சம்பவக் காலை

புலர்காலை வேளை நாலரை மணி இருக்கும். ஏழு மணிக்கே வெயில் சுள்ளென்று அடிப்பதன் சாத்தியத்தைத் தன்னுள் பதுக்கியிருந்தது சூரியன். என் வீட்டுத் தெருவிற்கு அடுத்த பிரதான சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் என் நண்பர் ஒருவர் பேருந்துக்காகக் காத்திருந்தார். அவர் முகத்தில் கவலை நிரந்தரமாக ரேகை போட்டிருந்தது. ஆனால் அன்றைய கவலை ரேகைகளுக்கு ஒரு அவசர காரணம் இருந்தது. அன்று வாடகை தினம். பத்து மணிக்கு வீட்டுக்காரன் வந்து வாடகை கேட்பான். செல்வம் அதற்குள் வந்து பாக்கியைக் கொடுத்துவிடுவானா? இம்மாத சம்பளத்தை முன்பணமாக வாங்கி அவன் கையில் கொடுத்துவிட்டார் என் நண்பர். வாடகை தரத் தாமதமானால் வீட்டுக்காரனின் நடத்தை போகிற போக்கு பற்றி முன்பே செல்வத்தை நண்பர் எச்சரித்திருந்தார். ஒருவேளை வழக்கம் போல் செல்வம் வராமல் கழுத்தறுத்துவிட்டால்? நினைத்ததும் குடல் புரண்டு படுத்தது நண்பருக்கு. சரி, வீட்டுக்காரன் பத்து மணிக்குதானே வருவான், எட்டு மணிக்கே நான் போய் செல்வத்தைப் பார்த்துப் பணத்தை வாங்கிவிடுகிறேன் என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டார். அப்போது அந்தப் பக்கமாக யாரோ வேகவேகமாகத் தன் திசையில் வருவது போல் தெரிந்தது நண்பருக்கு. அந்த உருவமும் நடையின் பாணியும் நண்பரின் மனதில் எதையோ மீட்டியது. அந்த நபர் அருகில் வரத் தொடங்கியதும் பரிச்சயம் உறுதிப்பட்டது. அது நான்தான். வியர்க்க விறுவிறுக்க, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, கீழ் உதடெல்லாம் பிதுங்கி, கைவீசப்பா கைவீசு என்கிற ரீதியில், முன்னாள் தென்றலாய், அரை ஓட்டமாய் நடந்து வந்துகொண்டிருந்தேன். நண்பருக்கு என்னைப் பார்த்து ஒன்றும் புரியவில்லை. ‘எந்தக் கோட்டையைப் பிடிக்க மற்றும்/அல்லது யாரை அடிக்கப் போகிறார்?’ எனப் புதிருற்றார். “எங்க சார் வேகமா?” என்றார் என்னைப் பார்த்து. நான் நிற்காமல், “என்னை ஒருத்தன் திட்டிட்டான்” என்று ஆத்திரமாக பதிலளித்துவிட்டு விறுவிறு என்று போய்க்கொண்டேயிருந்துவிட்டேன். நண்பர் பிளந்த வாய் மீள்சேராமல் நினைத்துக்கொண்டார் – “வாட் எ மேன்!”

விதியின் இசை

மனைவி ஊரில் இல்லை. ஏன், இந்த மாவட்டத்திலேயே இல்லை. மகனும் இல்லைதான். ஆனால் ஒரு பெரிய இழப்பிற்காகச் சிறிய இழப்பை சகித்துக்கொள்வதில் குற்றமில்லை. சகித்துக்கொள்ள வேண்டியிருப்பது ஒவ்வொரு வேளையும் சாப்பாட்டிற்காக வெளியே போக வேண்டியிருப்பதையும். சாப்பாட்டிற்கு அலையவே நேரம் சரியாக இருந்தால் யசுநாரி கவாபாட்டாவைத் தேடி அலைவது எப்போது?

சாப்பாட்டை முடித்துக்கொண்டு வீட்டு வாசலுக்குத் திரும்பி வந்து பழக்க தோஷத்தில் “காலிங் பெல்”லை அழுத்துகிறேன். பிறகு மனைவி இல்லாததை உணர்ந்து தொடையை ஓங்கித் தட்டியபடி உரக்க சிரித்துக்கொண்டு கதவைத் திறக்கிறேன். இந்த சாவியைப் பையில் வைத்துக்கொள்வதில் என்ன பிரச்சனை என்றால், அது இருக்க இடத்திற்குள்ளே அனுமதித்தாலும் உருவம் மிகச் சிறியது. ஒவ்வொரு முறையும் வீட்டு வாசலுக்கு வந்து பாக்கெட்டில் கையை விடும்போது முதல் துழாவலில் சாவி கிடைக்கவில்லை என்றால் பகீரென்கிறது. தொலைந்துவிட்டால் நெஞ்சு பதைக்க வேண்டியதுதான்.

மகனைப் பிரிய வேண்டியிருப்பது அவ்வப்போதின் அவசிய கட்டாயம். மகன் என்பதாலேயே* (*அதுவும் என் மகன் என்பதால்) அவன் மேல் எனக்கு நிறைய பிரியம். தோளுயரம், இடுப்பகலம் வளர்ந்துவிட்டாலும் அவன் குழந்தையாக இருந்தபோது எனக்கு அவன் மீதிருந்த பாசத்தில் பாதியாவது பாக்கியிருக்கிறது. இப்போதும் அவன் எனக்குக் குழந்தைதான். ஏனென்றால் காலம் எல்லோரையும் அல்லவா கூண்டோடு காய்நகர்த்துகிறது.

வீடே அமைதியாக இருக்கிறது. கேட்கிற ஒரே சத்தமும் மாடி வீட்டிலிருந்து வருகிறது. வீட்டில் ஆள் இருந்தால் ஆளின் குரல்தான் கேட்டுக்கொண்டிருக்கும். படிக்கும் பத்திரிகையில் சுவாரசியமான கட்டுரையோ டி.வி. சினிமாவில் சிலிர்ப்பான சண்டைக் காட்சியோ வரும் சமயம் பார்த்து மனைவி ஊர் வம்பு, வீட்டுப் பொருளாதாரம் பேசத் தொடங்கிவிடுவார். ஆச்சரியக்குறிகள், மேற்கோள் குறிகள் தவிர வேறு நிறுத்தக்குறிகள் அறவே இல்லாத பேச்சு அவருடையது. மிகைப்படுத்தப்பட்ட மிமிக்ரியுடன் கூடியது. இதற்கு “விதியின் இசை” என்று பெயர் வைத்திருக்கிறேன். இந்தக் குறிப்பிட்ட சத்தம்தான் இப்போது வீட்டில் இல்லை. காற்றுக்கூட காலி திருமண மண்டபத்தில் குழந்தைகள் போல சுதந்திரமாய் விளையாடுகிறது.

ஏதோ காலாற நடந்து போனோம், நான்கு விஷயம் பார்த்தோம், மனதில் குறித்துக்கொண்டோம், இல்லை, இந்த வரி வேண்டாம், நன்றாயிருக்காது, அதை இப்படி எழுதினால் வாசக மனதுக்குப் பாந்தமாக இருக்கும், இந்த வார்த்தை புரியாது, அதை இப்படி எளிமைப்படுத்துவோம், இந்த சம்பவத்தை இதனோடு முடிச்சுப் போட்டு நினைவூகூர்த்திக் காட்டலாம் என்கிற ரீதியில் நடந்து போகும்போதே அதைப் படைப்பாக வளர்த்தோம் என்றில்லாமல் வழியில் ஏதாவது கடையில் நின்று கையில் பையைச் சுமந்துகொண்டு திரும்பி வர வேண்டியிருக்கிறது. இந்த பாலிதீன் பையை நான் எந்தளவுக்குப் பிடித்துக்கொண்டிருக்கிறேனோ அதேயளவு அதுவும் என்னைப் பிடித்துக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு வலுவாக எழுவதுண்டு. பாலிதீன் பை போன்ற லௌகீகத்தின் ஏஜெண்டுகளை எளிதாக அடையாளம் கண்டுவிடலாம்:- எல்லாமே மனைவி வாயிலாக வருகின்றன. அதனால்தான் ஒரு மனைவி வெளியூர் போகும்போது மனம் லேசாகிறது.

ஒரு மனைவிக்கு ஒரு காபியைக் கொண்டுவந்து கணவனிடத்தில் வைக்க சராசரியாக எத்தனை நேரம் ஆகிறது? சில நொடிகளே. அந்தச் சில நொடிகளில் ஒரு கணவனுக்கு அந்த மனைவியினிடத்தில் ஏற்படும் அன்பு அளக்க முடியாதது, படுதீவிரமானது. கணவனுக்கு மனைவி மீதான இந்த அன்பு நாளொன்றிற்கு சுமார் 30 நொடிகளுக்குக் குறையாதளவு ஏற்படுகிறது. ஒரு நிமிடத்திற்குக் குறைவாக நீடிக்கும் எந்த தாம்பத்திய அன்பும் கற்பனாவாதிகளுக்குக் கம்மியாகத் தெரியலாம். ஆனால் ஒரு தம்பதியினர் சராசரியாக 40 வருசக்காலம் மண வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அப்போது இந்த நாளொன்றைய 30 நொடிகள் வருசக் கணக்கீட்டில் பல மணிநேரங்களாய் குவிந்துவிடுகின்றன. ஒரு கணவனுக்குத் தன் மனைவி மேல் இத்தனை மணிநேர தீவிர அன்பு இருந்தால் அவனுக்கு என்ன ஆகும்? பொதுவாக தம்பதிகளில் முதலில் சாவதும் யார்?

ஆயிற்று, இன்னும் இரு நாட்களில் வாழ்க்கை தனது ஒப்பனையைக் கலைத்துக்கொண்டு மனைவியை ஊரிலிருந்து திருப்பி அனுப்பிவிடும். இதில் என்ன ஆறுதல் தெரியுமா? நானும் கூடவே போயிருக்க வேண்டியவன். வர மாட்டேன் என்ற வாதம் பெரும்பாலும் எடுபடாது. இன்ன வேலையை முடிக்க வேண்டிய கட்டாயம் நிறைவேறிய பின் கைக்கு இத்தனை ரூபாய் வரும் என்று சொல்லித்தான் தனிமையை ஈட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. மற்றபடி போகுமிடமெல்லாம் அயோத்தியை இழுத்துக்கொண்டு போகிறார்கள் இக்கால சீதைகள்.

எனது பிரெஞ்சுப் புரட்சி அனுபவங்கள்

எனது பிரெஞ்சுப் புரட்சி அனுபவங்கள்

ஐரோப்பிய அரசியலையும் அதன் மூலம் உலக அரசியலையும் உலக நாடுகளுக்கிடையிலான அரசியல், கலாச்சார, வர்த்தக உறவுகளையும் மட்டுமல்லாது கலை, இலக்கியத் துறைகளையும் பலவர்க்கத்து மக்களதும் வாழ்முறைகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட ஒரு பெருநிகழ்வு பிரெஞ்சுப் புரட்சியாகும். பொதுவாக ஒரு வரலாற்றுச் சம்பவம் நிகழ்ந்து சில நூற்றாண்டுகள் ஆன பின்னர் அது குறித்துப் பல விதக் கேள்விகளை வரலாற்றாய்வாளர்கள் எழுப்புவதுண்டு. உண்மையில் நடந்தது என்னவென்ற தேட்டையில் வரலாற்றறிஞர்கள் ஈடுபடத் தொடங்குவதுண்டு. அது போலவே பிரெஞ்சுப் புரட்சி குறித்தும் பல கருதுகோள்கள் உண்டு ஆகும்.

பிரெஞ்சுப் புரட்சியானது பிரான்சில் நிகழவில்லை; அது பர்மாவில் நிகழ்ந்தது என ஒரு சாராரும், பிரெஞ்சுப் புரட்சியானது பிரான்சில் நிகழவில்லை; அது கனடாவில் நிகழ்ந்தது என இன்னொரு சாராரும், இவ்விருபெரும் புரட்சிகளுமே கட்டுக்கதைகள்தாம் எனப் பிறிதொரு சாராரும் கூறிவருகின்றனர். எனது இப்பதிவானது இம்மாறுபடும் கருத்துகளால் விளைந்துள்ள குழப்பங்களைக் களைவதுடன் பிரெஞ்சுப் புரட்சி நடந்தது பிரான்சில்தான் என்பதான உண்மையை நிறுவ முயல்கின்றது.

பிரெஞ்சுப் புரட்சி நிகழ்ந்த ஆண்டான 1789இன்போது நான் பிரான்சில் – இன்னும் கூறப்போனால் பாரீஸ் நகரில் – இருந்தேன். அக்காலத்தில் சென்னையிலிருந்து வியன்னாவிற்கு நேரடிப் பேருந்து கிடையாது. கல்கத்தா சென்று அங்கிருந்து சுமார் 750 மணிநேரம் ரயிலில் பயணித்துப் பாரீஸில் இறங்கி வியன்னா செல்லும் பேருந்தைப் பிடிக்க வேண்டும். பாரீஸிலிருந்து வியன்னாவிற்குப் பயணம் 12 மணிநேரம்தான். நான் வியன்னாவிற்குச் சென்ற காரணம், ஸ்பானிய நாவலாசிரியர் செர்வாண்டஸின் ஒன்றரை நூற்றாண்டு விழாவில் கட்டுரை வாசிக்க என்னை அழைத்திருந்தனர். 02-12-1789 அன்று நான் பாரீஸில் கால் பதித்தபோது வசந்தகாலம். பாரீஸின் வசந்தகாலம் அமெரிக்க இலையுதிர்காலம் போன்று உலகப் பிரசித்தி பெற்றது. விழா நடைபெற இன்னும் இரு நாட்கள் இருந்ததால் அங்கு தங்கத் தீர்மானித்தேன்.

நான் தங்கிய விடுதியான ‘பலெ திராத்வார் தெ பாரி’ (Palais Tröttoir de Pàris) முந்நூறு வருடப் பழமைவாய்ந்ததாகும். பல பிரெஞ்சு அறிவுஜீவிகளின் சரணாலயமாக, விவாதத் தலமாக அது இருந்தது. பிரெஞ்சுப் புரட்சி நடந்த அன்று அதைச் சிறிதும் எதிர்பார்த்திராத பலரில் நானும் ஒருவர். எனக்குப் பிரெஞ்சு மொழி தெரிந்திருந்தால் அந்நாட்டு நாளேடுகளைப் படித்து பிரெஞ்சுப் புரட்சியை எதிர்நோக்கியிருப்பேன். அது எனது முதல் பாரீஸ் விஜயமாதலால் நகரின் பழம்பெருமை வாய்ந்த நினைவுச் சின்னங்களைப் பார்க்கப் புறப்பட்டேன். முலான் ரௌஜ் அருகே நல்ல காபி கிடைக்கும் என நண்பர்கள் வாயிலாகக் கேள்விப்பட்டிருந்தேன்.

புரட்சி நடந்த அன்று காலை சுமார் 11 மணியளவில் ‘பிஸ்த்ரோ’ ஒன்றில் தேனீர் அருந்தியபடி தெருக் காட்சிகளை ரசித்துக்கொண்டிருந்தேன் (‘பிஸ்த்ரோக்கள்’ என்பவை திறந்தவெளி உணவு விடுதிகளாகும். இங்குச் சிற்றுண்டி மட்டுமே கிடைக்கும்; சாப்பாடு கிடையாது. இவ்விடுதிகளில் மக்கள் பிரெஞ்சு நாளேடுகளைப் புரட்டியபடி பிரெஞ்சு பானங்கள் அருந்துவதும் அன்றாடக் காட்சி). அப்போது திடீரென ஒரு பேரோசை எழுந்தது. சுமார் இருபது பிரெஞ்சுக்காரர்கள் திபுதிபுவென ஓடிவந்தனர். ஒரு சிலர் விடுதியில் நுழைந்து ‘லா ரெவல்யூசியோன்! லா ரெவல்யூசியோன்!!’ எனக் கத்தினர். எனக்கு அம்மொழி தெரியாது எனினும் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்குக் கடத்தப்பட்ட 20,000 சொற்களில் ஒரு நூறாவது எனக்குத் தெரிந்திருந்தன. புரட்சி எனும் பொருள் கொண்ட ‘ரெவல்யூஷன்’ என்பதும் அதில் ஒன்று. ரெவல்யூசியோன் என்பதன் பொருளை அதன் மூலமாகப் புரிந்துகொண்டேன். உலகைச் சுனாமியாய்ப் புரட்டிப் போட்ட பிரெஞ்சுப் புரட்சி வந்துவிட்டதென்பதும் அது தற்போது அந்தத் தெருவின்வழியே வந்துகொண்டிருந்தது என்பதும் எனக்குப் புரியத் துவங்கின.

எனது வாழ்நாள்க் காலத்தில் ஒருசிறு தகராற்றைக் கூடப் பார்த்தறியாதவன் நான். ஆகவே புரட்சிக்கு எவ்வாறு உடனடி எதிர்வினையாற்றுவது என்றறியாது குழம்பி நான் நிற்கையினில், சுமார் ஆயிரம் பிரெஞ்சுப் பொதுமக்கள் ‘வீவ் லா பிரான்ஸ்! வீவ் லா பிரான்ஸ்!! (பிரான்ஸ் வாழ்க!) எனக் கோஷமிட்டபடி அத்தெருவில் விரைந்துவந்தனர். கிட்டத்தட்ட ஒவ்வொருவரதும் கைகளில் கொடிகளிருந்தன. சிறிது தொலைவிலிருந்து துப்பாக்கி குண்டுச் சத்தங்கள் எழும்பின. நான் பிரெஞ்சுப் புரட்சியை மாடியிலிருந்து பார்க்கலாமென விரைந்தேன். மொட்டை மாடியில் சுமார் இருநூறு பேர் பழைய நூல்களையும் நாளேடுகளையும் சஞ்சிகைகளையும் துண்டுதுண்டாகக் கிழித்துப்போட்டுக்கொண்டிருந்தனர். அது ஜனத் திரளின் மீது தூவுவதற்காக எனப் பின்னரே எனக்குத் தெரியவந்தது. மொட்டை மாடியில் இடமின்றி உடனடியாக முதல் தளத்திற்கு இறங்கினேன்.

முதல் தளத்தில் கம்பளி நூல் கொண்டு உடை பின்னிக்கொண்டிருந்த ஒரு சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்மணி புரட்சி வெடித்த காரணியை எனக்கு எடுத்துரைத்தார். மன்னர் பதினாறாம் லூயியின் மோசமான ஆட்சியினால் நாட்டில் பலவாறான சமூகச் சீர்கேடுகளும் சீர்திருத்தமின்மையும் தலைவிரித்தாடத் தொடங்கியிருந்தன. பிரெஞ்சுப் பிரபுக்களும் பிறவகைப்பட்ட செல்வந்தர்களும் செழிப்பில் திளைத்துக்கொண்டிருந்தனர். மக்கள் மனதில் சற்றுச் சற்றாக அதிருப்தி வலுத்தது. வால்டேர், ரூஸோ, திதரோ முதலான சிந்தனையாளர்கள் மற்றும் மக்கள்நலப் பணியாளர்கள் மேற்கொண்ட அனைத்துப் போராட்டங்களும் திட்டமிடப்படாத சிறைநிரப்புப் போராட்டங்களாயின. ‘ரொட்டி இல்லை என்றால் என்ன, கேக் சாப்பிடவும்’ என்கிற ராணியாரிணி மேரி அந்த்வானெத்தினது பேச்சு, மக்களது குமுறலுக்கு எரிபொருளூட்டவே செய்திருந்தது.

உயர்த்தப்பட்ட கைகளில் ஆயுதமேந்திக் கோஷமிட்டவாறு தெருக்களில் பெருந்திரளாய்ச் சுற்றியலைந்து புரட்சிக்குக் கூட்டம் திரட்டியபடி அரண்மனையை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தவர்களுடைய – புரட்சியாளர்களுடைய – வாழ்க்கையினது அவலங்களையும் போராட்ட வழிமுறைகளையும் அந்த அம்மாள் எனக்கு விளக்கினார். ஒன்றிற்கு மேற்பட்டோரின்றிப் புரட்சி சாத்தியமான சரித்திரமில்லை என ஜெர்மானிய எழுத்தாளர் எலியாஸ் கானட்டி எழுதியிருப்பது நினைவில் தோன்றி மறைந்தது.

நானிருந்த தெருவைக் கடந்திருந்த ஐம்பதினாயிரம் பேரே மீள மீள வந்துகொண்டிருப்பதான உணர்வு எனக்கேற்படும் வகையில் மக்கள் வெள்ளம் புழங்கியபடி இருந்தது. பாதாள ரயில் நிலையத்திற்குச் செல்லும் பாதை முழுவதிலும் புரட்சியாளர்களும் அவர்களது மனைவியரும் குழந்தைகளும் நிரம்பியிருந்தனர். மன்னரும் அரசியும் சிரச்சேதம் செய்யப்பட்டுவிட்டனர் எனவும் அவர்களைக் கொல்லுவதற்கென்றே அவசரமாகக் கண்டுபிடிக்கப்பட்ட ‘கில்லட்டின்’ கருவி அதற்குப் பயன்படுத்தப்பட்டது என்றும் மூட்டை முடிச்சுக்களுடன் காணப்பட்ட பிரிட்டிஷ் நாட்டவர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

அரண்மனையிலிருந்து திரும்பி வந்தவாறு இருந்த ஒரு கூட்டமானது கழுத்தில் நகைகள் மற்றும் கைகளில் பெரிய விலையுயர்ந்த ஜாடிகளுடன் காட்சியளித்தது. மாலைச் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த பிரெஞ்சுக்காரர் ஒருவரிடம் புரட்சி எப்போது முடியும் என ஆங்கிலத்தில் வினவினேன். குறைந்தபட்சம் அதிகாலை மூன்று மணி ஆகலாம் என்று அவர் பிரெஞ்சு மொழியில் அளித்த பதிலின் பொருளை ஒருவாறாகப் புரிந்துகொண்டேன்.

புரட்சி என்று வந்துவிட்டால் புரட்சியாளர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என வர்ணிக்கும் நுட்பமான பாடல் ஒன்று ஸ்வப்னவாசவதத்தையில் உண்டு. ஸ்ரீரங்கம் கீதாசாரியார் உரையைக் கேளுங்கள் -

“தீக்குச்சி தானாகப் பற்றிக்கொள்ளாது. அதை யாராவது வந்து உரச வேண்டும். தீக்குச்சி வம்பு தும்பு வைத்துக்கொள்ளாது. அதாவது யாராவது வந்து உசுப்பும் வரையில். ஒவ்வொரு புரட்சியாளனின் மனமும் தலா ஒரு தீக்குச்சியைப் போலத்தான்.”

பிரெஞ்சுப் புரட்சி பற்றி வால்டேர் சொல்வதைக் கேளுங்கள்:

“புரட்சிக்கான தேவை பற்றி எழுத்தாளன், தத்துவ ஞானி என்ற முறையில் நிறைய பேசியாயிற்று. இனி நீங்கள் ஆச்சு, ராணி மேரி ஆச்சு என்று விட்டுவிட்டேன். இனி ரொம்பக் காலத்திற்கு எந்தப் பத்திரிகைக்கும் பத்தி எழுதப்போவதில்லை என்று தீர்மானித்துவிட்டேன். பிரெஞ்சுக்காரர்களுக்கு என் பத்தியை எதிலும் படிக்கவில்லை என்றால் உருளைக் கிழங்கு செரிக்காது.”

வால்டேரின் சமகாலச் சிந்தனையாளரான ரூஸோவின் கருத்தும் வால்டேரினுடையதுடன் கிட்டத்தட்ட ஒத்துப்போகிறது:

“அந்த்வானெத்தின் கொடுங்கோலாட்சியை ஒழிக்கப் புரட்சி அவசியம். ஆனால் புரட்சி என்பது கொடியவர்கள் கூடுமிடம் ஆகிவிடக் கூடாது.”

இத்தனைக் களேபரத்திலிருந்து தப்பித்து வந்து மாம்பலம் பாசஞ்சர் ரயிலைப் பிடிக்கும்போது காலை 5 மணி ஆகிவிட்டிருந்தது. டிக்கெட்டை வாங்கிக்கொண்டு வந்து ஒரு பெஞ்சிற்குப் புட்டத்தைக் கொடுத்தேன். உலகின் இன்னொரு மூலையில் புரட்சி நடப்பதற்கான எந்த அறிகுறியையும் காணோம். எனக்கு சுக்குக் காபி தேவைப்படுமா என ஆவலுடன் வந்து கேட்ட இளைஞனிடம் சில்லறையைக் கொடுத்து ஒன்று வாங்கிக் குடித்தேன். வால்டேரும் ரூஸோவும் தெரியாத அவனுக்கு அன்று நிச்சயம் உருளைக் கிழங்கு செரித்திருக்கும்.