குட்டி இளவரசன்

கொஞ்ச வருபவர்களையெல்லாம் திட்டுகிறான்
பிரிய பொம்மைகளை வீசியெறிகிறான்
அதட்டுபவர்களையும் அப்படியே
இந்தக் குழந்தைக்கு ஏன் இவ்வளவு குரோதம்
என யாருக்கும் கேட்கத் தோன்றவில்லை
குழந்தைதானே என்கிறார்கள்
உரிமம் தருகிறார்கள்
ஒரு கையால் கும்மாங்குத்து குத்தினாலும்
இன்னொரு கையால் நம்மை கெட்டியாகப்
பிடித்துக்கொண்டுதானே இருக்கிறது என்கிறார்கள்
குழந்தைக்குக் கொஞ்சல்களும் கைதட்டல்களும்
தேவைப்படும் வரை தொடரும் நமக்கு தர்ம அடிகள்.

பல் விழுதல்

இன்று சி.எல். பிரேம்குமாருக்கு
ஸ்கூலிலேயே பல் விழுந்துவிட்டதாம்
பறக்கும் விமானத்தில் பிரசவமாகும்
நிகழ்வு போலும் இது.

விருந்தாளிக் குழந்தைகள்

விருந்தாளிக் குழந்தைகள் வந்தாலே
வீட்டை அலங்கோலமாக்கிவிடுகிறார்கள்.
இவர்களுக்காகவே கைவிலங்குகள்
வாங்கிவைத்திருக்கிறேன். ஆனால்
விருந்தாளிகள் அதை மாட்ட மறுக்கிறார்கள்.
சென்டிமென்ட் பார்க்கிறார்கள்.
இன்னின்னதை உடைத்தால்
இவ்விவ்வளவு காசை எடுத்து வை
என்றென ஒவ்வொருவனும் கேட்கவா முடியும்?
சரி, வீடு எனதாயினும் இஷ்டம் உன்னுடையது
என்று விட்டுவிடுகிறேன்
விருந்தோம்பலாய்.

நிலவு ஒரு வரிக்குதிரை

1

இரவில் வானிலிருந்து ஒரு நிலாவும்
பகலில் கூண்டினுள்ளிருந்து வரிக்குதிரையும்
மனிதர்களை வேடிக்கை பார்க்கின்றன
உனக்கும் எனக்கும் அவற்றைத் தெரியும்
ஆனால் அவற்றுக்கு நம்மைத் தெரியாது
தினமும் பார்க்கும் ஆயிரமாயிரம் முகங்களில்
எத்தனையை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்?

2

குழந்தைக்குத் தாத்தா புதிய கதைகள் சொல்கிறார்
எழுதத் தகுந்த பொறிகள் தோன்றுகின்றன
ஆனால் எழுதுவதற்குள் முதுமை அவற்றை அழிக்கிறது
தாத்தாவின் கதைகள் குழந்தைக்குள்ளேயே இருக்கும்
குழந்தைக்கு மறக்கும் வரை.