பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேனா

February 8th, 2012

 

சட்டைப்பையில் பேனா இல்லாமல் நான் வெளியே போவதில்லை. திடீரென யாராவது ‘வாசகர்’ – ரசிகர் – எதிரில் வந்து புத்தகத்திலோ துண்டுச் சீட்டிலோ ஆட்டோகிராப் கேட்டால் புன்னகையுடன் கையொப்பமிட்டுத் தர பேனா இருக்காமல் போவது எழுத்தாளனுக்கு அசிங்கம். செய்கிற வேலையெல்லாம் கணிப்பொறி விசைப்பலகையில்தான். இருந்தாலும் எழுத்துத் தொழிலுக்குப் பேனா ஒரு மகத்தான குறியீடு என்பதால் அதை நினைவுச் சின்னமாக வைத்திருக்கிறேன். காசோலையில் கையெழுத்துப் போடவும் பேனா இன்றியமையாதது.

பிறகு நான் வெளியே கிளம்பலானேன். என் மேஜை மேல் ஓர் அழகிய மர பென் ஸ்டாண்டு இருக்கிறது. தன்னைக் கொண்டு உருவாக்கப்படும் எதையும் அழகாக்கிவிடுவது மரத்தின் இயல்பு. அதில் சாய்ந்து நின்று தூங்கிக்கொண்டிருந்தது எனது பேனா. என் வலதுபக்கக் கை, எதிர்பார்ப்புடன் நீட்டப்பட்ட விரல்களுடன் பேனாவை நெருங்கியது. அப்போது திடீரென ஓர் இடைஞ்சல் – மகன். பேனாவை நோக்கிப் புறப்பட்ட கை ஒரு கணம் உறைந்து, தளர்ந்து பின்வாங்கியது.

“அப்பா, என்னுடைய பென்சில் டப்பாவைப் பார்த்தாயா?”

என்னுள் கோபம் பிரவகித்தது. ஒருவருடைய பென்சில் டப்பாவைத் தொலைப்பது ஒரு வேண்டாத தினசரிச் சடங்கு.

“அதை நான் ஏன் பார்க்க வேண்டும்? அதைப் பத்திரமாக வைத்துக்கொள்வது உன் பொறுப்புதானே?” – இது நான்.

“கிடைத்துவிட்டது.”

“எங்கே இருந்தது?”

“பள்ளிக்கூடப் பையிலேயே இருந்தது.”

கடைசியில் இன்றைய அன்றாடப் பிரச்சினைக்கு இப்படியொரு ஜென்-தனமான முடிவு.

என் வலதுகை, விட்ட இடத்திலிருந்து பேனாவின் திசையில் தொடர்ந்தது. விண்ணென்று பாதத்தில் வலி. “அம்மா!” என அப்படியே பாதிக்கப்பட்ட காலைப் பிடித்துக்கொண்டு சில்லிடும் பிப்ரவரி மாத மொசைக் தரையில் உட்கார்ந்துவிட்டேன். ஒரு கூரிய முனை காலில் குத்திட்டு நின்றிருந்தது. மிகச் சிறிய முனை. முந்தைய தினம் வெறுங்கைகளால் பாதியாக உடைத்துப்போட்ட இயங்காத டிவிடிதான் ஒரு சிறிய கூர்துண்டாக என் வாழ்க்கையில் மறுபிரவேசம் செய்திருக்கிறது. அது குத்திய இடத்திலிருந்து ஒரு துளி ரத்தம் பெருகி வந்தது. வலி ஒரு சின்னஞ்சிறு நாய்க்குட்டியாய் அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. நான் சுதாரிப்பதற்குள் முதல் துளி ரத்தம் என் வலதுகைக் கட்டைவிரல் ரேகையில் ஈஷியது. நான் அதைத் தரையில் துடைத்துவிட்டு மீண்டும் கட்டைவிரலைப் பார்த்தேன். ரத்த அபிஷேகத்தைக் கட்டைவிரல் கிட்டத்தட்ட மறந்துவிட்டிருந்தது அல்லது மறப்பதற்குத் தீவிரமாக விரும்பியதாய்க் காட்டிக்கொண்டது.

அந்தக் கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே டிவிடி துண்டை இறுக்கமான ‘சாண்ட்விச்’ ஆக்கிக் குப்பைத் தொட்டியிடம் எடுத்துச் சென்றேன். எங்கள் வீட்டுக் குப்பைத் தொட்டி, வருவோர் பார்வையில் படாமல் சமையலறையின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருக்கும். அதனுடைய திறந்த வட்ட வாய்க்கு நேர் மேலே கட்டைவிரல்-ஆள்காட்டி விரல் சேர்க்கையை வைத்துக்கொண்டு விரல்களைப் பிரித்தேன். டிவிடி துண்டு இரவின் இருளில் ஓசையின்றி உதிரும் பனி போல் சத்தமில்லாமல் சமையல் குப்பையில் விழுந்து மறைந்தது. விரல்களைப் பார்த்தேன். இறுகப் பிடித்திருந்த டிவிடி துண்டு அவற்றில் ஒரு மணல் துகளைக் கிடத்தும் அளவிற்குப் பள்ளத்தை ஏற்படுத்தியிருந்தது. அருகில் சென்று உற்றுப் பார்த்தால் சிறு நிழலும் தெரியக்கூடும்.

பார்வை கணப்பொழுதில் மேஜைக்குத் தாவியது. அழுத்தினால் ரீஃபிலை நீட்டிக்கொடுக்கும் தலையை மின்னிக்கொண்டு அமர்ந்திருந்தது பென் ஸ்டாண்டில் பேனா. அதை நான் பாதி எடுப்பதற்குள் என்னென்னவோ நடந்துவிட்டது. ஆனால் ஒரு “Still Life” ஓவியம் போல் சலனமின்றி இருந்தது பென் ஸ்டாண்டு. சமீபத்திய நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்த பின்னும் ஒரு ஞானியின் மௌனத்தைக் கடைபிடித்து வாழ்வியல் சம்பவங்களை எதிர்கொள்ளும் அணுகுமுறையின் கலையை நாம் ஜடப்பொருட்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஏதோ ஞாபகத்தை மீறி இடதுகையால் வாஷ்பேசின் குழாயைத் திறந்திருந்தேன் – சரியாகவே. ரத்தம் பட்ட கையோ வலது. ஒன்றையொன்று கட்டிப் புரண்டுகொண்டிருந்த வலதுகை விரல்களின் (இனி ‘விரல்கள்’) மேல் குழாய் தவற முடியாத கடமையாய் ஆவேசமாக நீரைப் பாய்ச்சிக்கொண்டிருக்கையில் இடதுகை தானாக டெட்டால் சோப்புக் கூழ் டப்பியை எடுத்து வலதுகைக்கு மேலே வைத்து அதன் தலையை அமுக்கியது. தன்னுடைய வலையின் இழையைப் பின்னிக்கொண்டே தொங்கி இறங்கும் சிலந்தி போல், ஆனால் தயங்கித் தயங்கி, கெட்டியாக இறங்கியது சோப்புக் கூழ். பின்னர் சட்டென ஒரு முடிவுக்கு வந்தது போல் தயக்கத்தை உதறி விரல்களின் மேல் விழுந்தது. ஏற்கனவே கட்டிப் புரள்வதில் மும்முரமாயிருந்த விரல்கள் சோப்புக் கூழ் பட்டதில் மேலும் உற்சாகமடைந்தது போல் தெரிந்தது. கைகள் சுத்தமாயின.

இரு கைகளிலிருந்தும் புது ஈரம் சொட்டச் சொட்ட கைகளின் துயர் துடைக்கத் துண்டு தேடினேன். வெண்ணிற பூத்துவாலை தனக்குத் சம்பந்தமில்லாத ஒன்று நிகழ்ந்துகொண்டிருப்பது போல் கொடியிலிருந்து வேடிக்கை பார்த்தபடி இருந்தது. முழு ஈரத்தையும் துவாலையின் மீது சுமத்த மனமின்றிக் கைகளை உதறியவாறு அதை நெருங்கினேன். இடதுகை துவாலையைக் கொடியில் வைத்தே ஏந்திக்கொள்ள, வலதுகை அது ஏற்படுத்திய குழிவில் புரண்டு புரண்டு ஒற்றிக்கொண்டது. அடுத்து இடதுகை.

துடைத்த கைகளின் எஞ்சிய நுனி ஈரத்தை பேண்ட்டின் தொடைப் பகுதியில் வருடி இடமாற்றிய பின் எனது சற்றைக்கு முந்தைய இலக்கை அணுகினேன். ஈரம் முழுவதுமாய் விடைபெற்று அதன் குளிர்ச்சி மட்டுமே மீதமிருந்த வலதுகையை பென் ஸ்டாண்டில் இருந்த பேனாவை நோக்கிச் செலுத்தினேன். பேனாவை எடுக்கவும் செய்தேன். அது என் சட்டைப்பையை அடைய சுமார் ஒன்றேகால் அடி தொலைவே இருக்கையில் ஒரு திடுக்கிடுத்தும் குரல். பரிச்சயப் பெண் குரல். மனைவியின் தவிர்க்கவியலாத குரல். எனக்குத் தொலைபேசியாம். கிட்டத்தட்ட விரக்தியானது என்றே சொல்லிவிடப்படத்தக்க ஒரு புன்னகையுடன் பேனாவை மேஜை மீது வைத்துவிட்டு அகன்றேன். பேனா மீண்டும் சலனமின்றிக் கிடந்தது. ஆனால் இம்முறை பென் ஸ்டாண்டிலன்றி நேரடியாக மேஜை மேல். நடந்த சம்பவங்களால் பேனாவை பென் ஸ்டாண்டில் வைப்பதில் நான் நம்பிக்கை இழந்துவிட்டிருந்தது போல் தெரிந்தது.

“?”

“…”

“…”

“?”

“…”

“…”

“…”

அழைப்பு முடிந்து பக்கத்து அறையிலிருந்து வெளியே சென்று மேஜைக்குத் திரும்பி வந்தேன். சிறிது நேரம் பேனாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு பேனாவை எடுத்து சட்டைப்பையில் வைத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளிக்கிட்டுத் தெருவின் நிஜத்தில் கலந்தேன்.

ஜென் கதைகள் மூன்று

January 19th, 2012

முன்குறிப்பு: ஜென் கதைகள் என்று இணையத்தில் தேடி இந்த வலைத்தளத்திற்கு வருபவர்களுக்கு: இங்குள்ள ஜென் கதைகள் நானே சொந்தமாக எழுதியவை. எனவே அவற்றை அனுமதியின்றி சொற்பொழிவுகளில் பயன்படுத்துவதோ ஜென் கதைத் தொகுப்புகளில் சேர்ப்பதோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நிரப்புதல்

துறவி ரியோகான் ஒரு மலை உச்சியிலிருந்து சிறு கற்களை ஒவ்வொன்றாக எறிந்துகொண்டிருந்தார். அவரை சாப்பிட அழைக்க வந்த இளம் சீடன், “என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் குருவே?” என்று கேட்டான். “இந்தப் பெரும்பள்ளத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறேன்” என்றார் ரியோகான். “உங்களுக்கென்ன பைத்தியமா? இது சாத்தியமா?” என்றான் சீடன். அதற்கு ரியோகான், “அதை நீ பள்ளத்திடம் அல்லவா கேட்க வேண்டும்?” என்றார்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் நாமே செய்வதாக நம்புவது முட்டாள்தனம்.

ஊற்றுதல்

மெய்ஜி காலத்து ஜென் குருவான தனகவாவைப் பார்க்க ஒரு பல்கலைக்கழகப் பேராசியர் வந்தார். ஜென் பற்றிய முழுமையான விளக்கத்தை அளிக்கும்படி தனகவாவிடம் பேராசிரியர் கேட்டுக்கொண்டார்.

தனகவா பேராசிரியருக்காக ஒரு தேனீர்க் கோப்பையை எடுத்துவைத்து அதில் தேனீரை ஊற்றினார். கோப்பை நிரம்பியது. ஆனால் தனகவா நிறுத்தாமல் ஊற்றிக்கொண்டிருந்தார். பேராசிரியர் திகைத்துப் போய் பார்த்துக்கொண்டிருந்தார். தனகவா இன்னொரு குடுவையில் மேலும் தேனீர் வரவழைத்து தொடர்ந்து அதே கோப்பையில் நிரம்பி வழிய ஊற்றினார். பேராசிரியர் பொறுமையிழந்து, “அதுதான் நிரம்பிவிட்டதே. பிறகு ஏன் விடாமல் ஊற்றுகிறீர்கள்?” என்று கேட்டார்.

“வாழ்வில் அபத்தங்களுக்கு முடிவே கிடையாது” என்றார் தனகவா.

சுமத்தல்

ஒரு மூத்த துறவியும் இளம் துறவியும் மடாலயத்திற்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். மழை பெய்து சாலைகளில் குட்டைகளை உருவாகியிருந்தன. ஓர் இடத்தில் ஓர் அழகிய இளம்பெண் ஒரு குட்டையைத் தாண்டிச் செல்ல முடியாமல் நின்றிருந்தாள். மூத்த துறவி அவளிடம் சென்று அவளைத் தூக்கிக்கொண்டு சாலையின் மறு பக்கத்தில் இறக்கிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தார்.

“துறவிகளான நாம் ஒரு பெண்ணைத் தொடலாமா?” என்று இளம் துறவி மூத்த துறவியிடம் கேட்டார். “இது தெரிந்தே கேட்கிற கேள்வி மாதிரி இருக்கிறதே” என்றார் மூத்த துறவி.

அறிந்ததைக் கடந்து புதியதை அறி என்று ஜென் கூறுகிறது.

இன்றைய பொழுது

January 16th, 2012

காலையிலிருந்து ஜன்னலோர மேஜை மேல் ஒரு அன்ரூல்டு நோட்டுப் புத்தகம் கிடந்தது. ஸ்டேஷ்னரி கடையில் எட்டு ரூபாய் வீசியெறிந்தால் கிடைக்கும் 192 பக்க நோட்டுப் புத்தகம் அது. அங்குமிங்கும் நகராமல் அசையாமல் அதனுலகத்தில் ஆழ்ந்து கிடந்தது அந்த நோட்டுப் புத்தகம். நாள்பட்ட மனிதப் பயன்பாட்டின் அடையாளமாகச் சில தாள்கள் தனித்தனியாகவும் சக தாள்களோடும் லேசாக உடலை வெளியே நீட்டிக்கொண்டிருந்தன. வரிசையை மீறித் தெரிந்த தாள்களின் விளிம்பில் பால் பாயின்ட் பேனாவின் எல்லை மீறல்கள். மேற்பகுதியில் பைண்டிங் உரிந்து மெல்லிய நூல்நுனிகள் வெளிப்படத் தொடங்கியிருந்தன. நிறம் மங்கிக் கீறல் விழுந்த பூக்களைச் சுமந்த அட்டையின் இரு வெளிமுனைகள் மடங்கியிருந்தன. ஜன்னல் வழியாக வந்திருந்த வெயில் சூரியகாந்திகளை சூடாக்கிக்கொண்டிருந்தது. அந்த இடத்தையே தூசு சாம்ராஜ்யமாகக் காட்டியது புகுவெயில்.

அருகிலிருந்த பேப்பர் வெயிட்டிடம் மணி 12.30 என்றது குமாரின் கைக்கடிகாரம். குமார் மணிக்கட்டை உயர்த்திப் பார்த்து அதைத் தெரிந்துகொண்டான். ஒரு மணிப் பேருந்திற்கு இப்போது கிளம்பினால் சரியாக இருக்கும். – என்று நினைத்தானே தவிரக் கிளம்பவே வரவில்லை அவனுக்கு மனம். இந்த நோட்டுப் புத்தகம், பேப்பர் வெயிட், பால்பாயின்ட் பேனா ஆகிய இத்யாதிகளோடு இத்யாதியாய் நாமும் இருந்துவிட்டால் எத்தனை சுமைகள் மிச்சம் என்று பெருமூச்சு விட்டான். வெயிலும் நிழலும் மாறிமாறிப் படிந்த காலித் தெருக்களின் மதிய மந்தம் அவன் ஏறப்போகும் பேருந்தில் பிரதிபலிக்காது. கூட்டம் நெருக்கித் தள்ளும். சொந்த முயற்சியால் இம்மிகூட அசைய முடியாத நிலையில் ஒரு மணிநேர கடும் உடற்பயிற்சி பெறும் அனுபவத்தை பேருந்து அவனுக்குத் தந்துவிடும். அந்தப் பேருந்தில் ஒரு வாழ்க்கையையே வாழ்ந்து முடித்துவிட்டு தன் நிறுத்தத்தில் தன்னை உமிழ்ந்துகொண்ட பின் இருக்கிறது அலுவலகத்தில் பணிபுரி படலம்.

பேப்பர் வெயிட்டிற்குள் ஒரு கடலும் அதில் ஒரு பனி மலையும் இருந்தன. மலையின் அடிவாரத்தில் இருந்த கரையில் ஐந்து பெங்குவின்களும் ஒரு நீர் நாயும் குழுமியிருந்தன. அவை என்ன பேசினாலும் சத்தம் கண்ணாடியைத் தாண்டி வெளியே வரப்போவதில்லை. அலுவலகத்திற்கு போன் போட்டு உடல்நிலை சரியில்லை, இன்று வரவில்லை என்று சொல்லத் தோன்றியது குமாருக்கு. எந்த ஒரு பொய்மையையும் அவன் குரலை வைத்தே மேலாளர் கண்டுபிடித்துவிடக்கூடியவர். போதாக்குறைக்கு பியூன் யாரையாவதும் அனுப்புவார். இன்றைக்கு என்னென்ன வேலை? இன்றைக்குச் செய்ய வேண்டிய வேலை ஒன்று இருந்தது. அதை இன்றைக்குச் செய்யாமல் விட்டால் உலகம் அழிந்துவிடாது. அழிவதாக இருந்தால் இளவரசி பெண் பார்ப்பு விழாவிற்கு திடீர் விடுமுறை போட்டபோதே அழிந்திருக்க வேண்டும். அற்ப விஷயங்களுக்காக அழிந்து என்ன பயன்?

தன் அளவைவிடப் பெரிதான பூட்ஸை ஒற்றைக் காலில் அணிந்துகொண்டு நீந்தப் பார்க்கும் வாஷ்பேசின் போலக் கதவருகில் காரை பெயர்ந்திருந்தது. மனிதன் உருவாக்கிய தற்செயல் மேகம் போலப் பல வாரங்களாக வடிவம் மாறாமலே இருந்தது காரை. இந்தத் தொலைவிலிருந்து பார்க்கக் கறுப்பா சிவப்பா என்று தெரியாத ஒரு எறும்பு, காரைப் பிரதேசத்தை கவனமாகத் தவிர்த்து மொத்தப் பரப்பையும் சுற்றிவளைத்துச் சென்றுகொண்டிருந்தது. நேர்ப் பாதையில் செல்லத் தேவையில்லாத அளவிற்கு அவசரம் இல்லை போல; அவசரம் எல்லாம் நமக்குத்தான் போல என்று விரக்தியுடன் நினைத்துக்கொண்டான் குமார்.

அவனுக்கு ஒன்று புரியவேயில்லை. ஒரு விலங்கு என்ற முறையில் உயிர் பிழைத்திருப்பதுதானே மனிதனின் வேலை? காட்டில் வேட்டையாடி உண்டபோது அவன் நன்றாகத்தானே இருந்தான்? நாகரிகம் மனித வாழ்க்கைக்கு அப்படி என்ன மதிப்புக் கூட்டலைச் செய்துவிட்டது? சக்கரத்தையும் நெருப்பையும் கண்டுபிடித்தது போதாதா? எதற்காக இத்தனை கட்டிடங்கள், வாகனங்கள், இயந்திரங்கள், கோடானுகோடி சிக்கல்கள்? மனித அறிவின் உன்னதம் என்று சொல்லிக்கொண்டு ஒரு ராட்சத அபத்தத் தொழிற்சாலையை முடுக்கிவிட்டுவிட்டோம். விளைவு? மற்ற விலங்குகள் மனிதனை நம்பிச் சிக்கலில்லாது வாழ்க்கை நடத்துகின்றன. நாம்தான் ஆறறிவு என்ற பெயரில் அறிவுக்கொன்றாக அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறோம். வேலியில் போகிற ஓணான் நமக்குள்தான் உறங்கிக்கொண்டிருந்திருக்கிறது. நல்ல கூத்து இந்த அறிவு.

குமாருக்கு சக ஊழியர்கள் அனைவரும் மரவுரி தரித்துத் தன்னுடன் காட்டில் வேட்டையாடிக்கொண்டிருப்பது போன்ற காட்சி மனதில் தோன்றியது. சுடிதாரிலேயே சுண்டியிழுக்கும் இளவரசி மரவுரியில் கிறங்கடித்தாள். மற்றவர்களின் மும்முரம் கூர்தீட்டிய கம்பைக் கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு கரடியைப் பின்தொடர்வதிலேயே இருந்தது. வழக்கமாக ஏதாவதொரு சாக்கு வைத்துக்கொண்டு அவளுடன் பேச்சு வளர்த்தும் சுகுமாரே காலடிச் சத்தம் எழுப்பக்கூடாததில் உறுதியாக இருந்தான். இளவரசி அதே கோலத்தில் முன்னேறிச் சென்றாள், ஆனால் குமாரின் கவனமெல்லாம் அவள் மேல்தான் இருந்தது. அவன் அவளை வெவ்வேறு உடைகளில் கற்பனை செய்து பார்த்திருக்கிறான் என்றாலும் மரவுரி அவனுக்குப் புதிது. குமார், இளவரசி, சுகுமார், – இல்லை, இளவரசி, குமார், சுகுமார், – லிங்கேசன் சார், வேலு சார் எல்லோருமாகச் சேர்ந்து கரடியை அடித்தாயிற்று. அதை நெருப்பில் வாட்டி சாப்பிட்டுப் பசியும் ஆறியாயிற்று. அடுத்து என்ன? சுகுமார் இளவரசியை அணுகுகிறான். இளவரசி உறுமிச் சபித்து அவனை விரட்டுகிறாள். லிங்கேசன் சாரும் வேலு சாரும் நிஜத்தில் தமது வயது காரணமாகக் கல்பனாவைப் பொருட்படுத்தாதவர்கள். ஆனால் ஒரு அழகிய இளம்பெண் மரவுரியில் இருந்தால் எந்த நடுத்தர வயது ஆண்களுக்குத்தான் சபலம் ஏற்படாது? திருமணம் நிச்சயமாகிவிட்ட பாதுகாப்பு, கற்காலத்தில் செல்லாது. வேட்டையாடி வேட்டையாடி உடல் இந்த இருவருக்கும் கல்லாகியிருந்தது. ஒரே சமயத்தில் இருவரையும் கையாள்வது கடினம்… குமாருக்கு இந்தச் சிந்தனையோட்டம் கசப்பூட்டியது. அநாவசிய நினைவுகளைக் கிளறியது. இன்றைக்கு அலுவலகத்திற்குப் போகாமல் இருக்க இன்னொரு அரூபக் காரணம் கிடைத்தாற்போல் ஆனது.

ஜன்னல் சட்டத்து ஆணியில் மாட்டியிருந்த சைக்கிள் சாவி எந்த உணர்ச்சியுமின்றி குமாரை வெறித்தது. கடலில் ஊறும் பனி மலையை மேஜை மேல் வைத்து உருட்டத் தொடங்கினான் குமார். ஒரு பெங்குவினின் மண்டையிலிருந்து ஆகாயம் வரை விரிசல் விரிந்திருந்ததை அப்போதுதான் கவனித்து எரிச்சலடைந்தான். இது எப்போது? விடுமுறை கிடைக்காத சாத்தியங்கள் சட்டெனக் குறைந்துவிட்டது போலிருந்தது… ஏதோ திடீர் வாசனை. மண். பலமாகத் தூறிக்கொண்டிருந்தது. வானமும் அதனால் அறையும் இருண்டிருந்ததை அவன் கவனித்திருக்கவில்லை. வேலைக்குச் செல்ல விடாத சோம்பல் வெறுப்பு, மழையால் வலுத்தது. நாட்களை எண்ணினான் குமார். ஞாயிறு வருவதற்கு இன்னும் இரு நாட்கள். தன் மொத்த வாழ்க்கையுமே ஞாயிறுகளை நோக்கிய தளர்ந்த நடையாக அவனுக்குத் தோன்றியது. ஒருவேளை இளவரசிக்குத் திருமணம் நிச்சயமாகாமல் இருந்திருந்தால் அலுவலகம் இவ்வளவு கசக்காதோ என்று கேட்டுக்கொண்டு உடனே அந்தக் கேள்வியை நிராகரித்தான். இளவரசியுடனான உறவு, வேலையுடன் இருந்த உறவு போல் தொடக்கத்திலேயே சபிக்கப்பட்டிருந்தது. நாம் இப்போது எதிர்கொண்டுவருவது வாழ்க்கை. வாழ்க்கையிலிருந்து யாரையும் யாராலும் காப்பாற்ற முடியாது. சக அறைவாசிகளைப் பொறாமைப்படவைத்த பிச்சை சம்பளத்தையும் தாண்டி வேலை இருப்பதும் ஒன்று, இல்லாததும் ஒன்று என்னும் தத்துவ மனப்பான்மைக்குத் தட்டுத் தடுமாறி வந்து சேர்ந்துவிட்டதாக நினைத்துக்கொண்டான் குமார்.

“பழைய பேப்பர், இரும்பு சாமான்!”

அமைதிக்குள் தலையை நுழைத்த கூக்குரலைக் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தான் குமார். இருட்டியது இருட்டியதாகவே இருந்தது. ஆனால் தூறல் நின்றுவிட்டிருந்தது. தெருவில் தனியாக வாடிக்கை வியாபாரி பாலிதீன் உறையைத் தலையில் கவிழ்த்துக்கொண்டு தள்ளுவண்டியை சாவகாசமாகத் தள்ளிச் சென்றுகொண்டிருந்தான். மழை நனைத்த தரையில் தள்ளுவண்டி இரும்புகள் தடதடக்க நகர்ந்தது. வியாபாரி வண்டியைத் தள்ளுவதைவிட அதன் கரங்களைத் தட்டாமாலை சுற்ற விரும்பியது போல் பிடித்துக்கொண்டு பின்தொடர்வது போலிருந்தது. பண்டங்களைக் கூவியபடி எந்தப் புறமும் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தான் வியாபாரி, தெருக் கோடி மரத்தில் வண்டியும் தானுமாய்க் கரையும் வரை.

வரும் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்

November 23rd, 2011

வரும் ஆண்டின் சென்னை புத்தகக் கண்காட்சியில் 124 புத்தகங்கள் என்னுடையவை வெளிவருவனவாகத் திட்டமிருந்தது. பல சிக்கல்களால், இடைப்பட்ட பயணங்களால் 106 புத்தகங்கள்தான் எழுத முடிந்தது. இருந்தாலும் வட்டமாக நூற்றியெட்டு புத்தகங்கள் எழுதிக் கொடுங்கள் என்று பதிப்பாளர் கேட்கவே, சட்டென ஒரு கவிதைத் தொகுப்பும் கட்டுரைத் தொகுப்பும் கொடுத்தேன். நல்ல வேளையாக அவர் கேட்டது ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்றைக்கு. பிரதி ஞாயிறு நான் என் மகனுக்கு ஹோம்வோர்க் செய்து தருவேன். அந்த நேரத்தில் அவன் எனக்குச் சில கவிதைகளோ கட்டுரைகளோ எழுதித் தருவான். ஒரு புத்தகத்தை அவனை எழுத விட்டாயிற்று.

பதிப்பகத்தினர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய எனது நூல்களின் பட்டியலை அப்படியே கீழே தருகிறேன். நான் தொடாத விசயங்களே அவ்வளவாக இல்லை என்றுவிடலாம். இந்த 108 புத்தகங்களுக்காக இரண்டு ஸ்டால்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்டால்களில் கூட்டத்தை நிர்வகிக்க பாப்பாசி பத்து என்.சி.சி. மாணவர்களை நியமித்துள்ளது.

வரும் ஆண்டின் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளிவரவிருக்கும் என்னுடைய நூல்கள்:-

1. ஒரு லோட்டா ரத்தம் (நாவல்)
2. தேர்ந்தெடுத்த கவிதைகள் (கட்டுரைகள்)
3. பேபல் இவ்வாறு பேசுகிறான் (கட்டுரைகள்)
4. உற்பத்தி (பத்தி தொகுப்பு)
5. உருவகக் கதைகள் (சிறுகதைகள்)
6. தாங்களும் யானும் (நேர்காணல்கள்)
7. அன்புள்ள கடிதங்களே (கடிதங்கள்)
8. பூபாளம் பாடும் பல்லவி (இசை பற்றிய கட்டுரைகள்)
9. பேயோன் 2000 (ட்விட்டர் நுண்பதிவுகள்)
10. என் வாழ்க்கை (நாவல்)
11. இழவு (நாவல்)
12. படலம் (நாவல்)
13. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (நாவல்)
14. பூனை கோர்த்த மாலை (கட்டுரைகள்)
15. நிமித்தங்களின் நதியில் (நெகிழுரைகள்)
16. உரையுடைமை (செய்யுள் உரைத் தொகுப்பு)
17. ஒரு பேனாவின் காமிரா (திரைக்கதைத் தொகுப்பு)
18. பேயோனின் குற்றமும் தண்டனையும் (மொழியாக்க நாவல்)
19. நான்காம் சுழி (சிறுகதைகள்)
20. விண்ணை எட்டும் தூரிகை (ஓவியம் பற்றிய கட்டுரைகள்)
21. நீங்களும் எழுதலாம் PHP (சுயஉதவி நூல்)
22. அ முதல் னௌ வரை (தமிழ் எழுத்துகள் தொகுப்பு)
23. சுயநானூறு (செய்யுள் தொகுப்பு)
24. நிறைய பக்கங்கள் (கட்டுரைத் தொகுப்பு)
25. எவன் எவனோ (வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள்)
26. தாம்பரம் முதல் திருவான்மியூர் வரை (பயண நூல்)
27. மீள்பாரதி (பாரதி ஆய்வு நூல்)
28. வடகிழக்கு சினிமா (கட்டுரைகள்)
29. நூன்முகம் (ஃபேஸ்புக் இடுகை தொகுப்பு)
30. அன்னிய தரிசனம் (சிறுகதைகள்)
31. ஆறு கவிதைகள் (கவிதைகள்)
32. காதல் கவிதைகள் முழுத் தொகுப்பு
33. தகவல் பிழை (பத்தி தொகுப்பு)
34. ஐரோப்பியச் சிறுகதைகள் (சிறுகதைகள்)
35. வறுமைக் கோடு (கோட்டோவியத் தொகுப்பு)
36. எதெல்லாம் இலக்கியம்? (கட்டுரைகள்)
37. வண்ணக் கலரி (ஓவியத் தொகுப்பு)
38. ஊராந்திரம் (பயண நூல்)
39. ஜப்பான் முன்னேறியது எப்படி? (அபுனைவு)
40. சங்க இலக்கியத்தில் இலக்கியச் சங்கங்கள் (ஆய்வு நூல்)
41. இப்படி திடீரென்று நாளை காலைக்குள் இன்னொரு புத்தகம் எழுதச் சொன்னால் எப்படி? (கட்டுரைகள்)
42. கதகதக்கும் உலகம் (சுற்றுச்சூழல் கட்டுரைகள்)
43. ஜெர்மானிய பதின்பருவத்தினர் மத்தியில் சூயிங்கம் பயன்பாடு (ஆய்வு நூல்)
44. இன்னும் எத்தனை (கவிதைகள்)
45. கையால் எழுதுபவன் (உலக இலக்கிய கட்டுரைகள்)
46. 130 கிராம் (சிறுகதைகள்)
47. இலக்கண இம்சைகள் (கட்டுரைகள்)
48. இன்னும் வரும் (பத்தி தொகுப்பு)
49. பண்பாட்டின் அறிகுறிகள் (பயண நூல்)
50. வராக பர்வம் (நாவல்)
51. இம்ப்ரஷனிசம் முதல் ஃபாவிசம் வரை (அபுனைவு)
52. பாரதி யார்? (சிறு புத்தகம்)
53. எதெல்லாம் பின்நவீனத்துவம்? (கட்டுரைகள்)
54. தலைப்பு நல்லதாகக் கிடைக்கவில்லை. நீங்களே ஏதாவது ரம்மியமான தலைப்பாக யோசித்து வைத்துவிடவும். நான் பிறகு பார்த்துக்கொள்கிறேன். சில படங்கள் மின்னஞ்சலில் நான் அனுப்பினேன் பார்த்தீர்களா? கருத்து சொல்லுங்கள். புகைப்படத் தொகுப்பும் போடலாமென உத்தேசம். எப்படி வசதி? மற்றவை போனில் – பேயோன். (கட்டுரைகள்)
55. ஏர்டெல் ஜூனியர் சூப்பர் சிங்கர் – சீசன் 1 (திரைக்கதை-வசனம்)
56. நீயா நானா (திரைக்கதை-வசனம்)
57. விசுவின் அரட்டை அரங்கம் (திரைக்கதை-வசனம்)
58. ஜெயா செய்திகள் (சிறுகதைகள்)
59. வங்க சினிமா (கட்டுரைகள்)
60. கனவுகளின் இரவு (நெகிழுரைகள்)
61. டின்னர் செட் முதல் வால் கிளாக் வரை: சமகால கிப்ட் ஐடியாக்கள் (சுயஉதவி நூல்)
62. ஆடவர் சுயஉதவி (சுயஉதவி நூல்)
63. கட்டுரைகள் (கட்டுரைகள் (கட்டுரைகள்)) (கட்டுரைகள்)
64. ஒவ்வொரு இசத்திற்கு ஒவ்வொரு கதை (சிறுகதைகள்)
65. சாப்ளின் என்னும் பிறவி (வாழ்க்கை வரலாறு)
66. ஜென் திருத்தலங்கள் (தல புராண தொகுப்பு)
67. சிதையளவு நெருப்பு (பத்தி தொகுப்பு)
68. மலையாள சினிமா (கட்டுரைகள்)
69. மீந்தவனின் விழிகள் (நெகிழுரைகள்)
70. சட்டத்தில் இடமிருக்கிறது (கட்டுரைகள்)
71. வளம் தரும் வாஸ்து (சுயஉதவி நூல்)
72. நியூமராலஜி: பெயரெழுத்துகளை மாற்றி நீங்களும்கூட கலக்கலாம் (சுயஉதவி நூல்)
73. அதையும்தான் பார்த்துவிடுவோமே! – @borehayயுடன் சில உரையாடல்கள்
74. தூரத்து சொந்தம் (திரைக்கதை-வசனம்)
75. நைஜீரியா: பணத்தோட்டம் (சுயஉதவி நூல்)
76. தமிழ் அறிவியல் நூல்களில் தற்செயலாக அமைந்த அடுக்குத் தொடர்கள் (ஆய்வு நூல்)
77. இந்திய வரலாறு: நீங்களும் எழுதலாம் அதை (சுயஉதவி நூல்)
78. நோக்கியா 2330 பயனர் கையேடு (சுயஉதவி நூல்)
79. இந்தா பிடி இன்னும் ஐம்பது (கவிதைகள்)
80. இரைப்பை நோய்களுக்கு சைக்ளோஸ்போரின் பயன்பாடு (அபுனைவு)
81. ரஷ்ய இலக்கியம் பேசுகிறேன் (கட்டுரைகள்)
82. எது எடுத்தாலும் இலக்கியம் (குறுநாவல்கள்)
83. பேயோனின் கேம்பிரிட்ஜ் மாணாக்கர் அகராதி (மொழியாக்கம்)
84. ஆஸ்கார் ஒயில்டு பொன்மொழிகள் (மொழியாக்கம்)
85. மறவன் புலவு: தமிழர் உணவுகள் (கட்டுரைகள்)
86. பாம்புத் தைலம் (கட்டுரைகள்)
87. 87 (நாவல்)
88. உயர்கவித்துவம் (கவிதைகள்)
89. நியான் ஹோலோகிராம் (அறிபுனை நாவல்)
90. கி.பி. எதிர்காலம் (அறிபுனை சிறுகதைகள்)
91. போடி உள்ளே!: தமிழ் சினிமாவில் பெண்கள் (ஆய்வு நூல்)
92. 108 உலக இலக்கிய நாவல்கள் (கட்டுரைகள்)
93. முன்னேறிடு சுயமே! (சுயமுன்னேற்ற நூல்)
94. சிற்பங்களின் இந்தியா (கட்டுரைகள்)
95. தீராத கப்பங்கள்: ஐ.டி. ரிட்டன்ஸ் செய்வது எப்படி (சுயஉதவி நூல்)
96. மை தீர்ந்த மனம் (கவிதைகள்)
97. பேயோனின் சண்டையும் சமாதானமும் (மொழியாக்கம்)
98. ரோடு போடும் கோடுகள் (கோட்டோவிய தொகுப்பு)
99. ஓ. ஹென்றி கதைகள் (மொழியாக்கம்)
100. அது ஒரு செவ்வாய்க்கிழமை (தூர்தர்ஷன் நாடகத் தொகுப்பு)
101. அங்கே என்ன சத்தம்?: மேலை இசை வடிவங்கள் (கட்டுரைகள்)
102. பேயோன் நாடகங்கள் (நாடகங்கள்)
103. கானலைத் தேடும் தண்ணீர்கள் (நெகிழுரைகள்)
104. பவர்பாயிண்ட் உங்கள் நண்பன் (சுயஉதவி நூல்)
105. சொற்களின் தலைநகரம் (கட்டுரைகள்)
106. ஓட்டல் துறை வேலைவாய்ப்புகள் (சுயஉதவி நூல்)
107. திசை காட்டிப் பறவை – 2
108. சிகரம் தொட்ட சிலபலர் (சுயமுன்னேற்ற நூல்)

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar