம் அந்தாதி வகையைவிட அமைப்புரீதியான சிக்கலை கொண்டது. க்ரியாவின் இந்நூல் நான்லீனியராக இருக்கிறது. இவ்வகை வடிவ ஒழுங்கீனம் படைப்பாளிக்கு சுதந்திரத்தை அளிக்கும் அதே சமயத்தில் அடிப்படையான சில மரபார்ந்த உத்திகளை அவன் கையாள விடாமல் அந்த சுதந்திரமே அவனை முடக்கும் அபாயமும் ஏற்படுவதுண்டு. இந்தப் பிரச்சனையிலிருந்து தற்காலத் தமிழ் அகராதியும் தப்பிக்கவில்லை என்று எனக்கு தோன்றுகிறது.

அமைப்பிலா அமைப்பை உத்தியாக பயன்படுத்தி எழுதுவதன் பிரதான நோக்கங்களில் ஒன்று கோர்வையான வர்ணனையை தவிர்த்து ஊகிப்பு தன்மையை இல்லாமல் ஆக்குவது. ஆனால் தற்காலத் தமிழ் அகராதியில் பல சமயங்களில் அடுத்து வருவதை ஊகிக்க முடிகிறது. அல்பாயுசுக்கு பிறகு அல்போன்ஸோ (பக். 65) வருவது ஒருபுறமிருக்க, சீக்காய்1-ஐ (பக். 591) அடுத்து சீக்காய்2 வருவதை ஒரு சறுக்கலாகவே பார்க்கிறேன்.

இந்நூலின் பெரும்பகுதி வார்த்தைகளால் அமைந்திருப்பதால் வார்த்தைகள் ஆற்றும் பங்கையும் குறிப்பிட வேண்டும். கடந்த இருமாத காலத்தில் தமிழ் எழுத்து வெளிக்குள் ஸ்கலிதமாகத் துவங்கியுள்ள பின்கலாச்சார கதையாடலின் துவந்த மொழி இந்நூலில் ஒரு ஊர்த்துவ வேகம் கொண்டு பரவலான கிடைநிலைப்பாடு எடுத்துவருவதை காண்கிறேன்.

எடுத்துக்காட்டாக, பொதுப்புத்திக்கு உகந்த பழந்தமிழ் வார்த்தையான “அல்குல்” என்ற வார்த்தை (பக். 65). தமிழ் இலக்கண விதிப்படி “அற்குல்” என எழுதப்பட வேண்டிய இவ்வார்த்தை “அல்குல்” என்றே எழுதப்பட்டிருப்பது – அதுவும் ஒரு அகராதி வகை நூலில் – ஆசிரியரின் நோக்கத்தை சந்தேகிக்க வைக்கிறது. இந்த வார்த்தையின் சுற்றுப்புறத்தில் உள்ள வார்த்தைகள் எவை? “அல்” (ஒரு கூற்றை அல்லது நிலையை மறுத்தல், பக். 64), “அல்பம்” (பக். 65), “அல்லல்” (பக். 65), “அல்லல்படு” (பக். 65). எழுத்துப்பட அமைப்பு (டைப்போகிரபி) உத்தியில் எழுதப்பட்டுள்ள இப்பகுதி சற்றே பிற்போக்கான ஒரு செய்தியை தன்னுள் கொண்டிருப்பதாக எண்ணச் செய்தாலும் அது ஆசிரியரின் கூற்றா கதாபாத்திரத்தின் கூற்றா என்று தெளிவாக தெரியாதிருப்பது ஆசிரியரின் உத்திக்கு அல்லது உள்நோக்கத்திற்குக் கிடைத்த வெற்றி எனலாம்.

இந்நூலில் ஆபாச வார்த்தைகள் அதிர்ச்சி மதிப்புக்காக பயன்படுத்தப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. எ.கா., இலந்தை(ப்பழம்) (பக். 156), ஒளி (பக். 297), ஒன்றுபடு (பக். 300), சிட்டுக்குருவி (பக். 573), லேகியம் (பக். 1188) போன்றவை. அதிர்ச்சி மதிப்பு பின்நவீனத்துவத்தின் கூறுகளிலேயே மிகவும் உபயோகமானது, போணி சார்ந்தது என்கிற போதிலும் இவ்வார்த்தைகள் நூலின் எஞ்சிய பகுதிகளுடன் ஒட்டாமல் மணல் திட்டுகளாக துருத்திக்கொண்டு நிற்கின்றன.

பாலியல் சொல்லாடல் ஒரு முனையில் உள்ளதென்றால் இன்னொரு முனையில் இருப்பது வன்மொழிபு. இதில் க்ரியாவின் சாமர்த்தியம் வன்முறை தெறிக்கும் வார்த்தைகளில் ஒருவித பொருள் தெளிவின்மையை (ambiguity) ஏற்றி அவற்றின் தாக்கத்தை நீர்த்துப் போக செய்வது. எடுத்துக்காட்டாக, “இழுத்துக்கொண்டு போ” (பக். 160) மற்றும் “இழுத்துப் பறி” (அதே பக்.) என்கிற வார்த்தைகள்:- முறையே எதை மற்றும் யாரை? “குல்லாப்போடு” (பக். 467) போன்ற நேரடி போதனைகள் அல்லது அறைகூவல்களும் இல்லாதில்லை. இருப்பினும் முந்தைய 466 பக்கங்களில் இந்த வன்முறையை நாம் பல முறை எதிர்கொண்டுவிடுவதால் 466ம் பக்கத்திற்கு பிந்தைய இத்தகைய வார்த்தைகள் அதிர்ச்சி மதிப்பு கூட்டத் தவறுகின்றன.

கதையின் முதல் வரியில் அறிமுகமாகும் அ-வைச் சுற்றியே அனைத்தும் பின்னப்பட்டுள்ளது. ஒரு தனிப்பேச்சாக (monologue) துவங்கி மெல்ல மெல்ல பரிணமித்து மேலும் பரவலான ஒரு கதைப்பரப்பாக விரியும் இந்த நாவலை bildungsroman வகை புனைவாக பார்க்கிறேன். பிரெஞ்சை சேர்ந்த ஸ்டெந்தாலின் ‘சிவப்பும் கருப்பும்’ (The Red and the Black), அதே இதுவைச் சேர்ந்த குஸ்தாவ் பிளாபெர்ட்டின் ‘மேடம் பவாரி’ (Madame Bovary), ஆங்கிலத்தை சேர்ந்த மார்க் டுவைனின் ‘டாம் சாயர்’ (Tom Sawyer) ஆகியவை பில்டங்ஸ்ரோமன் வகை புனைவுக்கு எடுத்துக்காட்டுகள். முதல் சில பக்கங்களை பெருமளவு ஆக்கிரமிக்கும் அ-வின் ஆக்கிரமிப்பு நம் இடது கையில் பக்கங்கள் சேரச் சேர குறைவடைந்து பிற கதைமாந்தர்களும் உறவுகளும் ஊடாட்டங்களும் இடங்களும் என பெரிதாகி புனைவின் வெளி விசாலிக்கிறது.

க்ரியாவின் படைப்பு பல சமகால பின்நவீன படைப்புகளை நினைவுகூற வைக்கும் அதே வேளையில் அவ்வாறு நினைவுகூறிய பின்னும் தனது தனித்துவ மொழிதலின் பலத்தால் வாசக வெளியின் முற்றத்தில் இருகால் பதித்து குந்துகிறது. இங்கு க்ரியாவின் வட்டார மொழி புலமையை பற்றி சொல்லியே ஆக வேண்டும். தமிழக வட்டார மொழிகள் மட்டுமல்லாது இலங்கை வட்டார மொழியிலும் நம்முடன் பேசுகிறார்கள் கதை மாந்தர்கள். 1328 பக்கங்கள் புரளும் இந்நூலில் இதன் விலையான 495 ரூபாய் அளவிற்கு கதை இருப்பதாக கூறிவிட முடியாது. இருந்தாலும் முடிக்கும்போது ஒரு காத்திரமான படைப்பை படித்த திருப்தி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அடுத்த பதிப்பிற்கு ‘தற்கால’ தமிழ் அகராதியை க்ரியா மேலும் மெருகேற்றி எழுதுவார் என வாழ்த்துக்களுடன் எதிர்பார்க்கிறேன்.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar