திசை காட்டிப் பறவை – 11

அத்தியாயம் 11 – பாலிய காலத்துப் படிமங்கள்

இன்று காலை பால் வாங்கப் போனபோது என் பாலிய கால ஆசிரியர் ஒருவரைப் பார்த்தேன். ஓவிய ஆசிரியர்தான். காரட், பாகற்காய், தக்காளி, கத்தரிக்காய் எல்லாம் அழகழகாக வரைவார் -

காரட் பார்த்திருக்கிறீர்களா? பாலியத்தில் நான் படித்த படக் கதைகளில் முயல்கள் காரட்டை லூசு மாதிரி தின்றுகொண்டிருக்கும். கண்ணுக்கு நல்லதுதான், இல்லையென்று சொல்லவில்லை. அதற்காக இப்படியா?! ஒரு படக் கதையை குறைந்தது அரை லட்சம் பிரதிகள் அச்சடித்திருப்பார்கள். அத்தனைப் பிரதிகளிலும் காரட் சாப்பிட்டால் வயிறு என்னத்துக்கு ஆகும்? அதனால்தான் கடைசியில் ஆமை ஜெயித்துவிட்டது.

பாகற்காயோ அபரிமிதக் கசப்பு. டினோசாரின் முதுகு போன்ற அதன் மேனியினுடைய முரட்டுத்தனமே அதனுடைய ருசியைக் கட்டியம் கூறுகிறது. என் தாயார் அதில் கறி செய்யும்போதெல்லாம் சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவார். இப்போது வேறு மாதிரி செய்திருக்கிறேன், கசக்காது என்பார். தின்று பார்த்தால் கசப்பு மாறாமல் முகஞ்சுளிக்க வைக்கும். சீ கசப்பு என்றால், அதன் சுவையே கசப்புதான், கசப்பும் ஒரு சுவைதானே என்பார். இது எப்படி இருக்கு?

அடுத்து என்ன? காரட். இல்லை, அதை முதலிலேயே சொல்லிவிட்டேன். இப்போது தக்காளி. இப்பழமானது புற்றுநோயைத் தடுக்கும் என்று கேள்வி. உண்மையில் தடுக்குமா என்பதுதான் கேள்வி. தடுக்கும் என்பது பதில்.

கத்தரிக்காயைப் பற்றிப் பேச நான் பணிபுரியும் நிறுவனம் அனுமதிக்காது. ஆகவே வாசகர்களே, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

6 Comments »

பேயோன் on June 10th 2010 in புனைவு

திசை காட்டிப் பறவை – 10

அத்தியாயம் 10 – ஓவியமும் பேசுதடி

மாபெரும் கலா ரசிகன் குமார். இங்கே மட்டும் என்ன வாழ்கிறதாம்? நானும் கலா ரசிகன்தான். அவனும் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே, யார் வேண்டாம் என்றார்கள்.

குமாரைக் கலா ரசிகனாக ஆக்குவதில் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. கலையை உருவாக்குவதில் போட்டி இருக்கலாம், ஆனால் ரசிப்பதில் இருக்க முடியாது. குறைந்தது இந்த அத்தியாயத்தில் அது முடியாது. தவிரவும், நாங்கள் இருவேறு உலகங்களில் சஞ்சரிக்கிறோம். இவ்விரு உலகங்களை இணைக்கும் புள்ளியை நான் சதா அழித்துக்கொண்டிருக்கிறேன்.

இச்சிந்தனையோட்டத்தின் விளைவாக, குமார் கலையை ரசிப்பதோடு நிற்கவில்லை. அதைத் தனக்கேயுரிய பாணியில் தோற்றுவிக்கவும் செய்தான்.

ஓவியர் குமாரின் மேலான கோட்டோவியம் ஒன்று இங்கு(‘த்’) தரப்படுகிறது.

மூக்கு என்பதை மனித முகத்தில் அது பொதுவாகத் தளம் கொண்டு இயங்கும் இடத்திலேயே பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு அதை இடமாற்றி (transfer) வேறு பார்வைக்கோணத்தால் அணுகத் தூண்டுகிறார் ஓவியர் குமார். இப்படைப்பில் மூக்கு இருக்குமிடம் இரு தொடைகளுக்கு இடையே. எனவே இங்கு மூக்கானது ஆண் குறியாகவும் தொழிற்படுகிறது. ஓவியத்தின் மையப் பகுதியில் இருப்பதால் இம்மூக்கை இந்த ஓவியத்தின் மூக்காகவும் கொள்ளலாம். கலை வரலாற்றில் மூக்குள்ள ஒரே ஓவியம் இதுதான் எனவும் துணிந்து சொல்லலாம்.

No Comments »

பேயோன் on June 9th 2010 in புனைவு

சிறு கவிதைகள் மூன்று

1.

இருட்டிலும்
சிரிக்கிறாள்
மோனா லிசா

2.

காமன்வெல்த் மாநாட்டில்
வெனிசுலா பிரதமர்
உலக அமைதி பற்றிப் பேசுகிறார்
மாமனார் பார்ப்பது மியூட்டில்

3.

வரி ஒன்று
வரி இரண்டு
வரி மூன்று. வரி நான்கில் ஒரு ‘ம்’ மட்டு
ம்

7 Comments »

பேயோன் on March 17th 2010 in கவிதை

Rss Feed Tweeter button Facebook button Delicious button Stumbleupon button

பேயோன் is using WP-Gravatar