நம்மை வாசிக்கும் புத்தகங்கள்

நாம் புத்தகங்களை வாசிப்பது போல புத்தகங்களும் நம்மை வாசிப்பது உங்களுக்குத் தெரியுமா? அனுபவப் பக்கங்களைத் தங்கள் அறிவிற்குள் கோர்த்துக்கொண்டு நடமாடும் புத்தகங்களாக விளங்கும் மனிதர்களை நான் பார்க்கிறேன். மனிதர்களான நாம் புத்தகங்களை வாசிப்பது போல இந்த மனிதர்கள் நம்மைப் புத்தகங்களாக வாசிக்கிறார்கள். நாம் விளிம்பிற்குத் தள்ளப்படும்போதெல்லாம் வாழ்க்கைப் புத்தகத்தில் தாங்கள் கடந்து வந்த பக்கங்களை நமக்குப் படித்துக் காட்டி நம்மை மீட்கிறார்கள்.

எனது பள்ளிப் பருவத்தில் மறக்க முடியாத அனுபவங்களை எனது பள்ளி நூலகம் எனக்குத் தந்தது. தொலைக்காட்சித் தொடர் வசதி எங்கள் கிராமத்திற்கு இன்னும் வந்தபாடில்லாத காலகட்டம் அது. பள்ளி முடிந்தபின் ஓணான் அடிக்க சக பிள்ளைகள் ஓடுகையில் என் போன்ற வெகு சிலர் பள்ளி நூலகத்தில் தஞ்சம் புகுவோம்.

நான் படிக்கும் புத்தகங்களில் தென்படும் சுவாரசியமான வாக்கியங்களை கருப்பு ஸ்கெட்ச் பேனாவால் வட்டமிட்டு அதனருகே மார்ஜினில் சிவப்பு ஸ்கெட்ச்சால் எனது கருத்துகளைப் பதிவுசெய்யும் பழக்கம் எனக்கிருந்தது. எனது முதல் நூல் மதிப்புரை இப்படித்தான் உருப்பெற்றது. சில கதைப் புத்தகங்களில் கதைகளின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லாதுபோனால் கத்தரித்த வெள்ளைத் தாளை அதன் மேல் ஒட்டி மாற்று முடிவை எழுதும் பழக்கமும் அப்போதே எனக்கிருந்தது.

இப்படி எங்களூரில் ஒரு தலைமுறைக்குப் பள்ளி நூலகமே ஒரு புத்தகமாக இருந்தது. மயிலிறகை இனப்பெருக்கம் செய்யவைக்க எந்த ஆசிரியரும் எங்களுக்குப் பயிற்சியளிக்கவில்லை. எந்த இறகுக்கு நட்ராஜ் பென்சில் சீவல் பிடிக்கும், எந்த இறகுக்கு அப்சரா ஒவ்வாமை இருந்தது என புத்தகங்களின் வாயிலாகவே நாங்கள் கற்றுக்கொண்டோம். தனது பக்கங்களை எங்களுக்குப் படிக்கக் கொடுத்த புத்தகமாகத்தான் எங்கள் பள்ளி நூலகத்தை நான் பார்க்கிறேன். நம் ஒவ்வொருவர் விஷயத்திலும் புத்தகங்கள் பல வடிவங்களில் வந்து நம் வாழ்க்கையின் ஓரங்களில் சாலைகளை அமைக்கின்றன. மரங்களை நட்டு மலர்களைப் பொழியவிடுகின்றன.

சமீபத்தில் நான் பார்த்த டாஸ்மேனிய இயக்குநர் ஜி்ம்மி வேல்ஸின் The Paid Piper of Libria என்ற சினிமாவின் முழுக் கதையை வேலை மெனக்கெட்டுச் சொல்கிறேன். லிப்ரியா என்ற ஒரு கற்பனை நாட்டில் எல்லா நூலகங்களிலும் புத்தகங்கள் நிரம்பி வழிகின்றன. அந்த தேசத்தில் மனித எண்ணிக்கையைவிட எழுத்தாளர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. வீட்டுக்கொருவரின் படைப்பு பிரசுரம் கண்டுவந்ததால் மரங்கள் நிறைய அழிக்கப்படுகின்றன. மர அழிவால் மழை பொழிவு நின்றுபோய் ஒரு கட்டத்தில் லிப்ரியா நாட்டினர் மழைக்காக அண்டை நாட்டிற்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட லிப்ரியா அமைச்சரவை ஜேம்ஸ் என்கிற ஒரு அறிமுகவாதியை ஏற்பாடு செய்கிறது.

எங்கெல்லாம் புத்தகக் குப்பை சேருகிறதோ அங்கெல்லாம் ஒரு நல்ல தொகைக்கு புத்தக அறிமுகம் எழுதி அவற்றை ஒழிப்பது ஜேம்ஸின் தொழில். லிப்ரியாவிற்கு வரும் ஜேம்ஸ் தனது ஹீரோ பேனாவினால் லிப்ரிய நூலக உள்ளடக்க அறிமுக அழிவைத் தொடங்குகிறான். லிப்ரியாவின் தார் மின்னும் தெருக்களில் நடந்தபடி ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு அறிமுகம் எழுத, நூலகங்களிலிருந்தும் புத்தகக் கடைகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும் லட்சோபலட்சம் புத்தகங்கள் கிளம்பித் தெருவில் இறங்குகின்றன. அறிமுகவாதியின் சொற்களில் கட்டுண்டு பின்தொடர்கின்றன. நடந்துகொண்டே செல்பவனுக்கு ஒரு மலையுச்சி கால்வருகிறது. ஹீரோ பேனாவை மலை விளிம்பிலிருந்து தூக்கி ஜேம்ஸ் எறிகிறான். அறிமுகித்த புத்தகங்கள் மலையிலிருந்து வீழ்ந்து அழிகின்றன. மலையுச்சியில் ஒரு பாறைக்கு அடியில் முளைத்த ஒரு நெருஞ்சிப் பூவை சட்டையில் குத்திக்கொண்டு வீடு திரும்புகிறான் ஜேம்ஸ்.

நாமும் இப்படித்தான் வீட்டுக்குப் போகிறோம். காரணம், ஒரு வேலை முடிந்தபின் அந்த வேலை நடந்த இடத்தில் நாம் இருப்பதற்கான காரணங்கள் வலுவிழந்துவிடுகின்றன. நமது மனித வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்ய வீட்டிற்கு செல்லும் வழியில் கடைக்குப் போகும் சூழ்நிலைகளும் நம்மில் பலருக்கு ஏற்படுவதுண்டு. நுகர்வுக் கலாச்சாரத்தின் தேவைகளை உந்துமையமாகக் கொண்ட ஒரு பண்பாட்டுச் சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதில் தள்ளுபடிகள் வகிக்கும் இடம் புறக்கணிக்க முடியாதது.

சில்வியா ஸ்பேட் கெய்ஷா எழுதிய Discounts and Good Deals for Seniors in Texas-ல் 380க்கு மேற்பட்ட டெக்சாசிய நகரங்களில் மனதையள்ளும் 1,200 தனித்துவ தள்ளுபடிகள் கிடைக்கின்றன. ஒரு நல்ல பேரத்தை கண்டதுமே இனங்காணும்படியாக இந்நூலை வடிவமைத்திருக்கிறார்கள். தங்குமிடங்கள், கடைத்தெரு, உணவகங்கள், கால்ஃப் மற்றும் பிற கேளிக்கை வாய்ப்புகள், மருத்துவ மற்றும் பல் மருத்துவ சேவைகள் ஆகியவை உட்பட 16 வகையான ரம்மியம் கொஞ்சும் தள்ளுபடிகள் இருக்கின்றன.

நமக்கு அறிவை அளிக்கும் ஆகச்சிறந்த கருவிகளுள் அதிக பக்கங்களைக் கொண்டிருப்பவை புத்தகங்களே. நாம் புத்தகம் படிக்கும்போது ஒரு பக்கத்திற்கு இத்தனை நியூரான்கள் வளர்சிதைமாற்றத்திற்கு உள்ளாவதாக சமீபத்திய பாங்காங் பல்கலைக்கழக ஆய்வு ஒரு கணக்கு காட்டுகிறது. பெரிய விஷயம்தான்.

டைரிக் குறிப்பாக ஒரு நூல் மதிப்புரை

- பேயோன்

கற்கால தமிழ் அந்தாதி

தமிழில் வரிவடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு சில நூற்றாண்டுகளாவது ஆகியும் தமிழில் இருமொழிப் படைப்புகள் ஏறத்தாழ இல்லை என்றே கூறிவிடலாம். ஒரு வகையில் 19ஆம் நூற்றாண்டு கிரந்தச் சுவடிகளை இருமொழி படைப்புகளாக கருதலாம். ஆனால் அவை நேரடியாக தமிழில் எழுதப்படாததான காரணத்தை கூறி இக்கருதுகோளை ஏற்க மறுப்பவர்களும் உண்டு. இந்த வெற்றிடத்தை நிரப்ப வந்திருக்கிறது க்ரியாவின் சமகாலத் தமிழ் அகராதி (க்ரியாவின் மொழியில் “தற்காலத் தமிழ் அகராதி”).

பெருமளவு மேலை இலக்கியக் கூறான அகராதி வகை இலக்கியம் அந்தாதி வகையைவிட அமைப்புரீதியான சிக்கலை கொண்டது. க்ரியாவின் இந்நூல் நான்லீனியராக இருக்கிறது. இவ்வகை வடிவ ஒழுங்கீனம் படைப்பாளிக்கு சுதந்திரத்தை அளிக்கும் அதே சமயத்தில் அடிப்படையான சில மரபார்ந்த உத்திகளை அவன் கையாள விடாமல் அந்த சுதந்திரமே அவனை முடக்கும் அபாயமும் ஏற்படுவதுண்டு. இந்தப் பிரச்சனையிலிருந்து தற்காலத் தமிழ் அகராதியும் தப்பிக்கவில்லை என்று எனக்கு தோன்றுகிறது.

அமைப்பிலா அமைப்பை உத்தியாக பயன்படுத்தி எழுதுவதன் பிரதான நோக்கங்களில் ஒன்று கோர்வையான வர்ணனையை தவிர்த்து ஊகிப்பு தன்மையை இல்லாமல் ஆக்குவது. ஆனால் தற்காலத் தமிழ் அகராதியில் பல சமயங்களில் அடுத்து வருவதை ஊகிக்க முடிகிறது. அல்பாயுசுக்கு பிறகு அல்போன்ஸோ (பக். 65) வருவது ஒருபுறமிருக்க, சீக்காய்1-ஐ (பக். 591) அடுத்து சீக்காய்2 வருவதை ஒரு சறுக்கலாகவே பார்க்கிறேன்.

இந்நூலின் பெரும்பகுதி வார்த்தைகளால் அமைந்திருப்பதால் வார்த்தைகள் ஆற்றும் பங்கையும் குறிப்பிட வேண்டும். கடந்த இருமாத காலத்தில் தமிழ் எழுத்து வெளிக்குள் ஸ்கலிதமாகத் துவங்கியுள்ள பின்கலாச்சார கதையாடலின் துவந்த மொழி இந்நூலில் ஒரு ஊர்த்துவ வேகம் கொண்டு பரவலான கிடைநிலைப்பாடு எடுத்துவருவதை காண்கிறேன்.

எடுத்துக்காட்டாக, பொதுப்புத்திக்கு உகந்த பழந்தமிழ் வார்த்தையான “அல்குல்” என்ற வார்த்தை (பக். 65). தமிழ் இலக்கண விதிப்படி “அற்குல்” என எழுதப்பட வேண்டிய இவ்வார்த்தை “அல்குல்” என்றே எழுதப்பட்டிருப்பது – அதுவும் ஒரு அகராதி வகை நூலில் – ஆசிரியரின் நோக்கத்தை சந்தேகிக்க வைக்கிறது. இந்த வார்த்தையின் சுற்றுப்புறத்தில் உள்ள வார்த்தைகள் எவை? “அல்” (ஒரு கூற்றை அல்லது நிலையை மறுத்தல், பக். 64), “அல்பம்” (பக். 65), “அல்லல்” (பக். 65), “அல்லல்படு” (பக். 65). எழுத்துப்பட அமைப்பு (டைப்போகிரபி) உத்தியில் எழுதப்பட்டுள்ள இப்பகுதி சற்றே பிற்போக்கான ஒரு செய்தியை தன்னுள் கொண்டிருப்பதாக எண்ணச் செய்தாலும் அது ஆசிரியரின் கூற்றா கதாபாத்திரத்தின் கூற்றா என்று தெளிவாக தெரியாதிருப்பது ஆசிரியரின் உத்திக்கு அல்லது உள்நோக்கத்திற்குக் கிடைத்த வெற்றி எனலாம்.

இந்நூலில் ஆபாச வார்த்தைகள் அதிர்ச்சி மதிப்புக்காக பயன்படுத்தப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. எ.கா., இலந்தை(ப்பழம்) (பக். 156), ஒளி (பக். 297), ஒன்றுபடு (பக். 300), சிட்டுக்குருவி (பக். 573), லேகியம் (பக். 1188) போன்றவை. அதிர்ச்சி மதிப்பு பின்நவீனத்துவத்தின் கூறுகளிலேயே மிகவும் உபயோகமானது, போணி சார்ந்தது என்கிற போதிலும் இவ்வார்த்தைகள் நூலின் எஞ்சிய பகுதிகளுடன் ஒட்டாமல் மணல் திட்டுகளாக துருத்திக்கொண்டு நிற்கின்றன.

பாலியல் சொல்லாடல் ஒரு முனையில் உள்ளதென்றால் இன்னொரு முனையில் இருப்பது வன்மொழிபு. இதில் க்ரியாவின் சாமர்த்தியம் வன்முறை தெறிக்கும் வார்த்தைகளில் ஒருவித பொருள் தெளிவின்மையை (ambiguity) ஏற்றி அவற்றின் தாக்கத்தை நீர்த்துப் போக செய்வது. எடுத்துக்காட்டாக, “இழுத்துக்கொண்டு போ” (பக். 160) மற்றும் “இழுத்துப் பறி” (அதே பக்.) என்கிற வார்த்தைகள்:- முறையே எதை மற்றும் யாரை? “குல்லாப்போடு” (பக். 467) போன்ற நேரடி போதனைகள் அல்லது அறைகூவல்களும் இல்லாதில்லை. இருப்பினும் முந்தைய 466 பக்கங்களில் இந்த வன்முறையை நாம் பல முறை எதிர்கொண்டுவிடுவதால் 466ம் பக்கத்திற்கு பிந்தைய இத்தகைய வார்த்தைகள் அதிர்ச்சி மதிப்பு கூட்டத் தவறுகின்றன.

கதையின் முதல் வரியில் அறிமுகமாகும் அ-வைச் சுற்றியே அனைத்தும் பின்னப்பட்டுள்ளது. ஒரு தனிப்பேச்சாக (monologue) துவங்கி மெல்ல மெல்ல பரிணமித்து மேலும் பரவலான ஒரு கதைப்பரப்பாக விரியும் இந்த நாவலை bildungsroman வகை புனைவாக பார்க்கிறேன். பிரெஞ்சை சேர்ந்த ஸ்டெந்தாலின் ‘சிவப்பும் கருப்பும்’ (The Red and the Black), அதே இதுவைச் சேர்ந்த குஸ்தாவ் பிளாபெர்ட்டின் ‘மேடம் பவாரி’ (Madame Bovary), ஆங்கிலத்தை சேர்ந்த மார்க் டுவைனின் ‘டாம் சாயர்’ (Tom Sawyer) ஆகியவை பில்டங்ஸ்ரோமன் வகை புனைவுக்கு எடுத்துக்காட்டுகள். முதல் சில பக்கங்களை பெருமளவு ஆக்கிரமிக்கும் அ-வின் ஆக்கிரமிப்பு நம் இடது கையில் பக்கங்கள் சேரச் சேர குறைவடைந்து பிற கதைமாந்தர்களும் உறவுகளும் ஊடாட்டங்களும் இடங்களும் என பெரிதாகி புனைவின் வெளி விசாலிக்கிறது.

க்ரியாவின் படைப்பு பல சமகால பின்நவீன படைப்புகளை நினைவுகூற வைக்கும் அதே வேளையில் அவ்வாறு நினைவுகூறிய பின்னும் தனது தனித்துவ மொழிதலின் பலத்தால் வாசக வெளியின் முற்றத்தில் இருகால் பதித்து குந்துகிறது. இங்கு க்ரியாவின் வட்டார மொழி புலமையை பற்றி சொல்லியே ஆக வேண்டும். தமிழக வட்டார மொழிகள் மட்டுமல்லாது இலங்கை வட்டார மொழியிலும் நம்முடன் பேசுகிறார்கள் கதை மாந்தர்கள். 1328 பக்கங்கள் புரளும் இந்நூலில் இதன் விலையான 495 ரூபாய் அளவிற்கு கதை இருப்பதாக கூறிவிட முடியாது. இருந்தாலும் முடிக்கும்போது ஒரு காத்திரமான படைப்பை படித்த திருப்தி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அடுத்த பதிப்பிற்கு ‘தற்கால’ தமிழ் அகராதியை க்ரியா மேலும் மெருகேற்றி எழுதுவார் என வாழ்த்துக்களுடன் எதிர்பார்க்கிறேன்.