பேயோன்

படித்ததில் பிடித்தவன்

வாழும் கணங்கள்

September 7th, 2010

முக ரோமத்தின் கடைசி மில்லிமீட்டரில் ஒரு பகுதியை மட்டும் சதைக்குள் மிச்சம் வைத்து சவரத்தை முடித்துத் தெருவில் இறங்கினேன். காற்றும் வெப்பமும் ஊடும் பாவுமாகக் கலந்திருந்தாலும் அப்போதுதான் சவரம் செய்து கழுவப்பட்டிருந்த முகவாயில் காற்று படும்போதெல்லாம் குளிர்ந்தது. அந்தக் குளிர்ச்சியையும் ஷேவிங் லோஷனின் மெல்லிய ரசாயன நறுமணத்தையும் அதைவிட மெல்லியதாக ரசித்தபடியே எனது கால்களை ஒவ்வொன்றாக எடுத்துவைத்துத் தெருவில் நடந்தேன். ஒரு காலைத் தரையிலிருந்து எடுக்கும்போது சமநிலை தவறி கீழே விழ வாய்ப்பளிக்காதபடிக்கு மறு கால் உடனே தரையிறங்கிவிடும் அதிசயத்தை ரசிக்காதிருக்க முடிக்கவில்லை.

தெரு முடியும் இடத்தில் ஒரு பெரிய மரம் பல்வேறு கிளைகளை நீட்டி என்னை வரவேற்றது. பார்த்ததும் நெகிழ்ந்தேன். இன்றுதான் முளைத்தது போல ஒரு புத்துணர்ச்சி உடனே என்னுடனான ஒரு பந்தத்தை நிறுவிவிடுகிறது. இந்த மரத்திற்கு அங்குமிங்கும் நகரும் வசதி இல்லை. அதன் உடலின் ஆயிரக்கணக்கான உறுப்புகள் சதா அழிந்துகொண்டும் உதிர்ந்துகொண்டும் இருக்கின்றன. இருந்தாலும் அந்த மரம் தொடர்ந்து தழைத்துக்கொண்டுதான் உள்ளது. வெயில் அடித்தால் காய்வதும் மழை பெய்தால் நனைவதும் காற்றடித்தால் அசைவதுமாக, எந்த நூற்றாண்டிலோ கொடுக்கப்பட்ட ஏதோ ஒரு அற்புத சாபத்தை நிறைவேற்றிக்கொண்டிருப்பது போல் நிற்கிறது அந்த மரம். மரங்களின் கடமையுணர்ச்சி, அசகாய உழைப்பு மற்றும் உறுதி ஆகியவற்றிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு இலையும் ஒரு பாடம்.

உடலில் துணி மூடாத இடங்களில் ஆங்காங்கே சிறு குளிர்ச்சிகள். தூறல் போடத் தொடங்கியிருந்தது. ரசிக்கலாமா ஒதுங்கலாமா என யோசித்துக்கொண்டிருக்கும்போது சாலை ஈரமாகிவிட்டிருந்தது. மழை என்றாலே ஈரம்தான். பல சிறு ஈரங்கள் சேரும் பெரிய, பரவலான ஈரம். இன்னும் கனத்துப் பெய்தால் ஓடும், தேங்கும், நனைக்கும் ஈரம். ஒரு திரவப் பனி போல் மேலே கவிந்துகொண்டிருக்கிறது மழையின் ஈரம். மர இலைகளும் மழைத் துளிகளும் நிலத்தில் விழுவதை ஒப்பிட்டுக்கொண்டேன்.

ஒரு முதியவர். வயது எண்பது இருக்கலாம். சைக்கிளில் சுக்கு காபி கேன் வைத்து விற்றுக்கொண்டிருந்தார். மழை காரணமாக நல்ல கூட்டம் இருந்தது. முகத்தில் ஒரு புன்னகையை ஓடவிட்டபடி ஒரே ஆளாக சுமார் 20 வாடிக்கையாளர்களைக் கையாண்டுகொண்டிருந்தார். வாழ்வின் அனுபவங்கள் ஏற்படுத்திய அந்த ஆழமான சுருக்கங்களின் கால்வாய்களில் மழைத் துளிகள் இறங்கி ஓடின. அவருக்கு சர்வ கண்டிப்பாகக் குடும்பம் இருக்கும். அன்றன்றைக்குக் கிடைக்கும் வருமானத்தில் பேரக் குழந்தைகளுக்கு இனிப்புகளையும் விளையாட்டுப் பொருட்களையும் அவர் வாங்கிச் செல்லக்கூடும். அம்மனிதர் அந்தத் தள்ளாத வயதிலும் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தெருத் தெருவாக வியாபாரம் செய்துகொண்டிருந்தது எனக்குள் ஒரு இனம்புரியாத பெருமிதத்தைக் கிளறியது. இவரைப் போன்றவர்கள் வாழும் உலகில்தான் நாமும் வாழ்கிறோம் என்கிற புரிதல் புன்னகையைத் தருவித்தது. பத்து ரூபாயை அவர் கையில் கொடுத்துவிட்டு அவர் சில்லறையை எண்ணித் திரும்பத் தருவதற்குள் ரகசியமாக விலகி நடந்தேன். ஒரு அற்பத் திருப்தி நிறைவேறிய திருப்தி.

சாலையோர மழைக் குட்டை ஒன்றில் குடிசைப் பகுதிக் குழந்தைகள் இருவர் சட்டை கூட அணியாமல் குதித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். வரும் வழியில்தான் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் “தண்ணில வெளையாடாதடா கபோதி” என்று கண்டித்ததைப் பார்த்தேன். இருவேறு உலகத்துப் பெற்றோர்கள். நமது நடுத்தரவர்க்க பாதுகாப்பின்மை உணர்வை நம் குழந்தைகளுக்கு இளமையிலேயே புகட்டிவிடுகிறோம். அவர்களுடைய இளமைக்கு ஆயிரம் கவலைகளைக் கற்றுத் தருகிறோம். இப்படித்தான் நடுத்தரவர்க்கக் கவலைகள் மரபணு அமைப்பில் பதியப்பெற்று ஒரு வர்க்கத்தின் பரம்பரைக் குணாம்சமாக மாறுகின்றன. விளைவு, ஒரு பக்கம் குழந்தைகள் சேற்றில் விளையாடுகிறார்கள், இன்னொரு பக்கக் குழந்தைகள் எதையும் அனுபவிக்காமல் வீட்டில் தொலைக்காட்சி பார்த்து வளருகிறார்கள். இருவரும் பள்ளியில் சந்திக்கும்போது பகிர்ந்துகொள்ளும் அனுபவங்கள் சம்பந்தா சம்பந்தமில்லாமல் இருக்கின்றன.

மாலைக்கு முதுமை கூடிப் பார்வை மங்கி இருட்டிக்கொண்டது. வெளிச்சத்தின் அனைத்துக் கதவுகளையும் சாத்திவிட்டது போல் ஒரு இருட்டு. பூச்சிகளின் இசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. கூடவே ஏகாந்தத்தின் இரைச்சலும் குருவிகளின் கீச்சொலியும் ஓணான்களின் சரசரப்பும் எனது காலடி ஓசையும். தெருவோர எருக்கஞ்செடிகளின் தாழ்வான நீண்ட கிளைகள் கால்களில் தட்டுப்பட்டன. எருக்க மொட்டுகளை மனதால் உடைத்துக்கொண்டு நடந்தேன். அந்தக் கும்மிருட்டில் கண்களைத் திறந்தாலும் மூடினாலும் காட்சி ஒரு வண்ணத்தியதாகவே இருந்தது. காதுகள் கண்களாக மாறி ஒவ்வொரு சிறு சப்தத்தையும் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தன. சில நொடிகளில் அங்கிருந்த உயிரினங்களும் வாயை மூடிக்கொண்டு தத்தம் வேலையைப் பார்த்துக்கொண்டு போயின. காதை அடைக்கும் நிசப்தம். அந்த நிசப்தத்தினைத் தட்டித் தட்டி வடிவம் கொடுக்கும் ஒலி போல் எனது காலடிச் சத்தம் மாறாத லயத்துடன் கேட்டுக்கொண்டிருந்தது. இருளும் நிசப்தமும் பிறப்பில் பிரிக்கப்பட்ட குழந்தைகள் போலும்.

இருளில் எதிரே இழுத்துக் கிடந்த சாலைக்குள் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மங்கிய விளக்கொளியில் புகுந்தார்கள். இருவரும் தங்கள் எண்ணங்களைத் தாங்கள் பொதுவாக அறிந்த ஒரு மொழியில் பரஸ்பரம் வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். ஒருவர் பேசுவதும் அதை இன்னொருவர் கேட்பதும், பிறகு இருவருடைய பாத்திரமும் தலைகீழாகி பேசுபவர் கேட்பதும் கேட்பவர் பேசுவதுமாக, ஒரு தொலைக்காட்சித் தொடரில் இருவர் பேசும் காட்சி தெருவிற்கு இறங்கி வந்தது போலிருந்தது. இவர்களது உறவின் தன்மை குறித்து சிந்திக்கத் தொடங்கினேன். கணவன்-மனைவியாகவோ காதலர்களாகவோ இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். ஒரு ஆணும் பெண்ணும் தெருவில் போகிறார்கள் என்றால் அவர்கள் தம்பதியாகவோ காதலர்களாகவோதானே இருக்க முடியும். மிஞ்சிப்போனால் மணமக்களாக இருக்கலாம். நாமுள்ள இடமப்படி. தெருவில் கணவன்-மனைவியே நடந்துபோனால் கூட அவர்களுக்கு இடையே ஏதோ உறவு இருப்பதாக சந்தேகப்படும் சமூகம் இது.

ஏதோ ஒரு வீட்டினுள்ளிருந்து குறுந்தொகைப் பாடல்கள் ஒலித்தன. நான் நெருங்குகையில் பாடல்கள் முடிந்து விளம்பரம் ஒலிக்கத் துவங்கியிருந்தது. தெருவில் இன்னும் சிலர் மிச்சமிருந்ததோடு அவர்கள் நடமாடிக்கொண்டும் இருந்தார்கள். எல்லோருமே அவரவர் நோக்கங்களுக்கேற்ப ஒவ்வோரிடத்திற்குச் சென்றுகொண்டிருந்ததைப் பார்த்ததும் புரிந்துகொள்ளலாம். குறும்பட திரையிடல்கள் போன்ற நிகழ்வுகளுக்குத்தான் இவர்கள் தங்கள் வித்தியாசங்களை மறந்து ஒரே இடத்திற்குச் செல்லக்கூடியவர்கள். தொலைவில் எனது வீடு தெரிந்தது. உலகையே சுற்றி வந்தாலும் நம்முடைய வீட்டினை அடையும்போது அவரவருக்கு ஏற்படும் பரிச்சய ஆசுவாசம் மனதைக் கவ்விக்கொண்டது. இருளின் முடிவில் எனது தெரு தொடங்கிவிட்டிருந்தது.

அடைத்தாலும் தப்புவேன்!

July 29th, 2010

(என் விமர்சகர்களுக்கு, வைரமுத்து பாதிப்புடன்)

என் வறிய எதிரிகளே!

மழைக்கால வெயிலில் உங்களை
நினைத்தால்
உடல் கொஞ்சம் விறைக்கிறது.

உங்கள் முகவரியை
நீங்கள் ஏன் என்
நிமிராத வாலில்
எழுதிவிட்டுப் போகிறீர்கள்?

எருக்கம் பூவையும்
மல்லிகைப் பூவையும்
எப்படி உங்களால்
ஒரே நாறில்
ஒரே நேரத்தில்
கோர்க்க முடிகிறது?

இப்போதெல்லாம்
உங்கள் பேனா
எழுத்துக்களையும் எண்களையும் தவிர
வேறெதையும்
எழுதுவதில்லையே!

நீங்கள் தூவிய
பூக்கள் என் காலைத் தடுக்கியது.

நீங்கள்
தட்டிக் கொடுத்தபோது
என் சட்டையில் தையல் விட்டது.

வறிய எதிரிகளே!

பீடியால் சுட்டு – என்
வெள்ளத்தை வற்றச் செய்யத் திட்டமா?

என்ன செய்வீர்கள் என்னை?
பணமும் புகழும் சோறும்
இல்லாத தேசத்திற்கா
என்னை நாடு கடத்திவிட முடியும்?

பூண்டி நீர்த் தேக்கத்தில்
எனக்கான நீரைக்
களவாடிவிடவா முடியும்?

தமிழகப் பெட்டிக் கடைகளில்
எனக்கான தேன்மிட்டாய்களை
அமுக்கிவிடவா முடியும்?

எழுதிக்கொள்ளுங்கள்
எதிரிகளே!

என்னைச் சிறையிலடைத்தாலும்
நான் கம்பியிடம் கவிதை பாடி
வெளியே வந்துவிடுவேன்.

என் வறிய எதிரிகளே!

நீங்கள் என் மேல் எறிந்த
தீப்பந்தங்களைக்
கொண்டு நான் முதுகு
சொறிந்துகொள்கிறேன்.

என் மீது வீசும் காகித
அம்புகளால் நான் காது
குடைந்துகொள்கிறேன்.

என் மானம் அறிவு தொட முடியாத
தூரத்தில் இருக்கிறது.
சமூகத்தின் சம்மதத்தோடு
நான் சாகாமல் இருக்கிறேன்.

என் பென்சிலுக்கு ரப்பர் இல்லை.

என் பாஷையை
கழுதைகளுக்கு சொல்லிக்
கொடுத்துவிட்டுச் சாவேன்.

என் கவிதைகளை
பல்லிகளுக்கு சொல்லிக்
கொடுத்துவிட்டுப் போவேன்.

என் எழுத்து
படிக்கும் மக்களின் தலையெழுத்து!

என் வறிய எதிரிகளே
என் இதயத்தைச் சொறியாதீர்கள்.

பேண்ட்டைக் கிழித்து
பெர்முடாஸ் ஆக்கிவிடலாம் என்று
பிழை செய்யாதீர்கள்.

சில நூற்றாண்டுகளுக்குத்
தேவையான தாட்களை – என்
கொடவுனில் நான்
சேமித்து வைத்திருக்கிறேன்.

(வைரவரிகளில் ஒரு பகுதி: இவள் வியந்து நிற்கின்றாள்!)

எனது பிரெஞ்சுப் புரட்சி அனுபவங்கள்

July 7th, 2010

எனது பிரெஞ்சுப் புரட்சி அனுபவங்கள்

ஐரோப்பிய அரசியலையும் அதன் மூலம் உலக அரசியலையும் உலக நாடுகளுக்கிடையிலான அரசியல், கலாச்சார, வர்த்தக உறவுகளையும் மட்டுமல்லாது கலை, இலக்கியத் துறைகளையும் பலவர்க்கத்து மக்களதும் வாழ்முறைகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட ஒரு பெருநிகழ்வு பிரெஞ்சுப் புரட்சியாகும். பொதுவாக ஒரு வரலாற்றுச் சம்பவம் நிகழ்ந்து சில நூற்றாண்டுகள் ஆன பின்னர் அது குறித்துப் பல விதக் கேள்விகளை வரலாற்றாய்வாளர்கள் எழுப்புவதுண்டு. உண்மையில் நடந்தது என்னவென்ற தேட்டையில் வரலாற்றறிஞர்கள் ஈடுபடத் தொடங்குவதுண்டு. அது போலவே பிரெஞ்சுப் புரட்சி குறித்தும் பல கருதுகோள்கள் உண்டு ஆகும்.

பிரெஞ்சுப் புரட்சியானது பிரான்சில் நிகழவில்லை; அது பர்மாவில் நிகழ்ந்தது என ஒரு சாராரும், பிரெஞ்சுப் புரட்சியானது பிரான்சில் நிகழவில்லை; அது கனடாவில் நிகழ்ந்தது என இன்னொரு சாராரும், இவ்விருபெரும் புரட்சிகளுமே கட்டுக்கதைகள்தாம் எனப் பிறிதொரு சாராரும் கூறிவருகின்றனர். எனது இப்பதிவானது இம்மாறுபடும் கருத்துகளால் விளைந்துள்ள குழப்பங்களைக் களைவதுடன் பிரெஞ்சுப் புரட்சி நடந்தது பிரான்சில்தான் என்பதான உண்மையை நிறுவ முயல்கின்றது.

பிரெஞ்சுப் புரட்சி நிகழ்ந்த ஆண்டான 1789இன்போது நான் பிரான்சில் – இன்னும் கூறப்போனால் பாரீஸ் நகரில் – இருந்தேன். அக்காலத்தில் சென்னையிலிருந்து வியன்னாவிற்கு நேரடிப் பேருந்து கிடையாது. கல்கத்தா சென்று அங்கிருந்து சுமார் 750 மணிநேரம் ரயிலில் பயணித்துப் பாரீஸில் இறங்கி வியன்னா செல்லும் பேருந்தைப் பிடிக்க வேண்டும். பாரீஸிலிருந்து வியன்னாவிற்குப் பயணம் 12 மணிநேரம்தான். நான் வியன்னாவிற்குச் சென்ற காரணம், ஸ்பானிய நாவலாசிரியர் செர்வாண்டஸின் ஒன்றரை நூற்றாண்டு விழாவில் கட்டுரை வாசிக்க என்னை அழைத்திருந்தனர். 02-12-1789 அன்று நான் பாரீஸில் கால் பதித்தபோது வசந்தகாலம். பாரீஸின் வசந்தகாலம் அமெரிக்க இலையுதிர்காலம் போன்று உலகப் பிரசித்தி பெற்றது. விழா நடைபெற இன்னும் இரு நாட்கள் இருந்ததால் அங்கு தங்கத் தீர்மானித்தேன்.

நான் தங்கிய விடுதியான ‘பலெ திராத்வார் தெ பாரி’ (Palais Tröttoir de Pàris) முந்நூறு வருடப் பழமைவாய்ந்ததாகும். பல பிரெஞ்சு அறிவுஜீவிகளின் சரணாலயமாக, விவாதத் தலமாக அது இருந்தது. பிரெஞ்சுப் புரட்சி நடந்த அன்று அதைச் சிறிதும் எதிர்பார்த்திராத பலரில் நானும் ஒருவர். எனக்குப் பிரெஞ்சு மொழி தெரிந்திருந்தால் அந்நாட்டு நாளேடுகளைப் படித்து பிரெஞ்சுப் புரட்சியை எதிர்நோக்கியிருப்பேன். அது எனது முதல் பாரீஸ் விஜயமாதலால் நகரின் பழம்பெருமை வாய்ந்த நினைவுச் சின்னங்களைப் பார்க்கப் புறப்பட்டேன். முலான் ரௌஜ் அருகே நல்ல காபி கிடைக்கும் என நண்பர்கள் வாயிலாகக் கேள்விப்பட்டிருந்தேன்.

புரட்சி நடந்த அன்று காலை சுமார் 11 மணியளவில் ‘பிஸ்த்ரோ’ ஒன்றில் தேனீர் அருந்தியபடி தெருக் காட்சிகளை ரசித்துக்கொண்டிருந்தேன் (‘பிஸ்த்ரோக்கள்’ என்பவை திறந்தவெளி உணவு விடுதிகளாகும். இங்குச் சிற்றுண்டி மட்டுமே கிடைக்கும்; சாப்பாடு கிடையாது. இவ்விடுதிகளில் மக்கள் பிரெஞ்சு நாளேடுகளைப் புரட்டியபடி பிரெஞ்சு பானங்கள் அருந்துவதும் அன்றாடக் காட்சி). அப்போது திடீரென ஒரு பேரோசை எழுந்தது. சுமார் இருபது பிரெஞ்சுக்காரர்கள் திபுதிபுவென ஓடிவந்தனர். ஒரு சிலர் விடுதியில் நுழைந்து ‘லா ரெவல்யூசியோன்! லா ரெவல்யூசியோன்!!’ எனக் கத்தினர். எனக்கு அம்மொழி தெரியாது எனினும் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்குக் கடத்தப்பட்ட 20,000 சொற்களில் ஒரு நூறாவது எனக்குத் தெரிந்திருந்தன. புரட்சி எனும் பொருள் கொண்ட ‘ரெவல்யூஷன்’ என்பதும் அதில் ஒன்று. ரெவல்யூசியோன் என்பதன் பொருளை அதன் மூலமாகப் புரிந்துகொண்டேன். உலகைச் சுனாமியாய்ப் புரட்டிப் போட்ட பிரெஞ்சுப் புரட்சி வந்துவிட்டதென்பதும் அது தற்போது அந்தத் தெருவின்வழியே வந்துகொண்டிருந்தது என்பதும் எனக்குப் புரியத் துவங்கின.

எனது வாழ்நாள்க் காலத்தில் ஒருசிறு தகராற்றைக் கூடப் பார்த்தறியாதவன் நான். ஆகவே புரட்சிக்கு எவ்வாறு உடனடி எதிர்வினையாற்றுவது என்றறியாது குழம்பி நான் நிற்கையினில், சுமார் ஆயிரம் பிரெஞ்சுப் பொதுமக்கள் ‘வீவ் லா பிரான்ஸ்! வீவ் லா பிரான்ஸ்!! (பிரான்ஸ் வாழ்க!) எனக் கோஷமிட்டபடி அத்தெருவில் விரைந்துவந்தனர். கிட்டத்தட்ட ஒவ்வொருவரதும் கைகளில் கொடிகளிருந்தன. சிறிது தொலைவிலிருந்து துப்பாக்கி குண்டுச் சத்தங்கள் எழும்பின. நான் பிரெஞ்சுப் புரட்சியை மாடியிலிருந்து பார்க்கலாமென விரைந்தேன். மொட்டை மாடியில் சுமார் இருநூறு பேர் பழைய நூல்களையும் நாளேடுகளையும் சஞ்சிகைகளையும் துண்டுதுண்டாகக் கிழித்துப்போட்டுக்கொண்டிருந்தனர். அது ஜனத் திரளின் மீது தூவுவதற்காக எனப் பின்னரே எனக்குத் தெரியவந்தது. மொட்டை மாடியில் இடமின்றி உடனடியாக முதல் தளத்திற்கு இறங்கினேன்.

முதல் தளத்தில் கம்பளி நூல் கொண்டு உடை பின்னிக்கொண்டிருந்த ஒரு சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்மணி புரட்சி வெடித்த காரணியை எனக்கு எடுத்துரைத்தார். மன்னர் பதினாறாம் லூயியின் மோசமான ஆட்சியினால் நாட்டில் பலவாறான சமூகச் சீர்கேடுகளும் சீர்திருத்தமின்மையும் தலைவிரித்தாடத் தொடங்கியிருந்தன. பிரெஞ்சுப் பிரபுக்களும் பிறவகைப்பட்ட செல்வந்தர்களும் செழிப்பில் திளைத்துக்கொண்டிருந்தனர். மக்கள் மனதில் சற்றுச் சற்றாக அதிருப்தி வலுத்தது. வால்டேர், ரூஸோ, திதரோ முதலான சிந்தனையாளர்கள் மற்றும் மக்கள்நலப் பணியாளர்கள் மேற்கொண்ட அனைத்துப் போராட்டங்களும் திட்டமிடப்படாத சிறைநிரப்புப் போராட்டங்களாயின. ‘ரொட்டி இல்லை என்றால் என்ன, கேக் சாப்பிடவும்’ என்கிற ராணியாரிணி மேரி அந்த்வானெத்தினது பேச்சு, மக்களது குமுறலுக்கு எரிபொருளூட்டவே செய்திருந்தது.

உயர்த்தப்பட்ட கைகளில் ஆயுதமேந்திக் கோஷமிட்டவாறு தெருக்களில் பெருந்திரளாய்ச் சுற்றியலைந்து புரட்சிக்குக் கூட்டம் திரட்டியபடி அரண்மனையை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தவர்களுடைய – புரட்சியாளர்களுடைய – வாழ்க்கையினது அவலங்களையும் போராட்ட வழிமுறைகளையும் அந்த அம்மாள் எனக்கு விளக்கினார். ஒன்றிற்கு மேற்பட்டோரின்றிப் புரட்சி சாத்தியமான சரித்திரமில்லை என ஜெர்மானிய எழுத்தாளர் எலியாஸ் கானட்டி எழுதியிருப்பது நினைவில் தோன்றி மறைந்தது.

நானிருந்த தெருவைக் கடந்திருந்த ஐம்பதினாயிரம் பேரே மீள மீள வந்துகொண்டிருப்பதான உணர்வு எனக்கேற்படும் வகையில் மக்கள் வெள்ளம் புழங்கியபடி இருந்தது. பாதாள ரயில் நிலையத்திற்குச் செல்லும் பாதை முழுவதிலும் புரட்சியாளர்களும் அவர்களது மனைவியரும் குழந்தைகளும் நிரம்பியிருந்தனர். மன்னரும் அரசியும் சிரச்சேதம் செய்யப்பட்டுவிட்டனர் எனவும் அவர்களைக் கொல்லுவதற்கென்றே அவசரமாகக் கண்டுபிடிக்கப்பட்ட ‘கில்லட்டின்’ கருவி அதற்குப் பயன்படுத்தப்பட்டது என்றும் மூட்டை முடிச்சுக்களுடன் காணப்பட்ட பிரிட்டிஷ் நாட்டவர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

அரண்மனையிலிருந்து திரும்பி வந்தவாறு இருந்த ஒரு கூட்டமானது கழுத்தில் நகைகள் மற்றும் கைகளில் பெரிய விலையுயர்ந்த ஜாடிகளுடன் காட்சியளித்தது. மாலைச் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த பிரெஞ்சுக்காரர் ஒருவரிடம் புரட்சி எப்போது முடியும் என ஆங்கிலத்தில் வினவினேன். குறைந்தபட்சம் அதிகாலை மூன்று மணி ஆகலாம் என்று அவர் பிரெஞ்சு மொழியில் அளித்த பதிலின் பொருளை ஒருவாறாகப் புரிந்துகொண்டேன்.

புரட்சி என்று வந்துவிட்டால் புரட்சியாளர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என வர்ணிக்கும் நுட்பமான பாடல் ஒன்று ஸ்வப்னவாசவதத்தையில் உண்டு. ஸ்ரீரங்கம் கீதாசாரியார் உரையைக் கேளுங்கள் -

“தீக்குச்சி தானாகப் பற்றிக்கொள்ளாது. அதை யாராவது வந்து உரச வேண்டும். தீக்குச்சி வம்பு தும்பு வைத்துக்கொள்ளாது. அதாவது யாராவது வந்து உசுப்பும் வரையில். ஒவ்வொரு புரட்சியாளனின் மனமும் தலா ஒரு தீக்குச்சியைப் போலத்தான்.”

பிரெஞ்சுப் புரட்சி பற்றி வால்டேர் சொல்வதைக் கேளுங்கள்:

“புரட்சிக்கான தேவை பற்றி எழுத்தாளன், தத்துவ ஞானி என்ற முறையில் நிறைய பேசியாயிற்று. இனி நீங்கள் ஆச்சு, ராணி மேரி ஆச்சு என்று விட்டுவிட்டேன். இனி ரொம்பக் காலத்திற்கு எந்தப் பத்திரிகைக்கும் பத்தி எழுதப்போவதில்லை என்று தீர்மானித்துவிட்டேன். பிரெஞ்சுக்காரர்களுக்கு என் பத்தியை எதிலும் படிக்கவில்லை என்றால் உருளைக் கிழங்கு செரிக்காது.”

வால்டேரின் சமகாலச் சிந்தனையாளரான ரூஸோவின் கருத்தும் வால்டேரினுடையதுடன் கிட்டத்தட்ட ஒத்துப்போகிறது:

“அந்த்வானெத்தின் கொடுங்கோலாட்சியை ஒழிக்கப் புரட்சி அவசியம். ஆனால் புரட்சி என்பது கொடியவர்கள் கூடுமிடம் ஆகிவிடக் கூடாது.”

இத்தனைக் களேபரத்திலிருந்து தப்பித்து வந்து மாம்பலம் பாசஞ்சர் ரயிலைப் பிடிக்கும்போது காலை 5 மணி ஆகிவிட்டிருந்தது. டிக்கெட்டை வாங்கிக்கொண்டு வந்து ஒரு பெஞ்சிற்குப் புட்டத்தைக் கொடுத்தேன். உலகின் இன்னொரு மூலையில் புரட்சி நடப்பதற்கான எந்த அறிகுறியையும் காணோம். எனக்கு சுக்குக் காபி தேவைப்படுமா என ஆவலுடன் வந்து கேட்ட இளைஞனிடம் சில்லறையைக் கொடுத்து ஒன்று வாங்கிக் குடித்தேன். வால்டேரும் ரூஸோவும் தெரியாத அவனுக்கு அன்று நிச்சயம் உருளைக் கிழங்கு செரித்திருக்கும்.

இட்டுக்கட்டி எழுதிடும்…

June 23rd, 2010

இந்த கவிதைக்கு பதிலாக தனி இடுகையாக ஒரு முறை….

இட்டுக்கட்டி எழுதிடும்
எட்டுப்பட்டி இலக்கியன்
கட்டப்பட்டு உருட்டிய
லிட்டரேச்ச எழுத்தினை

நட்டகல்லு என்றிடும்
திட்டமிட்ட உள்ளுறை
பட்டவர்த்த னத்தைகை
தட்டிமெச்சும் போதிலே

அட்டதிக்கு முழுவதை
அட்டுபீசு ஆள்கையில்
தொட்டதைத் துலக்குமிக்
கட்டமைப் புடைப்பவன்

கட்டுவித்த பனுவலும்
நட்டகல்லென் றாகினால்
எட்டிநிற்கும் வாசகன்
நாதனாவ தெப்படி?

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar